Feb 11, 2019 05:37 AM

சின்னத்திரை உதவி இயக்குநர்கள் உண்ணாவிரதம்! - பாக்யராஜ் ஆதரவு

சின்னத்திரை உதவி இயக்குநர்கள் உண்ணாவிரதம்! - பாக்யராஜ் ஆதரவு

சம்பளம் நிர்ணயம் செய்வதை வலியுறுத்தி சின்னத்திரை உதவி இயக்குநர்கள் சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள். இந்த உண்ணாவிரதத்திற்கு பிரபல இயக்குநர்கள் பலர் ஆதரவு தெரிவித்த நிலையில், இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜும் ஆதரவு தெரிவித்தார்.

 

இது குறித்து கூறிய கே.பாக்யராஜ், “உதவி இயக்குநர்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது இயக்குநர்கள் தான். எங்களுக்கு உதவி இயக்குநர்கள் தேவை என்று இயக்குநர்கள் தான் பேசி புரிய வைக்க வேண்டும். ஒரு தொடருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சம், ரூ.1.5 லட்சம் என்று கொடுக்கிறார்கள். சில தொடர்களுக்கு ரூ.75 ஆயிரம் கூட பெற்று கொண்டு எடுக்கிறார்கள். ஆகையால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இதற்கு என்னால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வேன்.

 

வெள்ளித்திரையாக இருந்தாலும் சரி சின்னத்திரையாக இருந்தாலும் சரி ஒரு சிலருக்கு தான் மார்க்கெட் இருக்கிறது. அப்படி மார்க்கெட் இருக்கிறவர்கள் தங்களுடைய உதவி இயக்குநர்களுக்கு ஒரு கணிசமான தொகையை அளிக்க வேண்டும். இந்த தொகையை வைத்துக் கொண்டு அவர்கள் ஒரு சிறிய வீடு கூட கட்ட முடியாது. உங்களுக்கு வரும் வருமானத்தைக் கொண்டு கார் வாங்க முடியாது, ஒரு சிறிய இரண்டு சக்கர வாகனம் வாங்கி மகிழ்வதற்கு ஏற்ற வகையில் ஊதியம் கொடுக்க வேண்டும். எவ்வளவு ஊதியம் பெறுகிறார்கள் என்று தெரியாமல் இருப்பது வருத்தத்திற்குரியது. சின்னத்திரை உதவி இயக்குநர்களுக்கு சம்பள நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

 

இந்த அடையாள உண்ணாவிரதம் யாருக்கும் எதிரானது அல்ல. எங்களுடைய கஷ்டத்தை எல்லோருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே நடத்தப்படுகிறது. நான் இதற்கு உறுதுணையாக இருப்பேன்.” என்று தெரிவித்துள்ளார்.

 

இந்த உண்ணாவிரதத்திற்கு முன்னாள் பெப்ஸி தலைவர் நடராஜ், ராதாரவி, இயக்குநர்  கே.எஸ்.ரவிகுமார், சினி மியூசிக் யூனியன் தலைவர் தீனா, தயாரிப்பாளர் கே.ராஜன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் உண்ணாவிரதத்தை நிறைவு செய்துவைத்தார்.

 

Hunger Strike

 

சின்னத்திரை இயக்குநர்கள் சங்க தலைவர் தளபதி முன்னிலையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் செயலாளர் சி.ரங்கநாதன், பொருளாளர் எம்.கே.அருந்தவராஜா, துணை தலைவர்கள் பி.நித்தியானந்தம், அறந்தாங்கி சங்கர், இணை செயலாளர்கள் டி.ஆர்.விஜயன், எஸ்.கிஷ்ணப்பர் அலிகான் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள் கலந்துக் கொண்டார்கள்.