Sep 25, 2025 06:29 PM

’இரவின் விழிகள்’ பட இயக்குநரை புகழ்ந்து தள்ளிய கதாநாயகி!

’இரவின் விழிகள்’ பட இயக்குநரை புகழ்ந்து தள்ளிய கதாநாயகி!

மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’. இந்தப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க மற்றொரு  கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான ‘பங்காரா’ என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நீமா ரே இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் முக்கிய வேடங்களில்  நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

இந்த படத்திற்கு ஏ.எம் அசார் இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஒளிப்பதிவை கவனிக்க, ’விடுதலை’ படத்தின் படத்தொகுப்பாளர் ஆர்.ராமர் மற்றும் வெங்கடேஷ்  படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளனர். சண்டைப் பயிற்சியை சரவெடி சரவணன் மற்றும் சூப்பர்குட் ஜீவா ஆகியோரும், நடனத்தை எல்கே ஆண்டனியும் வடிவமைத்துள்ளனர். பாடல்களை அரவிந்த் அக்ரம் எழுதியுள்ளார்.

 

இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு, மு.களஞ்சியம், போஸ் வெங்கட், நடிகை நமீதாவின் கணவர் வீரா, நடிகை கோமல் சர்மா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

இந்த நிகழ்வில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் பேசுகையில், “படத்தின் தயாரிப்பாளர் மகேந்திரன் என் நண்பர். பலரிடம் இந்த கதையை  நான் சொல்வதை பார்த்த அவர், நானே இந்த படத்தை தயாரிக்கிறேன் என்று முன் வந்தார். முதல் கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு மேற்கொண்டு நகர்வதில் சிக்கல் எழுந்தது.. ஆனால் கதை பிடித்து இருந்ததால் பல சிரமங்களை ஏற்றுக்கொண்டு இந்த படத்தைத் தயாரித்தார்.  படத்தொகுப்பாளர் ராமர் படத்தொகுப்பை முடிந்தபின், படம் நன்றாக இருக்கிறது.. இன்னும் இரண்டு பாடல்களை சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். 

 

மக்களை திருப்திப்படுத்துவதையும் தாண்டி இங்கே வியாபாரம் என்று ஒன்று இருக்கிறது. தயாரிப்பாளரும் நஷ்டப்படக்கூடாது என்பதால் அதை தயாரிப்பாளரிடம் சொன்னேன். அவர் அதற்கு ஒப்புக்கொண்டார். அது மட்டுமல்ல, படத்தில் ஏற்கனவே எடுத்த கொஞ்சம் திருப்தி இல்லாத கிட்டத்தட்ட 12 நாள் எடுத்த காட்சிகளை தூக்கிவிட்டு புதிதாக எடுத்தோம். அந்த அளவுக்கு ஒத்துழைப்பு தந்தார்.

 

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் கூட பெண்களை அடக்கி ஒடுக்கி வைக்கவே முயற்சி செய்தார்கள். அதன்பிறகு சில அரசியல் கட்சிகள், முற்போக்கு சிந்தனையாளர்கள் வந்து அவற்றை மாற்றி அமைக்க முயற்சி செய்தார்கள். அதற்கான சட்டங்களும் கொண்டுவரப்பட்டன. ஆனாலும் இப்போது வரை பெண்களுக்கான அநீதியும் கொடுமைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதைக் கேட்கும்போதே மனது அதிர்கிறது. அதன் விளைவு தான் இந்த இரவின் விழிகள் படம். இந்த சமுதாயத்திற்கு நான் என்ன செய்ய வேண்டும், என்ன சொல்ல வேண்டும் என நினைத்தேனோ அதை தெளிவாகவும் தீர்க்கமாகவும் சொல்லி இருக்கிறேன்.

 

இசையமைப்பாளர் நான் என் மனதில் என்ன வேண்டும் என நினைக்கிறேனோ, அதை அழகான பாடல்களாகக் கொடுத்தார். ஏற்காடு பகுதியில் வாகனங்கள் கூட செல்ல முடியாத இடங்களில் படப்பிடிப்பை நடத்தினோம். ஒரு சண்டைக் காட்சியில் எண்பது அடி உயரத்திற்கு என்னை கம்பியில் கட்டி தூக்கியவர்கள், இரண்டு மூன்று நிமிடம் கீழே இறக்காமல் அந்தரத்திலேயே தொங்க விட்டு விட்டனர். அந்த சில நிமிடங்கள் கீழே பார்க்கும் போது மிகவும் திகிலாக இருந்தது” என்றார்.

