Dec 22, 2017 08:21 AM

விஷாலால் தான் ‘உள்குத்து’ ரிலிஸாகிறது - தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!

விஷாலால் தான் ‘உள்குத்து’ ரிலிஸாகிறது - தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!

பி.கே.பிலிம் பேக்டரி சார்பில் ஜி.விட்டல் குமார் தயாரிப்பில் கார்த்திக் ராஜு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘உள்குத்து’. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் தினேஷ், நந்திதா ‘அட்டகத்தி’ படத்திற்கு பிறகு மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளார்கள்.

 

படம் தயாராகி சில பிரச்சினைகளினால் நீண்ட நாட்களாக வெளியாகமல் இருந்த நிலையில், தற்போது அனைத்து பிரச்சினைகளும் முடிவடைந்ததால், 29 ஆம் தேதி வெளியாகிறது. இதைத் தொடர்ந்து நேற்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய ஹீரோ தினேஷ், “நீண்ட நாட்களுக்கு பிறகு நான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் வெளியாகிறது. வாழ்க்கை எனக்கு இந்த இடைவெளியில் நிறைய விஷயங்களை எனக்கு கற்றுதந்துள்ளது. எனக்கு நெருக்கமாக இருந்த சிலர் தூரமாக சென்றுள்ளனர். தூரமாக இருந்த சிலர் இன்று எனக்கு நெருக்கமாக உள்ளனர். கபாலி படத்துக்கு பிறகு இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.” என்றார்.

 

தயாரிப்பாளர் விட்டல் குமார் பேசுகையில், “உள்குத்து திரைப்படம் வெளியாவதற்கு முக்கியமான காரணம் கடவுளும் , விஷால் சாரும் தான். கடவுளுக்கு நன்றி விஷால் சாருக்கு நன்றி. படம் வெளியாகுமா என்ற நிலை இருந்த போது விஷால் சார் தலையிட்டு தன்னுடைய படத்தை போல் நினைத்து இப்படத்தை வெளியிட்டு தந்துள்ளார். நான் இந்த படத்தை வெளியிடுவதற்கு இன்னொரு முக்கிய காரணம் என்னுடைய மனைவி தான். அவர் தான் எனக்கு ஊக்கம் தந்து இப்படத்தை வெளியிட எனக்கு உதவியுள்ளார். 

 

படத்தை தயாரிப்பாளரிடம் இருந்து வாங்கி நான் வெளியிடுகிறேன். அவருடைய சூழ்நிலையால் அவரால் இப்படத்தை வெளியிட முடியவில்லை. இந்த படத்தை ‘திருடன் போலீஸ்’ படத்தை இயக்கிய கார்த்திக்ராஜு இயக்கியுள்ளார். படத்தில் அட்டகத்தியில் நடித்த தினேஷ் கதாநாயகனாகவும்,  நந்திதா கதாநாயகியாகவும், காமெடியனாக பாலசரவணன், சூப்பர் சுப்புராயன் அவர்களின் மகன் திலீப் சுப்புராயன் முக்கிய வில்லனாகவும், ஜான் விஜய், சாயாசிங்க் ஆகியோர் நடித்துள்ளார்கள். ஜஸ்டின் இசை அமைத்து, வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

 

உள்குத்து படமானது தற்போதைய நாட்டின் நிலைமையை எடுத்துக்கூறும் படமாக இருக்கும். ஐம்பதாயிரம் சம்பாதிப்பவர்களில் இருந்து ஒரு லட்சம் சம்பாதிப்பவர்கள் வரை தன் செலவுக்கு அவை பத்துவதில்லை எனவே வெளியில் கடன் வாங்குவார்கள் வட்டி கட்டுவார்கள், இது எல்லா இடத்திலும் காணப்படும் உண்மை. அப்படி கடன் வாங்குபவர்கள் எப்படி அதை சமாளிப்பார்கள் அதில் முக்கியமாக இந்த வட்டி கட்டும் பிரச்சனையில் மீனவர்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பதே இந்த படதின் கதை. நாகர்கோவில், முட்டம், கம்பம் ஆகிய இடங்களில் உள்குத்துவின் பட பிடிப்பானது நடைபெற்றது. ஒரு நாளுக்கு ஒரு குடும்பம் கந்து வட்டியால் பாதிப்பு அடைகிறது. அதில் ஒரு குடும்பம் எப்படி கடனால் பாதிக்கப்பட்டு அதை எப்படி சமாளித்து அதிலிருந்து மீண்டு வருகிறார்கள் என்பது படத்தின் கரு. இது கந்து வட்டி பற்றி அழுத்தமான கருத்து சொல்லும் படம். உள்குத்து படத்தை இயக்குநர் சொன்ன நேரத்தில் அழகாக முடித்து கொடுத்துவிட்டார். பாலசரவணன் படத்தில் மீன் பிடித்து அதை சந்தையில் விற்பனை செய்பவராகவும், அவருக்கு உதவியாளராக தினேஷ் நடித்துள்ளார். பாலசரவணனின் தங்கையாக நந்திதா நடித்துள்ளார் இவர்களை சுற்றி தான் படம் பயணமாகிறது. நான் தயாரிக்கும் முதல் படம் உள்குத்து. இயக்குநர் இப்படத்தின் கதையை சொன்னதும் பிடித்து விட்டது. 

 

சமீபத்தில் வெளிவந்த ஜோக்கர், அருவி போன்ற சிறிய படங்கள் பெரிய படங்களை தாண்டி நின்றதற்கு காரணம் படம் பார்க்கும் மக்களை ஈர்த்துள்ளது. அந்த வரிசையில் உள்குத்து படம் கண்டிப்பாக இருக்கும். இது வரைக்கும் நடித்த படங்களில் இருந்து தன்னை மாறுபடுத்தி காட்டியுள்ளார் தினேஷ். படத்தின் முக்கிய வில்லனாக நடித்துள்ள திலீப் சுப்புராயன் சண்டை பயிற்சி அளித்துள்ளார். படத்தில் மொத்தம் எட்டு சண்டைகள் உள்ளது. அனைத்துமே பார்ப்பவர்களுக்கு நேரடியாக பார்ப்பது போன்ற உணர்வை தரும். எந்த ஒரு நல்ல விஷயத்தையும், தீய சக்தியால் கட்டுப்படுத்த முடியாது. சில சூழ்நிலையால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது கடவுளின் அருளால் வரும் டிசம்பர் 29 ஆம் தேதி கண்டிப்பாக ‘உள்குத்து’ வெளியாகும்.” என்றார்.