கொரோனா பாதிப்பு! - தமிழக அரசை ஓரம் கட்ட விஜய் போட்ட திட்டம்

கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையால் நாட்டு மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். குறிப்பாக தினக்கூலி பெறும் தொழிலாளர்களின் நிலை மிக மோசமாக உள்ளது. இதற்காக அரசு நிவாரண நிதி வழங்கி வருவதோடு, சில அமைப்புகளும் ஏழை எளியோருக்கு உதவி செய்து வருகிறார்கள்.
அதேபோல், மத்திய அரசும், மாநில அரசும் மக்களிடம் நிதி பெறுவதற்காக கொரோனா பிரதமர் நிவாரண நிதி மற்றும் கொரோனா முதலமைச்சர் நிவாரண நிதியை உருவாக்கி அதன் மூலம் நிதி பெற்று வருகிறது. பல்வேறு துறையை சார்ந்தவர்கள், நிதி வழங்கி வருகிறார்கள். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கியிருக்கிறார். அதேபோல், தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பலர் நிதி வழங்கி வருகிறார்கள். நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.
ஆனால், முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்டவர்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை நிதி வழங்கவில்லை. அதுமட்டும் இன்றி, பல நடிகர்கள் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் பெப்ஸி அமைப்புக்கு நிதி வழங்கிய நிலையில் விஜய், அஜித் ஆகியோர் இதுவரை பெப்ஸி அமைப்புக்கு எந்த ஒரு நன்கொடையும் வழங்கவில்லை. இதனால், விஜய், அஜித் ஆகியோரை பலர் விமர்சித்தும் வருகிறார்கள்.
இந்த நிலையில், கொரோனா முன் எச்சரிக்கையால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு உதவி செய்ய விஜய் திட்டம் ஒன்றை வகுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, மத்திய மற்றும் மாநில அரசுகள் தனக்கு தொல்லைக் கொடுக்கும் விதமாக வருமான வரித்துறை சோதனையை ஏவி விட்டதால் பெரும் கோபத்தில் இருக்கும் விஜய், மத்திய மற்றும் மாநில அரசுகள் மூலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யக் கூடாது, என்று முடிவு எடுத்திருக்கிறாராம்.
அதே சமயம், ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த பிறகு தனது மக்கள் இயக்கம் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவி செய்யும் திட்டம் ஒன்றையும் விஜய் வகுத்துள்ளாராம். இதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள தனது மக்கள் இயக்க அமைப்புகளை தயார்ப்படுத்தும் பணிகளையும் முடக்கி விட்டிருப்பதாக கூறப்படுகிறது.