முதல் பார்வையை வெளியிட்ட ’அச்சுத அவதாரம்’ படக்குழு!
நவீன சைபர் குற்றத் த்ரில்லர் அம்சங்களையும், பாரம்பரிய உணர்வுகளையும் இணைக்கும் விதமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘அச்சுத அவதாரம்’. கன்னடம் மற்றும் தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் பெங்களூரை சேர்ந்த புனித் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
உலகளாவிய சைபர் மோசடிகளின் இருண்ட உலகத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இப்படத்தின் கதைப்படி, கேரளாவின் காசர்கோடு பகுதியில் உள்ள ஒரு சிறிய, பாரம்பரிய கிராமத்தின் பின்னணியையும், உயர் தொழில்நுட்ப குற்ற உலகத்தையும், ஆழமான உள்ளூர் கலாச்சாரம் மற்றும் உணர்ச்சிகளையும் இணைக்கிறது. இந்தப் படம் ஒரு கலாச்சார சங்கம முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
மலையாள சினிமா பிரபலம் மாளவிகா நந்தன், அவினாஷ், சீமா ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குநர் புனித் கூறுகையில், “அந்த பகுதியின் கலாச்சாரத்தை நகலெடுக்க முயலவில்லை. குழுவினர் பல மாதங்கள் காசரகோடில் தங்கி, அங்குள்ள வாழ்க்கையை கவனித்து, கேட்டறிந்து, அந்த இடமே கதையை வடிவமைக்க அனுமதித்தனர்.
மொழி சவால்களையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர்; கதைதான் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது.” என்றார்.
ஹைப்பர் லிங் பாணியில் கதை சொல்லல் முறையை கையாண்டிருக்கும் இப்படத்திற்கு விருது பெற்ற ஆனந்த் மீனாக்ஷி ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா குமார்.எம்.எஸ் இசையமைக்கிறார். பவன் பூவையா படத்தொகுப்பு செய்ய, நாகராஜு & நவீன் கலை இயக்குநர்களாக பணியாற்றுகிறார்கள். ஹரிஷ் மோகனன் பாடல்கள் எழுதுகிறார்.
படத் தயாரிப்பின் ஆரம்ப கட்டங்களில் பல சவால்களை சந்தித்த பிறகு, தன் மனதில் இருந்த கதையை எந்த சமரசமும் இல்லாமல் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் கதை மற்றும் திரைக்கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் புனித், வித்தியாசமான சைபர் கிரைம் படத்தை கொடுக்க அதிகம் மெனக்கெட்டு வருகிறார்.
படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகளில் தீவிரம் காட்டி வரும் படக்குழு படத்தை மே மாதத்தில் திரையரங்குகளில் மிகப்பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

