Nov 12, 2019 04:37 PM

தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்க வரும் ‘பச்சை விளக்கு’

தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்க வரும் ‘பச்சை விளக்கு’

காதலோடு, சமூகத்திற்கான விழிப்புணர்வு படமாக உருவாகியுள்ள ‘பச்சை விளக்கு’ திரைப்படம் இந்திய சினிமாவே சொல்லாத ஒரு விஷயத்தை சொல்லி, தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்க வருகிறது.

 

1964 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான படம் ‘பச்சை விளக்கு’. அதே பெயரில் 55 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள இப்படமும் தமிழ் சினிமாவில் தனி முத்திரைப் பதிக்கும் என்பது இப்படத்தின் கதைக்களமே சொல்லிவிடுகிறது.

 

இதுவரை இந்திய சினிமாவில் சொல்லாத சாலை பாதுகாப்பை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம், காதல் மோகத்தால் பலியாகும் இளம் பெண்களுக்கு மட்டும் இல்லாமல், சாலை விபத்து மற்றும் அதனால் ஏற்படும் உயிர் பலியை தடுப்பதற்கான ஒரு பாடமாகவும் உருவாகியுள்ளது.

 

’அம்மணி’ புகழ் மகேஷ், டாக்டர் மாறன் இருவரும் ஹீரோக்களாக நடித்திருக்கும் இப்படத்தில், தீஷா, தாரா என்ற புதுமுகங்கள் ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள். கன்னட திரையுலகின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான ரூபிகா முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க, மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, ’மெட்ராஸ்’ புகழ் நந்து, நாஞ்சில் விஜயன், க்ரிஷ், மடிப்பாக்கம் சுரேஷ், ராதா, நடன இயக்குநர் சிவசங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

இப்படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடிப்பதோடு, இப்படத்தின் கதை எழுதி இயக்குநராகவும் டாக்டர்.மாறன் அறிமுகமாகிறார்.

 

படம் குறித்து கூறிய இயக்குநர் மாறன், ”இன்று நாட்டில் கொடிய நோய்களால் ஏற்படும் மரணங்களுக்கு இணையாக சாலை விபத்துக்களினாலும் மரணங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க இந்திய அரசும், தமிழக அரசும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், திட்டங்களையும் மேற்கொண்டாலும், அதை மக்கள் சரியான முறையில் கடைபிடிக்காமல் இருப்பதே சாலை விபத்துக்களின் முக்கிய காரணங்களாகும்.

 

சாலை விபத்துக்களை தடுக்க உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், இதற்கான விழிப்புணர்வில் மக்கள் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. அப்படிப்பட்ட மக்களுக்கு சாலை பாதுகாப்பு என்றால் என்ன, அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன, சாலை பாதுகாப்பில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள என்ன செய்ய வேண்டும், போன்றவற்றை விளக்குவதோடு, சாலை பாதுகாப்பு குறித்து மக்கள் அறியாத பல விஷயங்களை படத்தில் சொல்லியிருக்கிறோம்.

 

சாலை விபத்தை மையமாக வைத்து பல படங்கள் வெளியானாலும், சாலை பாதுகாப்பு குறித்து பேசும் முதல் இந்திய திரைப்படம் ‘பச்சை விளக்கு’ தான், இதை எங்கு வேண்டுமானாலும் நான் தைரியமாக சொல்வேன்.

 

இப்படி சமூகத்திற்கு கருத்து சொல்லுவதால், ஏதோ பாடம் எடுப்போம் என்று நினைக்க வேண்டாம், ஒரு பக்கம் இளைஞர்களுக்கான காதலோடும், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி பேசும் படம், மறுபக்கம் சாலை பாதுகாப்பு குறித்து பொழுதுபோக்கு அம்சங்களோடு பேசும்.” என்றார்.

 

Pachai Vilakku

 

‘மண்ணுக்குள் வைரம்’, ‘வேதம் புதிது’, ‘கனம் கோட்டார் அவர்களே’, ‘காலையும் நீயே மாலையும் நீயே’, ‘மேளம் கொட்டு தாலிக்கட்டு’, ‘உழைத்து வாழ வேண்டும்’ உட்பட ஏராளமான தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ள, இசையமைப்பாளர் ‘வேதம் புதிது’ தேவேந்திரன், கடந்த பத்து ஆண்டுகளாக தெலுங்கு மற்றும் கன்னட படங்களுக்கு இசையமைத்து வந்தார்.

 

இப்போது ‘பச்சை விளக்கு’  படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். பழனிபாரதி, விஜய்சாகர், டாக்டர் மாறன், டாக்டர் கிருதயா ஆகியோர் பாடல்கள் எழுத, சிவசங்கர், சந்திரிக்கா புஜிதோஷ் இருவரும் நடனம் அமைத்துள்ளனர்.

 

தற்போது முழு படத்தையும் முடித்துவிட்டு, டிசம்பர் மாதம் படத்தை வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர் மாறனின், இத்தகைய முயற்சியை தற்போது பத்திரிகைகள் பாராட்டி வரும் நிலையில், படம் வெளியான பிறகு தமிழ் சினிமா மட்டும் இன்றி தமிழக அரசும் பாராட்டும் என்பது உறுதி.