 

சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் விஷ்ணு சரண் பேசுகையில், “இந்த படத்தில் நான் பாடியிருக்கும் பாடல் படத்தின் ஜானரை வெளியே இருப்பது போல கொஞ்சம் ஸ்டைலாக  இருக்கும். இசையமைப்பாளரைப் பொருத்தவரை ஒரு பாடலைப் பாடி ரெக்கார்டிங் செய்யும் வரை அவர் உட்காரவே மாட்டார்” என்றார்.

 

பாடலாசிரியர் அரவிந்த் அக்ரம் பேசுகையில், “இந்த படத்தில் ஐந்து பாடல்களை உருவாக்கியதில் எனக்கும் இயக்குநருக்கும் இசையமைப்பாளருக்கும் என ஐந்து விதமான பின்னணி கதைகள் இருக்கின்றன. என் பெயர் அக்ரம்... இசையமைப்பாளர் பெயர் அசார். ஆனால் நாங்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய முதல் பாடல் வாடா கருப்பா.. எப்படி எங்களை நம்பி இயக்குநர் இந்த பாடலைப் படைத்தார் என்பதே மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது” என்றார்.

 

இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசுகையில், “சமீபத்தில் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது.. நாங்களும் தமிழிலிருந்து ஆஸ்கார் போட்டிக்கு அனுப்பும் படங்களைப் பார்த்து தேர்வு செய்யும் வேலைகளில் தீவிரமாக இருந்தோம். ஆனாலும் இந்த வருடம் அங்கே போட்டியிட தமிழ் படம் எதுவும் தேர்வாகவில்லை என்பது வருத்தம். ஆனால் தெலுங்கு, கன்னட படங்கள் இடம்பெறுகின்றன. இங்கே தமிழ் படைப்பாளர்களிடம் கிரியேட்டிவிட்டி எங்கே போனது ? சிறிய படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு அவர்கள் படங்கள் எந்த திரையரங்குகளில் எந்த காட்சி ஓடுகிறது என்கிற தகவல் கூட தெரிவதில்லை. 

 

என்னுடைய பொன்னுமணி படம் வெளியான காலத்தில் கூடவே 16 படங்கள் வெளியாகின. அதில் 12 படங்கள் வெற்றி பெற்றன. அது போன்று ஒரு காலம் வேண்டும், திருப்பிக் கொண்டு வாருங்கள் என கோரிக்கை வைக்கிறோம். ரசிகர்கள் மொத்தமாக பல படங்களை பார்ப்பதற்கு வசதியாக வெளிநாடுகளில் இருப்பது போல சலுகைகளை திரையரங்கு உரிமையாளர்கள் அறிவியுங்கள்.

 

இப்போதும் பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லாத சூழல்தான் இருந்து கொண்டிருக்கிறது. அது பற்றி தான் இந்த படம் பேசுகிறது. படத் தயாரிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை படத்தின் பப்ளிசிட்டிக்கு இப்போது யாரும் கொடுப்பதில்லை. அதுவே மைனஸ் ஆக அமைந்து விடுகிறது. பல படங்கள் இசை வெளியீட்டு விழாவின்போது தான் இப்படி ஒரு படம் இருக்கிறதா? என்பதே தெரிய வருகிறது. படத்தை மோசமாக விமர்சிக்கிறார்கள் என வலைதளக்காரர்களை திட்டுகிறோம். தப்பாக கூட நம் படத்தைத்  திட்டுகிறார்களே என்று சந்தோஷப்படுங்கள். அதுவும் ஒரு பப்ளிசிட்டி தான்” என்றார்.

 

இசையமைப்பாளர் ஏ.எம் அசார் பேசுகையில், “இரவின் விழிகள் ஒரு அருமையான சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. ஐந்து பாடல்கள் ஐந்து விதமான ஜானரில் இருக்கும். அரவிந்த் அக்ரம் ஒரு முறை பாடல் எழுதிக் கொடுத்தார் என்றால் அதில் பெரும்பாலும் திருத்தமே இருக்காது. படத்தின் பாடல்களுக்கேற்ற விஷுவல்சும் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது” என்றார்.

