Aug 27, 2019 03:46 AM

விஜயுடன் மோத தயாரான விஜய் சேதுபதி! - காரணம் அஜித்தா?

விஜயுடன் மோத தயாரான விஜய் சேதுபதி! - காரணம் அஜித்தா?

’விஜயுடன் மோதும் விஜய் சேதுபதி’, ’விஜய்க்கு வில்லனான விஜய் சேதுபதி’, என்று பல தலைப்புகளில் கடந்த இரு தினங்களாக செய்திகள் பரவி வருகிறது. காரணம், விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ படத்தின் ரிலீஸ் தேதி தான்.

 

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பிகில்’ தொடங்கும் போதே தீபாவளி ரிலீஸ் என்ற அறிவிப்போடு தொடங்கப்பட்டது. அதுமட்டும் அல்ல ‘மெர்சல்’, ‘சர்கார்’ என்று தொடர்ந்து தீபாவளிக்கு விஜய் படங்கள் வெளியாவதால், பிகில் படத்தையும் தீபாவளிக்கு கொண்டு வர வேண்டும் என்று தயாரிப்பு தரப்பு மும்முரம் காட்டி வர திரையரங்க உரிமையாளர்களும் விஜய் படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

இந்த நிலையில், விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ படம் தீபாவளிக்கு ரிலீஸ், என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பொதுவாக விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படுவதால், அப்படங்களை ஏராளமான திரையரங்குகளில் திரையிட்டு, ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்திற்குள் முதலீட்டு பணத்தை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள். அதேபோல், விடுமுறை நாட்களில் தான் மக்கள் கூட்டம் தியேட்டருக்கு வருவதால், முன்னணி ஹீரோக்களின் படங்களும் விடுமுறை நாட்களையே குறி வைக்கிறது. இதனால், முன்னணி ஹீரோக்கள் படங்கள் வெளியாகும் போது மற்ற ஹீரோக்கள் தங்களது படங்களை ரிலீஸ் செய்ய விரும்புவதில்லை.

 

ஆனால், விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ விஜயின் ‘பிகில்’ வெளியாகும் தீபாவளியன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருப்பது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. விஜய் சேதுபதிக்கும் ரசிகர்கள் அதிகமாக இருந்தாலும், அவர் நடித்த ’சீதக்காதி’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘சிந்துபாத்’ ஆகிய படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்ததாலும், தற்போது அவர் நடித்து வரும் ‘சங்கத்தமிழன்’ படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லை என்ற போதிலும், அவர் விஜயுடன் மோத தயாரானது அனைவரையும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

 

விஜய் சேதுபதி மற்றும் ‘சங்கத்தமிழன்’ படத்தை தயாரித்திருக்கும் விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திற்கு ஏன் இந்த விஷப்பரிட்சை, என்று யோசிக்கையில், இதற்கெல்லாம் அஜித் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

 

ஆம், கடந்த பொங்கல் பண்டிகையன்று ரஜினியின் ‘பேட்ட’ படத்திற்கு எதிராக அஜித் தனது ‘விஸ்வாசம்’ படத்தை களம் இறக்கினார். இதற்கு காரணம் தொடர் விடுமுறை என்பது தான். இதில் அஜித் நேரடியாக தலையிடவில்லை என்றாலும், பொங்கலுக்கு தொடர் விடுமுறை வந்ததால், விஸ்வாசம் பட தயாரிப்பாளர் இதை மிஸ் பண்ண கூடாது, என்று எண்ணி பேட்டயுடன் விஸ்வாசத்தை களம் இறக்க, அப்படமும் நல்ல லாபம் ஈட்டியது. அதே சமயம் ரஜினியின் பேட்ட படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும், அதைவிட பல மடங்கு வெற்றி விஸ்வாசம் பெற்றது. இதை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.

 

தற்போது அஜித் பார்முலாவில் தான் விஜய் சேதுபதியும் பயணிக்க தொடங்கியிருக்கிறார். அக்டோபர் 27 ஆம் தேதி தீபாவளி வருகிறது. அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், அதற்கு முன்பு வெள்ளி, சனி பிறகு திங்கட்கிழமையும் விடுமுறை இருக்கும் என்பதால், தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை நாட்களாக வருவதாலேயே, விஜயுடன் மோத விஜய் சேதுபதி ரெடியாகிவிட்டாராம்.