Jan 30, 2026 10:57 AM

தொடரும் ‘சிறை’ படத்தின் சாதனை! - ஓடிடி தளத்தில் 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது

தொடரும் ‘சிறை’ படத்தின் சாதனை! - ஓடிடி தளத்தில் 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமார் இயக்கத்தில், விக்ரம் பிரபு, அறிமுக நடிகர் எல்.கே.அக்‌ஷய் குமார் ஆகியோரது நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘சிறை’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

 

சிறு முதலீட்டில் மிகப்பெரிய லாபம் ஈட்டிய திரைப்படம் என்ற பெருமையை பெற்ற ‘சிறை’-யின் சாதனை தற்போது ஓடிடி தளத்திலும் தொடர்கிறது. சமீபத்தில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் மிகக் குறுகிய காலத்திலேயே 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது. 

 

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட அதன் ஆழமான கதைக்களம், வலுவான நடிப்புகள் மற்றும் உணர்வுபூர்வமான உருவாக்கம் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.  ‘டாணாக்காரன்’ திரைப்படத்தின் இயக்குநர் தமிழ் தனது உண்மை வாழ்க்கை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணமே ’சிறை’ படத்தின் மையம். அதிகாரம், மனிதநேயம், மனசாட்சியின் போராட்டம் ஆகியவற்றை மையமாக வைத்து நகரும் இந்த கதை, ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களை உணர்வுப்பூர்வமாக ஈர்க்கிறது. நாயகனாக விக்ரம் பிரபு நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை அனந்தா நடித்துள்ளார். மேலும் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் LK அக்‌ஷய் குமார் இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார்.

 

இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவும், பிலோமின் ராஜ் எடிட்டிங்கும் படத்திற்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது. ஸ்டண்ட் காட்சிகளை பிரபு வடிவமைத்துள்ளார்.

 

திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாகவே இப்படத்தின் சேட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகளை ஜீ நிறுவனம் கைப்பற்றிய நிலையில், ஜீ5 இல் வெளியானதும் ’சிறை’ திரைப்படம் பார்வையாளர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றது. சமூக வலைதளங்களில் வலுவான விமர்சனங்களும், பாராட்டுகளும் குவிந்ததன் விளைவாக, படம் 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

 

மண் சார்ந்த உண்மைக் கதைகளை தரமான உருவாக்கத்துடன் வழங்கும் ஜீ5 தமிழ், தொடர்ந்து இப்படிப்பட்ட வித்தியாசமான படைப்புகளை தமிழ்  பார்வையாளர்களுக்காக பிரத்தியேகமாக கொண்டு வருகிறது. அந்த வரிசையில் “சிறை” திரைப்படம், தமிழ்த் திரையுலகின் முக்கியமான ஓடிடி சாதனைகளில் ஒன்றாக தன்னை பதிவு செய்துள்ளது.