 

நாயகி நீமா ரே பேசுகையில், “மிஸ்டர் பர்ஃபெக்க்ஷனிஸ்ட் என்று இயக்குநர் ராஜேஷை சொல்லலாம். படப்பிடிப்பில் அவருக்கு எடுத்த சில காட்சிகளில் திருப்தி இல்லை என்றால் படப்பிடிப்பு முடிந்து இரண்டு வாரம் கழித்துக் கூட என்னை அழைத்து சில காட்சிகளை ரீ ஷூட் செய்தார்.. அதன்பிறகு மீண்டும் ஒருமுறை அவரைத் தொடர்பு கொண்ட போது ஹீரோவான அவரது காட்சிகளே கொஞ்சம் திருப்தி இல்லை என்று அதை மீண்டும் எடுப்பதற்காக போய்க்கொண்டிருப்பதாகச் சொன்னார். இப்படி ஒவ்வொன்றிலும் பர்ஃபெக்ஷன் பார்த்து பார்த்து இரவின் விழிகள்  படத்தை உருவாக்கி இருக்கிறார். படப்பிடிப்பு சமயத்தில் இயக்குநரை பார்க்கும்போது எல்லாம் அந்நியன் படம் தான் ஞாபகத்திற்கு வரும். படப்பிடிப்புக்கு முன்பு அம்பி போலவும் படப்பிடிப்பு ஆரம்பித்ததும் அந்நியன் போலவும் மாறிவிடுவார்” என்றார்.

 

நடன இயக்குனர் எல்.கே அந்தோணி பேசுகையில், “முதலில் ஒரு பாடலுக்கு தான் இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். அந்த ஒரு பாடல் சிறப்பாக வந்திருப்பதை பார்த்துவிட்டு, நான்கு பாடல்களையும் என்னையே நடனம் அமைக்கச் சொல்லிவிட்டார்கள். நான் கேட்பதற்கு முன்பே எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார்கள். தயாரிப்பாளரே கதாநாயகனாகவும் நடித்திருப்பதால் அவரை ஆடவைப்பதற்கு எக்ஸ்ட்ராவாக சம்பளம் கொடுத்தார்கள்” என்றார்.

 

தயாரிப்பாளரும் நாயகனுமான மகேந்திரன் பேசுகையில், “வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்பதற்காகத்தான் என்னை அழைத்தார் இயக்குநர் ராஜேஷ். ஆனால் படத்தின் கதையைக் கேட்டதும் நானே தயாரிக்கிறேன் எனக் கூறிவிட்டேன். நீங்களே ஹீரோவாக நடியுங்கள் என்று கூறினார். நான் மறுத்தேன். ஆனால் நான் கஷ்டப்பட்டதை விட அவர் கஷ்டப்பட்டது தான் அதிகம். சில காட்சிகளில் திருப்தி வராவிட்டால் பத்து டேக் என்றாலும் விட மாட்டார். 

 

ஒரு நாள் காலை சாப்பாடு கூட சாப்பிட விடாமல் என்னை வைத்து காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார். மக்களுக்கு  விழிப்புணர்வு கொடுக்கும் விதமாகத்தான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ராஜேஷ் என்னிடம் இந்த கதையை சொல்லும்போது இந்த படம் ஒரு விதையாக விதைக்கப்பட்டு இருந்தது. அதை நான் செடியாக மாற்றி இருக்கிறேன். அதை மரமாக்கி அதில் உள்ள கருத்து என்கிற பழத்தை சாப்பிடுவதற்கு உறுதுணையாக இருக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

 

நடிகர் சிசர் மனோகர் பேசுகையில், “வெள்ளிமலை பகுதிக்கு படப்பிடிப்பிற்கு சென்றோம். 25 நாட்கள் எடுக்க வேண்டிய காட்சிகளை 15 நாட்களில் எடுத்து முடித்தார். அந்த அளவிற்கு இயக்குநர் யாரையும் உட்கார விடாமல் பம்பரமாக சுழல்வார். இந்த காலத்தில் பெண்களுக்கு தேவையான கருத்தை சொல்லும் விதமாக இந்தப்படம் உருவாகி இருக்கிறது” என்றார்.

