Jan 10, 2020 09:19 AM

‘வலிமை’ கதை எதைப் பற்றியது தெரியுமா?

‘வலிமை’ கதை எதைப் பற்றியது தெரியுமா?

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘வலிமை’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், அப்படத்தின் கதை எதைப் பற்றியது என்பது தான் யாரும் அறியாத ஒன்றாக இருக்கிறது.

 

‘விஸ்வாசம்’ போல் பாசமுள்ள தந்தையாக நடிக்கும் அஜித், அதிரடி போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. அதே சமயம், படத்தில் பைக் சாகச காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் இருப்பதாக கூறப்பட்டதோடு, இதற்காக ஹாலிவுட் பைக் ஸ்டண்ட் கலைஞர் ஒருவரையும் படத்தில் நடிக்க வைப்பதாகவும் கூறப்பட்டது.

 

இந்த நிலையில், ‘வலிமை’ படத்தின் கதை எதைப் பற்றியது என்ற தகவல் கசிந்துள்ளது. அதாவது, கடந்த வருடம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சிலை கடத்தல் வழக்கை மையமாக வைத்து தான் இயக்குநர் வினோத், ‘வலிமை’ படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறாராம்.

 

காவல் துறை பொன்மாணிக்கவேல் தலைமையில், களம் இறங்கிய போலீஸார், தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட பல பழங்காலத்து சிலைகளை மீட்டதோடு, அதன் பின்னணியில் இருப்பவர்களையும் கைது செய்தனர். இந்த சம்பவம் பற்றி தான் ‘வலிமை’ படம் பேசப்போவதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

 

Director Vinoth

 

ஏற்கனவே, காவல் துறை சார்ந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து வினோத் இயக்கிய ‘தீரன் அதிகாரம் ஒன்று’ வெற்றிபெற்ற நிலையில், மீண்டும் அதே காவல் துறையில் நடந்த உண்மை சம்பவத்தை இயக்குநர் வினோத் கையில் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.