Apr 02, 2026 08:29 PM

’கார்மேனி செல்வம்’ திரைப்பட விமர்சனம்

4992e20267a0520369219891edf22573.jpg

Casting : Samuthirakani, Lakshmi Priya Chandramouli, Goutham Vasudev Menan, Abinaya, Karan Chakravarthy

Directed By : Ram Chakri

Music By : Service Musicloud Studio & Technology

Produced By : Arun Rangrajulu

 

கார் ஓட்டுநராக வேலை செய்யும் சமுத்திரக்கனி, அளவான குடும்பம், வருமானத்திற்கு ஏற்ற வாழ்க்கை, என்று மகிழ்ச்சியாக இருந்தாலும், சொந்த வீடு மற்றும் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற தனது ஆசையை நிறைவேற்றும் முயற்சியில் கடனாளியாகி விடுகிறார். அவசரத்திற்கு கடன் வாங்க தொடங்கும் சமுத்திரக்கனி, அதையே தனது ஆசையை நிறைவேற்றுவதற்கான வழியாக மாற்றிக் கொள்ளும் போது, அவரை பெரும் சிக்கல் சூழ்ந்து கொள்கிறது. அதில் இருந்து அவர் மீண்டாரா? இல்லையா? என்பதை, பல்வேறு ஆசைகளை வளர்த்துக்கொண்டு அதன் மூலம் அவதிப்படும் நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலாக சொல்வதே ‘கார்மேனி செல்வம்’.

 

இருப்பதை வைத்து நிறைவாக வாழாமல், நிறைவை தேடி...தேடி... வாழ்க்கையை தொலைத்து விடக்கூடாது, என்ற மெசஜை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் ராம் சக்ரி, ஒரு சராசரி குடும்பத்தின் கனவுகள் மற்றும் அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எதார்த்தமாக காட்சிப்படுத்தி யோசிக்க வைத்திருக்கிறார்.

 

எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை எதார்த்தமாக கையாண்டு பாராட்டுப் பெறும் சமுத்திரக்கனி, செல்வம் என்ற கதாபாத்திரத்தில் எளிய மனிதரின் எதிர்பார்ப்பு, ஏமாற்றம், மன போராட்டம், இயலாமை என அனைத்து உணர்ச்சிகளையும் மிக நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.

 

சமுத்திரக்கனிக்கு இணையாக நடிப்பில் அசத்தியிருக்கிறார் அவரது மனைவியாக நடித்திருக்கும் லக்‌ஷ்மி பிரியா சந்திரமெளலி. நடுத்தர வர்க்க குடும்ப பெண்களின் ஆசைகள், எதிர்பார்ப்பு, ஏமாற்றம் ஆகியவற்றை தனது கண்கள் மூலமாக வெளிக்காட்டியிருக்கும் அவர், ஆசையை விட அமைதியான வாழ்க்கையே போதும், என்ற தன் மனநிலைக்கு கணவரை மாற்ற முயற்சிக்கும் இடங்களில் எதார்த்தமாக நடித்து படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.

 

சமுத்திரக்கனியின் முதலாளியாக நடித்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனன், அவரது மனைவியாக நடித்திருக்கும் அபிநயா, சமுத்திரக்கனியின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் கரண் சக்கரவர்த்தி ஆகியோரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரும் துணையாக பயணித்திருக்கிறார்கள்.

 

நெரிசல் மிக்க நகரம் மற்றும் நகரத்தில் இருந்து விலகியிருந்தாலும் அமைதி நிறைந்த நாயகனின் குடியிருப்பு மூலம் மனிதர்களின் வேகமான வாழ்க்கையையும், ரசிக்க மறந்த வாழ்க்கையும் மிக அழகியலோடு காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் யுவராஜ் தக்‌ஷன்.

 

மியூசிக்லவுட் ஸ்டுடியோஸ் & டெக்னாலஜியின் (Musicloud Studio & Technology) இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்து பலம் சேர்த்திருக்கிறது.

 

ஜெகன்.ஆர்.வி மற்றும் தினேஷ்.எஸ் ஆகியோரின் படத்தொகுப்பும், சங்கரின் கலை இயக்கமும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

 

நம்மிடம் இருப்பதை வைத்து வாழ வேண்டுமே தவிர, பிறரிடம் இருப்பதை நாமும் வாங்கி வாழ வேண்டும், என்ற ஆசையில் சிக்கி அவஸ்த்தைப்படக் கூடாது, என்பதை சிந்திக்க வைக்கும்படி சொல்லியிருக்கும் படம், குடும்பத்திற்காக பொருள் தேடுகிறோம் என்ற பெயரில் அந்த குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வதை தவறவிடக்கூடாது, என்று வெளிநாட்டில் வேலை செய்கிறவர்களுக்கும் அறிவுரை சொல்கிறது.

 

மெதுவாக நகரும் திரைக்கதை, எதார்த்தத்தை மீறிய கதாபாத்திர வடிவமைப்பு போன்றவை குறையாக தெரிந்தாலும், தேவையற்ற ஆசையால், நிம்மதியற்ற வாழ்க்கை வாழும் மக்களுக்கு நல்ல அறிவுரை சொல்வதோடு, எது வாழ்க்கை என்ற உண்மையை மக்களுக்கு புரிய வைக்கும் இயக்குநர் ராம் சக்ரியின் முயற்சி, குறைகளை மறைத்து படத்தின் நிறைகளை மக்கள் மனதில் இடம் பிடிக்க வைத்துவிடுகிறது.

 

மொத்தத்தில், ‘கார்மேனி செல்வம்’ மக்களுக்கான படம்.

 

ரேட்டிங் 3/5