 

நடிகை கோமல் சர்மா பேசுகையில், “உண்மையான சுதந்திரம் என்பது இளைஞர்கள் எல்லாமே சுதந்திரமாக பேசுவது என்று தான் நான் நம்புகிறேன். உங்கள் கண்களில் நாட்டின் எதிர்காலத்தை பார்க்கிறேன். உங்கள் இதயத்தில் இருக்கும் தீ, நம் ஊருக்கு மட்டும் வெளிச்சம் கொடுக்காமல் இந்த உலகத்திற்கே ஒரு வழிகாட்டியாக மாறணும். உலக வரலாற்றை எடுத்துப் பார்த்தால் ஒவ்வொரு புரட்சிகளிலும் இளைஞர்கள் தான் தோளோடு தோள் நின்று இருக்கிறார்கள். 

 

இன்றைய இளைஞர்களின் போர்க்களமே வேறு. அது துப்பாக்கியோ. வாளோ அல்ல.. ஒரு போஸ்ட்.. ஒரு ட்வீட்.. ரீல்ஸ் இவைதான். உங்கள் கையில் இருக்கும் செல்போன் ஒரு ஒளிகாட்டி.. வழிகாட்டி.. ஒரு சில ஃபாலோயர்களுக்காக உங்கள் வாழ்க்கையை அழித்து விடாதீர்கள். உங்கள் குரலை ஒரு நாட்டுக்காக காட்டுக்காக பயன்படுத்துங்கள். குரல் இல்லாத குழந்தைகளுக்கு குரலாக மாறுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கும் நதிகளுக்கு பயனுள்ளவர்களாக இருங்கள்.. சோசியல் மீடியாவில் வெறுப்பைக் காட்டினால் அது ஆயிரம் மடங்கு அதிகரிக்கும். நம்பிக்கை விதைத்தால் அது ஆயிரம் மடங்கு நம்பிக்கையை கொடுக்கும். புதிய இளைஞர்கள், வரும் தலைமுறைக்கும் வழிகாட்டியாக இருப்பீர்கள் என நம்புகிறேன்” என்றார்.

 

நடிகை நமீதாவின் கணவர் நடிகர் வீரா பேசுகையில், “நான் ஆந்திராவைச்  சேர்ந்தவன். ஆனாலும் தமிழ் மீது உள்ள காதலால் இங்கே வந்து குடியேறி விட்டேன். முன்பெல்லாம் அண்ணா, அக்கா என்று பாசத்தோடு இங்கே அழைத்தார்கள். இப்போது எல்லாமே ப்ரோ என்று மாறிவிட்டது. தமிழ்நாட்டில் கலாச்சாரமும் சினிமாவும் ஒரு முக்கிய அங்கமாக இருந்தன. உலகமே வியந்து பார்க்கும் விதமாக இருந்தது. இப்போது அதில் சின்ன தேக்கம் இருக்கிறது. அதற்குக் காரணம் நாம் தான்.. நான் முதலில் ஒரு சினிமாவுக்கு தயாரிப்பாளராக இருக்கலாம்.. ஆனால் இரண்டாவது சினிமாவிற்கு நான் ஒரு பார்வையாளன் தான்.

 

புஷ்பா, பாகுபலி மாதிரி படங்கள் வந்தால் தான் ரசிகர்கள் ரசிப்பார்களா என்றால்,  இல்லை. கடந்த வாரம் கூட தெலுங்கில் வெளியான சின்ன படங்கள் கூட மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இங்கே தமிழில் நாங்கள் படங்களை தவறாக எடுக்கிறோமா, ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடுகெட்ட தவறுகிறோமா என்பது தெரியவில்லை. இந்த படம் மிகுந்த சிரமத்துடன் மிக நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து ஆதரவை தாருங்கள்” என்றார்.

