பிரம்மாண்டமாக தொடங்கிய விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’!

’மாமனிதன், ‘சங்கத்தமிழன்’, ‘லாபம்’, ‘கடைசி விவசாயி’ மற்றும் தலைப்பு வைக்காத ஒரு படம் என்று வரிசையாக படங்கள் நடித்து வரும் விஜய் சேதுபதி நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ என்ற படமும் உருவாக உள்ளது.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித்குமார் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதிராவ் ஹெய்தாரி நடிக்க, இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார். ஏற்கனவே விஜய் சேதுபதி - பார்த்திபன் கூட்டணியில் வெளியான ‘நானும் ரவுடிதான்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், இந்த படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்க, இயக்குநர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுதுகிறார். ‘96’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த ஒளிப்பதிவாளர் பிரேம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்திற்கு குமார் கங்கப்பன் கலையை நிர்மாணிக்க, கோவிந்த் ராஜ் எடிட்டிங் செய்கிறார். சண்டைப்பயிற்சியை திலீப் சுப்புராயன் கவனிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பிரம்மாண்ட பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. இதில் விஜய் சேதுபதி, அதிதிராவ், பார்த்திபன், காயத்ரி, சமுத்திரக்கனி, பகவதி பெருமாள், கருணாகரன், ராஜ்குமார், தயாரிப்பாளர்கள் வயகாம் அனுப், விஜய்சேதுபதி புரொடக்ஷன் ராஜேஷ், சினிமாவாலா சதிஷ், இயக்குநர்கள் பிரேம்குமார், பாலாஜி தரணிதரன், தியாகராஜா குமாரராஜா, அஜய் ஞானமுத்து, பிரபாகரன், மருதுபாண்டி, ஆண்ட்ரூ உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள். சிறப்பு விருந்தினராக ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட ஆட்சியர் என்.பாரத்குப்தா கலந்து கொண்டார்.
இப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் சியான் விக்ரம் நடிப்பில் புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமாக தயாரிப்பதோடு, மேலும் பல பெரிய படங்களையும் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.