விமல் பட இயக்குநருக்கு கொலை மிரட்டல்! - போலீசில் புகார்

விமலை ஹீரோவாக்கிய களவாணி படத்தை இயக்கிய சற்குணம், தற்போது விமல் - ஓவியா ஜோடியை வைத்து ‘களவாணி 2’ படத்தை இயக்கியுள்ளார். அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாரான இப்படத்தின் மீது சிங்காரவேலன் என்ற விநியோகஸ்தர் வழக்கு தொடர்ந்து தடை வாங்கிவிட்டார்.
பிறகு, அவருக்கும், தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, என்று நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்த இயக்குநர் சற்குணத்திற்கு ஆதரவாக நீதிபதி உத்தரவு பிறப்பித்ததோடு, படத்தின் மீது இருந்த தடையையும் நிக்கிவிட்டார்.
இதை தொடர்ந்து படத்தை வெளியிடும் பணியில் ஈடுபட்ட இயக்குநர் சற்குணம், கமிஷ்நர் அலுவலகத்தில் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக விநியோகஸ்தர் சிங்காரவேலன் மீது புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்த இயக்குநர் சற்குணம், “விமலை கதாநாயகனாக வைத்து நான் தயாரித்துள்ள ‘களவாணி 2’ படத்தை, விமல் தயாரித்திருப்பது போல் ஆவணங்கள் தயாரித்து தயாரிப்பாளர் சிங்காரவேலனும் விநியோகஸ்தர் கம்ரானும் என்னை மிரட்டுகிறார்கள். நடிகர் விமலுக்கும் அவர்களுக்கும் மத்தியில் உள்ள கொடுக்கல் வாங்கலில் தேவையில்லாமல் என் படத்தை முடக்கி எனக்குக் கோடிக்கணக்கில் நஷ்டத்தை உண்டாக்கப்பார்க்கிறார்கள்.
இது தொடர்பாக கோர்ட்டில் முறையிட்டு எனக்குச் சாதகமாக வந்த தீர்ப்புக்கு எதிராக போலி ஆவணங்களை உருவாக்கியதோடு நில்லாமல் தொடர்ந்து என் படத்தை வெளியிட விடாமல் மிரட்டுக்கிறார்கள். எனவே எனது பட நிறுவனத்துக்கும் எனக்கும் பாதுகாப்பு வழங்க ஆவன செய்யவேண்டும்.” என்று புகாரில் தெரிவித்துள்ளார்.