Aug 02, 2025 06:33 AM

’சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்’ திரைப்பட விமர்சனம்

a2b253bf839b1a1f9ef229d9442e8a5d.jpg

Casting : Vetri, Shilpa Manjunath, Thambi Ramiah, Kinsley, Mages doss

Directed By : Anish Ashraf

Music By : AJR

Produced By : Sinnathambi Production - Mageswaran Devadas

 

கிரைம் நாவல் எழுத்தாளரின் மகனான நாயகன் வெற்றி, பத்திரிகை ஒன்றில் தனது தந்தையின் வாழ்க்கையை தொடராக எழுத சென்னை வருகிறார். சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டரான தம்பி ராமையாவுடன் நட்பு ஏற்படுகிறது. வெற்றியின் துப்பறியும் திறனால் ஈர்க்கப்படும் தம்பி ராமையா, தனக்கு உதவியாக வைத்துக் கொண்டு பயணிக்கிறார். அப்போது, பெண் நிருபர் ஒருவரும், சில பள்ளி மாணவர்களும் ஒரே மாதிரியாக கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். இந்த தொடர் கொலைகளின் பின்னணியை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் வெற்றி அதை எப்படி கண்டுபிடிக்கிறார்?, கொலைகாரன் யார்?, பின்னணி என்ன?, என்பதை விவரிப்பது தான் ‘சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்’.

 

கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படங்களில் வெற்றியை பார்ப்பது புதிதல்ல என்றாலும், அவரது நடிப்பு இந்த படத்தில் சற்று புதிதாகவும், நல்ல முன்னேற்றமாகவும் இருக்கிறது. வழக்கு விசாரணை மற்றும் துப்பறியும் காட்சிகளில் வழக்கமான உடல்மொழியோடு நடித்தாலும், நடனம், ஜாலியாக பேசி நடித்திருப்பது போன்றவற்றால், ஒரே மாதிரியான நடிப்பு என்ற தனது குறையை முற்றிலும் தவிர்த்துவிட்டு, சிறப்பாக நடித்திருக்கிறார், என்று சொல்ல வைத்திருக்கிறார்.

 

நாயகியாக நிருபர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சில்பா மஞ்சுநாத்துக்கு, காதல் காட்சிகளும், பாடல்களும் இல்லை. திரைக்கதையோடு முக்கியத்துவம் இருக்கும் வேடமும் இல்லை. ஏதோ சில காட்சிகளில் தலை காட்டுகிறார், திடீரென்று வில்லனிடம் சிக்கிக் கொண்டு ஓடுகிறார், பிறகு என்ன ஆனார் என்பதே தெரியாமல் மறைந்துவிட்டு, கிளைமாக்ஸில் முகம் காட்டுகிறார். 

 

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் தம்பி ராமையா, தனது வழக்கமான மொக்கை உடல்மொழியோடு காமெடி என்ற பெயரில் ரம்பமாக அறுக்கிறார். பிறகு குணச்சித்திர வேடத்தில் பார்வையாளர்களை கலங்க வைக்க முயற்சிக்கிறார்.

 

வில்லனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் மகேஷ் தாஸ், ஹல்கின் கடைசி தம்பி போல் தோன்றி மிரட்டுகிறார். அதிகம் பேசாமல் தனது உடல் மூலம் பயமுறுத்த முயற்சித்திருக்கும் மகேஷ் தாஸ், கொஞ்சமாக நடித்திருக்கிறார்.

 

நகைச்சுவை காட்சிகளுக்காக திணிக்கப்பட்டிருக்கும் ரெடின் கிங்ஸ்லியின் கதாபாத்திரம் தேவையில்லாத ஆணி என்பதால், அவர் வரும் காட்சிகள் அனைத்தும் புடுங்க வேண்டியவையாகவே இருக்கிறது.

 

இசையமைப்பாளர் ஏ.ஜே.ஆர் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப அமைந்திருக்கிறது.

 

அரவிந்தின் ஒளிப்பதிவும், விஷாலின் படத்தொகுப்பும் படத்தை விறுவிறுப்பாகவும், வேகமாகவும் நகர்த்தியிருக்கிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் அனிஷ் அஷ்ரப், சைக்கோ திரில்லர் ஜானருடன், சமூக பிரச்சனை பற்றியும் பேசியிருக்கிறார். குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை பதிவு செய்திருக்கும் இயக்குநர் அதை பரபரப்பான திரைக்கதை மூலமாக கமர்ஷியலாக சொல்லியிருக்கிறார்.

 

காவல்துறைக்கு சம்மந்தமே இல்லாத ஒரு நபர், வழக்கு விசாரணைகளில் இந்த அளவுக்கு தலையிடுவதை விட, அவரையே போலீஸ் அதிகாரியாகவோ அல்லது ஒரு சாதாரண காவலர் கதாபாத்திரமாகவோ வடிவமைத்திருக்கலாம். இருந்தாலும், வெற்றியின் கதாபாத்திரமும், குற்ற வழக்குகளை அவர் பார்க்கும் விதமும் படத்தை ரசிக்க வைக்கிறது.

 

மொத்தத்தில், ’சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்’ பரவாயில்லை.

 

ரேட்டிங் 2.5/5