Oct 11, 2018 07:32 AM

‘ஆண் தேவதை’ விமர்சனம்

a05c7fb35d023b83e0171b0e8c233dc7.jpg

Casting : Samuthirakani, Ramya Pandiyan, Suja Varuni

Directed By : Thamira

Music By : Ghibran

Produced By : Fakrudeen, Sheik Dawood

 

தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே பல நல்ல திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருப்பதோடு, குடும்பத்தோடு பார்க்கும்படியான படங்களாகவும் உள்ளன. அந்த வரிசையிலான ஒரு படமாக வெளியாகியிருக்கும் படம் தான் இந்த ‘ஆண் தேவதை’.

 

வேகமாக பயணிக்கும் தற்போதைய சமூகத்தில், எது நல்லது, எது கெட்டது, எது உண்மையான சந்தோஷம், என்று எதையுமே நாம் யோசிக்க முடியாதக் காலக்கட்டத்தில் இருக்க, அதனை இப்படம் தெள்ளதெளிவாக நமக்கு புரிய வைக்கிறது.

 

இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த சமுத்திரக்கனி - ரம்யா பாண்டியன் தம்பதி, தங்களது குழந்தைகள் மீது கவனம் செலுத்துவதைக் காட்டிலும், தங்களது பணி மீது கவனம் செலுத்தி வர, ஒரு கட்டத்தில் தாங்கள் செய்வது தவறு என்பதை உணர்ந்துக்கொள்ளும் சமுத்திரக்கனி, இருவரில் ஒருவர் வேலைக்கு போனால் போதும், இருப்பதை வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழலாம், நமது குழந்தைகளை நாம் பக்கத்தில் இருந்து கவனிப்பது தான் முக்கியம், என்று தனது மனைவியிடம் கூற, அவரோ தன்னால் வேலையை விட முடியாது, என்று மறுத்துவிடுவதால், சமுத்திரக்கனி தனது வேலையை விட்டுவிட்டு, தனது குழந்தைகளையும், வீட்டையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்கிறார். இதனால், பலர் அவரை கிண்டல் செய்தாலும், அதை கண்டுக்கொள்ளாதவர், தனது குடும்பம், பிள்ளைகள், மனைவி என்று வாழ, மறுபுறம் ரம்யா பாண்டியன் தனது பணியில் படிபடியாக உயர்வதோடு, தனது சக ஊழியர்களை போல தானும் பெரிய வீடு, சொகுசு கார் என்று ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு அதை நோக்கி பயணிக்க, அதனால் ஏற்படும் விளைவுகள் தான் படத்தின் மீதிக்கதை.

 

“குழந்தைகளுக்காக தான் உழைக்கிறோம்” என்று கோரஷாக கூறும், பணிபுரியும் தம்பதிகள் அனைவரும் இப்படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும். அதே சமயம், வாழ்க்கையின் அனைத்து பிரச்சினைகளுக்கும் பணம் தான் தீர்வு, என்று நினைத்து தங்களை தாங்களே வருத்திக் கொள்ளுபவர்களுக்கும் இப்படம் ஒரு தீர்வாக இருக்கும்.

 

குடும்பத்தோடு தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் பழக்கம் குறைந்துவிட்டது, என்று பலர் குமுறுக்கிக்கொண்டு இருக்க, குடும்பம் என்றால் எப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் இருக்கும், கணவன் - மனைவி இடையில் எப்படிப்பட்ட புரிதல் இருக்க வேண்டும் உள்ளிட்ட குடும்பத்திற்கு தேவையான, குறிப்பாக கணவன் - மனைவிக்கு தேவையான, அழகான குடும்ப வாழ்க்கையை திரைப்படமாக இயக்கியிருக்கும் இயக்குநர் தாமிராவுக்கு ஆயிரம் பொக்கே கொடுக்கலாம்.

 

‘அப்பா’ படத்தின் மூலம் பள்ளி பருவ இளைஞர்களுக்கு பாடம் நடத்திய சமுத்திரக்கனி, இந்த படத்தில், கணவன், மனைவிகளுக்கு பாடம் நடத்தியிருக்கிறார். ஆனால், அதை வாத்தியார் போல அல்லாமல், சக நண்பரைப் போல நடத்துகிறார். மனைவியின் துணி துவைப்பது, வீட்டு வேலை செய்வது, பிள்ளைகளை பார்த்துக் கொள்வது என ஹவுஸ் ஹஸ்பட் என்ற புதிய பரிணாமத்தில் இப்படத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி, மனைவி தன்னை அவமானப்படுத்தியதும் கோபப்பட்டு தனது பெண் குழந்தையோடு வீட்டை விட்டு வெளியேறி சிரமப்படும் காட்சிகளில் நடிப்பால் நம் இதயத்தை கனக்க செய்கிறார். சமுத்திரக்கனி படத்திற்கு படம் நமக்கு அட்வைஸ் செய்தாலும், அவரது அட்வைஸ் நமக்கு இனிப்பாக தான் இனிக்கிறது. 

 

‘ஜோக்கர்’ படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரம்யா பாண்டியன், எளிமையான அழகோடும், எதார்த்தமான நடிப்போடும் கவர்கிறார்.

 

சமுத்திரக்கனி - ரம்யா பாண்டியன் தம்பதியின் பிள்ளைகளாக நடித்திருக்கும் கவின் மற்றும் மோனிகா இருவரது நடிப்பும் மனதில் ஒட்டிக்கொள்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவில் எண்ட்ரியாகியிருக்கும் ‘பிக் பாஸ்’ புகழ் சுஜா வாருணி, தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருப்பதோடு, பேராசை மற்றும் கணவருடனான் ஈகோவால், பெண்கள் எத்தகையை பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரில் என்பதை, தனது கதாபாத்திரத்தின் மூலம் புரிய வைத்திருக்கிறார்.

 

விஜய் மில்டனின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் இசையும் திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. 

 

சினிமா என்பது பொழுதுபோக்கு சாதனம் தான் என்றாலும், அதை பொறுப்புடன் கையாண்டிருக்கும் இயக்குநர் தாமிராவை எத்தனை முறை வேண்டுமானாலும் பாராட்டலாம். படத்தின் டைடிலே ஆண்களை பெருமையாக பேசும் படம், என்பதை தெளிவுப்படுத்தினாலும், திரைக்கதையில் பெண்களையும் தேவதைகளாகவே இயக்குநர் சித்தரித்திருக்கிறார்.

 

கணவன் எப்படி வாழ வேண்டும் என்பதையும், மனைவி எப்படி வாழ கூடாது, என்பதையும் இப்படத்தின் மூலம் சொல்லியிருக்கும் இயக்குநர் தாமிரா, பேராசைகள் மூலம் ஏற்படும் பிரச்சினைகள், உண்மையான சந்தோஷம் எது, என்பதையும் ரொம்ப அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

 

மொத்தத்தில், இந்த ‘ஆண் தேவதை’ அனைவரும் கொண்டாட வேண்டிய ஒரு திரைப்படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 

ரேட்டிங் 4/5