Mar 27, 2023 09:05 AM

உச்ச நடிகர்களின் படங்களுக்கு நிகரான ‘விடுதலை’ வியாபாரம்! - உற்சாகத்தில் நடிகர் சூரி

உச்ச நடிகர்களின் படங்களுக்கு நிகரான ‘விடுதலை’ வியாபாரம்! - உற்சாகத்தில் நடிகர் சூரி

வெற்றிமாறன் இயக்கத்தில் கதையின் நாயகனாக சூரி நடித்திருக்கும் ‘விடுதலை’ படத்தில் விஜய் சேதுபதி வாத்தியார் வேடத்தில் நடித்திருக்கிறார். ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட்குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

 

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள ‘விடுதலை’ திரைப்படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், ரஜினி, விஜய், அஜித் போன்ற உச்ச நடிகர்களின் படங்களுக்கு நிகராக வியபாரம் நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

பொதுவாக திரையரங்குகளில் ஒரு படத்தை திரையிடும் போது மால்களில் இருக்கும் திரையரங்குகளில் 55 -45 என்றும் மற்ற திரையரங்குகளில் 55-45 அல்லது 60 -40  என்று படத்திற்கு ஏற்றவாறு தயாரிப்பாளருக்கும், திரையரங்கு உரிமையாளருக்கும் இடையே ஒப்பந்தம் போடப்படும். அதாவது நுழைவுச்சீட்டு விலை ரூ.100 என்று வைத்துக் கொண்டால் அதில் திரையரங்குக்காரர்களுக்கு ரூ.40, தயாரிப்பாளருக்கு ரூ.60 என்பது கணக்கு.

 

ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்கள் படம் வரும்போது பெருநிறுவன அரங்குகளில் 55 -45 என்றும் மற்ற அரங்குகளில் 70 -30 என்று ஒப்பந்தம் போடுவார்கள். இப்போது விடுதலை படத்துக்கும் 70 -30 என்று ஒப்பந்தம் போட்டுக்கொண்டிருக்கிறார்களாம்.

 

திரையரங்குகளைப் பொறுத்தவரை கதாநாயகர்களை மட்டுமே முதன்மையாகக் கணக்கில் எடுப்பார்கள். இயக்குநர்கள் அதற்கடுத்து தான். அந்த வகையில் பார்த்தால் ’விடுதலை’ படத்தின் கதைநாயகன் சூரிதான். அப்படித்தான் அனைத்து விளம்பரங்களும் செய்யப்படுகின்றன.

 

அதனால், சூரி கதைநாயகனாக நடிக்கும் முதல் படத்துக்கே 70 சதவீதம் தயாரிப்பாளருக்குப் பங்கு கொடுக்க திரையரங்குகள் ஒப்புக்கொண்டிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

கதாநாயகனாக நடிக்கும் தனது முதல் படத்திற்கு இப்படி ஒரு அங்கீகாரம் கிடைத்திருப்பதால் நடிகர் சூரி உற்சாகமடைந்திருக்கிறார்.