 

நடிகர் போஸ் வெங்கட் பேசுகையில், “இரவின் விழிகள் படம் ஊமை விழிகள் படம் போல வெற்றியடைய வேண்டும். அண்ணன் இயக்குநர் ஆர். வி உதயகுமார், பட ரிலீஸ் பற்றி பேசினார். ரிலீஸ் என்று சொன்னதுமே எல்லோரும் டக்கென திமுக பக்கம் தான் பார்வையைத் திருப்புவார்கள். ஒருவேளை ரெட் ஜெயண்ட் பற்றி அவர்கள் சொன்னார்கள் என்றால் அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் ரெட் ஜெயண்ட் படம் தயாரிக்கவில்லையா என்ன ? 

 

என்னுடைய படம் வெளியான போது முதல் வாரம் 200 தியேட்டர்களுக்கு மேல் இருந்தது.. அடுத்த வாரம் 150 தியேட்டர்.. ஆனால் மூன்றாவது வாரம் பல தியேட்டர்களில் என் படம் இல்லை.. 25 நாள் அல்லது 50 நாள் போஸ்டர் ஒட்டுவதற்காக ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று திரையரங்கு உரிமையாளர்களிடம் கேட்டேன். அந்த வகையில் இப்போது ஒரு படத்தின் ஆயுள் காலம் 10 லிருந்து 20 நாள் என மாறிவிட்டது. அதன் பிறகு ஓடிடி வந்து விட்டது.

 

சின்ன தயாரிப்பாளர்கள் தயவு செய்து படம் எடுக்க வரவேண்டாம் என விஷால் சொன்னபோது நான் தான் முதல் கண்டனக்  குரல் கொடுத்தேன். ஆனால் அவர் என்ன அர்த்தத்தில் சொல்லி இருக்கிறார் என்றால் கொஞ்சம் உஷாராக இருங்கள் என்று தான் சொல்லியிருக்கிறார். 

 

அதை அவர் சொல்லத் தெரியாமல் சொல்லிவிட்டார். அதனால் சில தயாரிப்பாளர்கள் ஓடியே விட்டார்கள் என்பதையும் மறுக்க முடியாது. ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவதற்கான வாய்ப்பை நாம் உருவாக்கித் தராதது நம் மீது உள்ள தவறுதான்.. அவர்கள் உள்ளே வருவதற்கு முக்கியமான ஒரு பாயிண்ட் இருக்க வேண்டும். ஜாதி படமாக இருந்தால் கூட அதை பார்ப்பதற்கான ஒரு கூட்டம் வருகிறார்கள். விருதுகளுக்கான படங்கள் எடுப்பது வேறு, ஸ்டார் படங்கள் என்பது வேறு. ஆனால் மற்ற படங்களுக்கு தியேட்டர்களையோ விநியோகஸ்தர்களையோ ரசிகர்களையோ குறை சொல்லவே முடியாது.

 

ஏற்கனவே ரிலீஸ் தேதியை திட்டமிட்டு விட்டு பெரிய படங்கள் வருகிறது என்பதால், நீங்கள் ஏன் பின்வாங்குகிறீர்கள்? பெரிய படம் தோற்றது இல்லையா ? பல நேரங்களில் பெரிய படம் தான் தோற்கிறது. ஏன் விட்டுக் கொடுக்கிறீர்கள் ? போராட வேண்டும். நீங்கள் விலகும் போது அவர்களுக்கு விளையாடுவதற்கு களம் கிடைக்கிறது .அதிக காட்சிகள் கிடைக்கிறது. உங்கள் வீடு, சொத்தை யார் பெயரிலாவது எழுதி வைப்பீர்களா ? அப்புறம் பல கோடி பணம் போட்டு எடுத்த படத்தை மட்டும் யாரோ ஒருவரிடம் எப்படி கொடுக்கிறீர்கள் ? சொந்தமாக ஏன் ரிலீஸ் செய்யத் தயங்குகிறீர்கள் ? அப்படி என்றால் வியாபாரம் கற்றுக் கொள்ளாமல் உள்ளே வந்திருக்கிறீர்கள். வியாபாரத்தை தெரிந்து கொண்டு வாருங்கள். அப்படி இல்லாமல் தோற்றுப் போய் விட்டேன் என்று அழுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

 

எனக்கு இப்போது டிஸ்ட்ரிபியூஷன் கற்றுக்கொள்ள ஆசையாக இருக்கிறது. விரைவில் அதில் இறங்கப் போகிறேன். அங்கே தான் எல்லா படங்களும் கடைசியாக பிரச்சனையில் வந்து நிற்கிறது. யாரிடமாவது படத்தை ரிலீஸ் செய்யக் கொடுத்துவிட்டு ஏன் கெஞ்ச வேண்டும்? இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்களே தங்கள் படங்களை சொந்தமாக ரிலீஸ் செய்ய வேண்டும்.. யார் பின்னாடியும் போக வேண்டாம்” என்றார்.

