Oct 19, 2019 05:52 AM

விவசாயிகளுக்கு கட்டிடம் கட்டிக் கொடுத்த விஜய் சேதுபதி!

விவசாயிகளுக்கு கட்டிடம் கட்டிக் கொடுத்த விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடிப்பில், எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லாபம்’ படம் விவசாயம் மற்றும் அதில் இருக்கும் அரசியலைப் பற்றி பேசும் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை விஜய் சேதுபதியின், விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும், 7CS எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

 

இப்படத்தின் படப்பிடிப்பிற்காக விவசாய சங்க கட்டிடம் ஒன்று தேவைப்பட்டிருக்கிறது. அதற்காக படக்குழு செட் போட நினைக்க, விஜய் சேதுபதியோ நிஜமான கட்டிடத்தை கட்ட சொல்லியதோடு, படப்பிடிப்பு முடிந்தவுடன் அந்த கட்டிடத்தை விவசாயிகளுக்கே வழங்கிவிடுமாறும் கூறியிருக்கிறார்.

 

ஏற்கனவே விஜய் சேதுபதி ரசிகர்கள் ’சங்கத்தமிழன்’ படத்தின் ரிலீஸுக்காக விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையில், தற்போது விஜய் சேதுபதி தனது ‘லாபம்’ படப்பிடிப்பின் மூலம் விவசாயிகள் லாபமடையும் ஒரு விஷயத்தை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Labam

 

படம் குறித்து இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் கூறுகையில், “இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரமே விவசாய உற்பத்தி தான். நம்மிடம் இருந்த விவசாய நிலங்களும் அதில் விளைந்த விளைச்சலும் தான் பிரிட்டிஷ்காரன் கண்களை உறுத்தியது. நமது விவசாய நிலங்களையும் அதன் மூலமாக வந்த வளங்களையும் கொள்ளையடிக்கத் தான் பிரிட்டிஷ்காரன் இங்கே 300 வருடம் டேரா போட்டான். விவசாயத்தில் மிகப்பெரிய வளர்ச்சி கொண்ட நம்நாடு ஏன் இப்போது நலிவைச் சந்தித்தது? தினமும் விவசாயிகள் தற்கொலை என்ற செய்திகள் வருவது எதனால்? என்பதை என்னுடைய ஸ்டைலில் இப்படத்தில் சொல்லி இருக்கிறேன். இன்று விவசாயிகளுக்கு இருக்கும் பிரச்சனை சர்வதேச பிரச்சனை. அதை படம் விரிவாகப் பேசும்.” என்றார்.