இழிவுப்படுத்திய இளம் நடிகர்! - வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய கவுண்டமணி!

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான கவுண்டமணியின் வழியை பின்பற்றி பல காமெடி நடிகர்கள் கோடம்பாக்கத்தில் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும் நிலையில், இன்னமும் அவரது காமெடிக் காட்சிகள் மக்கள் மனதிலும், தொலைக்காட்சிகளிலும் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.
கவுண்டமணி இறந்துவிட்டதாக அவ்வபோது வதந்திகள் பரவ, “என்னை எத்தனை முறை தான் சாகடிப்பானுங்க” என்று தனது பாணியில் அந்த கிசுகிசுக்களுக்கு பதில் அளிக்கும் கவுண்டமணியை, இளம் நடிகர் ஒருவர் இழிவாக படத்தில் சித்தரித்திருப்பதால் கடுப்பாகிய கவுண்டமணி, அந்த காட்சி இடம்பெற்ற படத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்ஸர்’ படம் நாளை வெளியாக உள்ள நிலையில், அப்படத்தின் சில காட்சிகள் இன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில், மாலைக் கண் நோயால் அவதிப்படும் கதாநாயகன் வைபவ், தன் வீட்டில் உள்ள கவுண்டமணியின் புகைப்படத்தைப் பார்த்து, ”தாத்தா... தாத்தா டேய், சிறப்பா பண்ணிட்டடா, ராத்திரி என்னென்ன அக்கிரமம் பண்ணினியோ, எனக்கு 6 மணிக்கு மேல கண்ணு தெரியாம போச்சுடா” என்று பேசுவதைப்போல வசனம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த காட்சிக்கு தான் கவுண்டமணி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். தன் அனுமதி பெறாமல் இதுபோன்ற காட்சிகளை படத்தில் வைத்ததோடு, தன்னை இழிவுப்படுத்தும் விதத்தில் இருக்கும் அந்த காட்சியை படத்தில் இருந்து நீக்கிவிட்டு, தன்னிடம் பகிரங்கமாக படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும், என்று தனது வக்கீல் நோட்டீஸில் கவுண்டமணி தெரிவித்திருக்கிறார்.
1991ஆம் ஆண்டில் பி. வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு நடித்து வெளிவந்த ’சின்னத்தம்பி’ திரைப்படத்தில் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவராக கவுண்டமணி நடித்திருந்தார். அப்படத்திலும் இதுபோன்ற ஒரு காட்சியில் கவுண்டமணி நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.