 

இயக்குநர் மு.களஞ்சியம் பேசுகையில், “நடிகர் போஸ் வெங்கட் பேசும்போது படம் ரிலீஸ் என்று வந்து விட்டால் எல்லோருமே திமுக பக்கம் தான் திரும்புகிறார்கள் என்று சொன்னார். ஒரு நிறுவனம் தாங்கள் வெளியிடும் படங்களே அதிக திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என தொடர்ந்து பார்த்துக் கொண்டால் நாங்கள் வேறு யார் பக்கம் திரும்ப வேண்டும்?

 

சின்ன படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. சமீபத்தில் வெளியான ஒரு படம் நன்றாக இருக்கிறது என விமர்சனம் வந்தது. ஆனால் எந்த திரையரங்கில் ஓடுகிறது என்றே தெரியவில்லை. படத்துறையை ஒழுங்கு படுத்துவதற்காக இருக்கக்கூடிய திரைப்பட சங்கங்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் இவர்கள் எல்லோரும் இதைப் பற்றி எப்போதுமே கவலைப்படுவது இல்லை.  அதற்கு காரணம் அரசியல். அவர்கள் கோபித்துக் கொள்வார்களோ, வருத்தப்படுவார்களோ என்கிற பயம்.

 

இன்னொரு பக்கம் பெரிய படம் வெளியாகும்போது அனைத்து திரையரங்குகளிலும் அந்த படத்தையே வெளியிட்டால் சின்ன படங்களுக்கு எப்படி இடம் கிடைக்கும் ? உண்மையிலேயே பொறுப்புணர்வோடும் மக்கள் குறித்த சிந்தனையோடும் சிறிய படங்கள் தான் எடுக்கப்படுகின்றன. பெரிய நடிகர்களின் படங்கள் அப்படி எந்த சமூக நோக்கத்திலும் எடுக்கப்படுவதில்லை. சொல்லப்போனால் சமூக சீரழிவுக்கு வித்திடுகின்றன. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் இணையதளம் மூலமாக அதிகமாக ஏமாற்றப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பதை பற்றித்தான் இந்த இரவின் விழிகள் படம் பேசுகிறது. 

 

அந்த இணையதளங்களின் பாதிப்பு தான் சினிமாவிற்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிறிய படங்களை திரையரங்குகளுக்கு கொண்டு வருவது என்பதே பண விரயம் என்பது போன்ற சூழ்நிலையைத் தான் தமிழ் சினிமா ஏற்படுத்தி வைத்திருக்கிறது.. ஆந்திராவில் எல்லாம் சினிமாவில் ஒரு ஒழுங்குமுறை இருக்கிறது. ஒரு பெரிய படம் வந்தால், கூடவே 10 சின்ன படங்களையும் ரிலீஸ் செய்ய வேண்டும் என எங்கள் இயக்குநர் சங்கம் மட்டும் தான் கவலைப்படுகிறது. ஆனால் அதை நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள் அதை செய்ய மறுக்கிறார்கள்” என்றார்

 

இயக்குநர் பேரரசு பேசுகையில், “இங்கே அதிமுக, திமுக, நாம் தமிழர், பாஜக என பல கட்சிகளை சேர்ந்தவர்கள் பேச வந்திருக்கிறோம். நாயகி நீமாரே இயக்குநரைப் போல மிமிக்கிரி செய்து பேசுவதைப்  பார்க்கும்போதே அவர் சிறந்த நடிகையாக இருக்கிறார் என்பது தெரிகிறது. சீமான் அண்ணன் பேச வேண்டியதை மு.களஞ்சியம் பேசிவிட்டார். இயக்குநர் சிக்கல் ராஜேஷ் என்னைப் போல ஊர் பாசம் கொண்டவர். அதனால் தான் தன்னுடைய ஊர் பெயரையும் சேர்த்து வைத்துக் கொண்டார்.

