அறிவியல் சார்ந்த திரில்லர் படம் எடுக்கும் வி.இசட்.துரை

அஜித்தின் ‘முகவரி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான வி.இசட்.துரை, தொடர்ந்து ‘தொட்டி ஜெயா’, ‘நேபாளி’, ‘இருட்டு’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது திரைப்பட தயாரிப்பில் இறங்கியிருப்பவர் அறிவியல் சார்ந்த திரில்லர் படம் ஒன்றை தயாரித்திருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ’டிஸ்டண்ட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. புதுமுகம் சுரேஷ் நல்லுசாமி ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் டிவி ‘ஆயுத எழுத்து’ தொடர் புகர் செளந்தர்யா நஞ்சுதன் நாயகியாக நடித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் ஜி.கே என்பவர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ராடன் திரைப்பட விழாவில் முதல் பரிசு பெற்ற ‘அசரீரி’ என்ற குறும்படத்தை இயக்கிய ஜி.கே, ‘காதலின் தீபன் ஒன்று’ என்ற குறும்படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்த குறும்படம் யுடியுபில் ஒரு லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களை கடந்து பெரும் வரவேற்பு பெற்றது.
விஜய் சித்தார்த்த இசையமைக்கும் இப்படத்திற்கு ‘ஜீவி’ பட புகழ் பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ராகுல் படத்தொகுப்பு செய்ய, ஆதி பாடல்கள் எழுதுகிறார். தேவா கலையை நிர்மாணிக்க, சுதேஷ் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார்.
டாய்னா பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் வி.இசட்.துரை தயாரித்திருக்கும் இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை பிரபல வில்லன் நடிகர் கபீர் துகான் சிங் தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.