 

பெண்கள் ஆண்களுக்கு நிகராக வந்து விட்டார்கள், புரட்சிப் பெண் என்றெல்லாம் சொல்கிறோம். ஆனால் இன்று அவர்களை விட மிக மோசமான நிலையில் வேறு யாருமில்லை.. அது குறித்த விழிப்புணர்வை இந்த படம் சொல்ல வருகிறது. இன்று படம் எடுப்பது பெரிய விஷயமில்லை. அதை ரிலீஸ் செய்வது தான் கஷ்டமாக இருக்கிறது. இன்றைக்கு சினிமாவில் உள்ள மிகப்பெரிய இடர்ப்பாடு இதுதான். திரைப்படத்தை ரிலீஸ் செய்வது தான் முதல் வெற்றியாக இருக்கிறது. அன்று இந்த சினிமா நன்றாக இருக்க வேண்டுமென அனைவருமே நினைத்தார்கள். ஆனால் இன்று என் படம் மட்டுமே ஓட வேண்டும், நான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என பலரும் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். 

 

இன்னொரு தயாரிப்பாளரின் படத்திற்கு திரையரங்குகள் கொடுக்க வேண்டுமே என அவர்கள் நினைப்பது இல்லை. அந்த வகையில் இன்று சினிமாவை அழிப்பது சுயநலம் தான்/ அப்படி நினைத்தால் ஒரு காலகட்டத்தில் சினிமாவும் அழிந்து இந்த சுயநலத்தில் இருப்பவர்களும் அழிந்து போவார்கள். முன்பெல்லாம் படம் பார்க்கும் ரசிகர்கள், சில முக்கியமான பத்திரிகைகளில் வெளியாகும் விமர்சனங்களுக்காக காத்திருந்து அதை படித்துவிட்டு படம் பார்க்க சென்றார்கள். 

 

விமர்சனம் வரவில்லை என்றால் போன் போட்டுக் கேட்டார்கள். ஆனால் இன்று ஒரு சிலர் செய்யும் விமர்சனங்களை பார்க்கும்போது ஏன் தான் இவர்கள் இப்படி விமர்சனம் பண்ணுகிறார்கள் என தோன்றுகிறது. வன்மத்தைக் கக்குகிறார்கள். அப்படிப்பட்டவர்களின் விமர்சனத்தை தான் இன்றைய ரசிகர்களின் மன நிலையும் நம்புகிறது. யாரையாவது திட்டினால் தான் அவர்களுக்கு சந்தோசமாக இருக்கிறது. பாசிட்டிவாக சொன்னால் அதை ஒதுக்கி விடுகிறார்கள்.

 

சின்ன படம் ஓட வேண்டும் என நினைப்பவர்கள் அனைவருமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஒரு நல்ல படம் வெளியானால் அந்த படக்குழுவினரை தன் வீட்டிற்கே வரவழைத்து வாழ்த்துகிறார். இன்றைக்கு அப்படிப்பட்ட மனம் வேறு யாரிடம் இருக்கிறது? ரஜினி சாரே நன்றாக இருக்கிறது என சொல்லிவிட்டார் என்பதற்காக பல பேர் அந்த படத்தை பார்க்கிறார்கள். அந்த வகையில் ஒரு சிறிய பட வெற்றிக்கு சூப்பர் ஸ்டார் உதவி செய்கிறார். ஏனென்றால் அவர் சினிமா நன்றாக இருக்க வேண்டுமென நினைப்பவர்.

அவருடைய ஒரு பட வெற்றி விழாவில் இயக்குநர் சேரன் படத்தைப் பாராட்டி அவருக்கு தங்கச்சங்கிலி போட்டு பரிசளிக்கிறார். எந்த ஹீரோவுக்கு இப்படி ஒரு மனசு வரும்..? அதே போல இப்போது இருக்கும் பெரிய ஹீரோக்கள், உங்களுக்குப் பிடித்த சின்ன படங்கள் இருந்தால், அது நன்றாக இருந்தால் தாராளமாக மனது விட்டு பாராட்டுங்கள்..” என்றார்.