Dec 04, 2025 08:08 PM

’சாரா’ திரைப்பட விமர்சனம்

40941ec231a9d65513e42c3515c2a1f4.jpg

Casting : Sakshi Agarwal, Chellakutty, Yogi Babu, Robo Shankar, Vijay Vishwa, Thangadurai

Directed By : Chellakutty

Music By : Karthik Raja

Produced By : Viswa Dream World - Sri Pattavan

 

கட்டிடப் பொறியாளரான நாயகி சாக்‌ஷி அகர்வால், கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றுவதோடு, அதே நிறுவனத்தில் பணியாற்றும் விஜய் விஸ்வாவை காதலிக்கிறார். இருவருக்கும் திருமணமாக இருக்கும் நிலையில், சாக்‌ஷி அகர்வாலை கட்டுமான நிறுவனத்தின் காவலாளி ரோபோ சங்கர் கொலை செய்ய முயற்சிக்கிறார். 

 

ஆனால், அவருக்கு முன்னதாக, மற்றவர்களுக்கு கோமாளியாக தெரியும், சாதாரண கட்டுமான தொழிலாளியாக பணியாற்றும் செல்லகுட்டி, விஜய் விஸ்வா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோரை கடத்தி விடுகிறார். அவர் அப்படி செய்தது ஏன்? என்ற கேள்விக்கான விடையை பலவித திருப்பங்களோடு சொல்வது தான் ‘சாரா’.

 

கதையின் நாயகியாக சாரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாக்‌ஷி அகர்வால், கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார். 

 

சாக்‌ஷி அகர்வாலின் காதலராக நடித்திருக்கும் விஜய் விஸ்வா, ஹீரோவாக எண்ட்ரிக் கொடுத்தாலும், அதன் பிறகு அவரது நிலை ஐயோ பாவம்...

 

ஆடை, தோற்றம் என தன்னை கோமாளியாக காட்டிக்கொண்டு அறிமுகமாகும் இயக்குநர் செல்லகுட்டி, அடுத்தடுத்த காட்சிகளில் எடுக்கும் விஸ்வரூபம் திரையரங்கையே அதிர வைக்கிறது. படத்தின் ஹீரோயின், ஹீரோ, வில்லன் என அனைத்து கதாபாத்திரங்களையும் ஓரம் கட்டிவிட்டு, அவர் நடத்தியிருக்கும் ஒன்மேன் ஷோ செம அதிரடி. அதிலும், ஒருவித சத்தம் போட்டு தன் கோபத்தை வெளிப்படுத்தும் அவரது மேனரிசம் நிச்சயம் டிரெண்டாவதோடு, தற்போது சோசியல் மீடியாக்களில் உலா வரும் நடிப்பு அரக்கனையும் மிஞ்சும் அளவுக்கு உள்ளது.

 

யோகி பாபு வரும் காட்சிகள் அனைத்தும் சிரிக்க வைக்கிறது. வழக்கம் போல் யோகி பாபு உடல் கேலி செய்யும் வசனங்களை பேசினாலும்,  சில வசங்களினால் நிச்சயம் சிரிப்பு வரும். ரோபோ சங்கர், தங்கதுரை ஆகியோரின் திரை இருப்பும், அவர்கள் பேசும் வசனங்களும் சிரிக்க வைக்கிறது.

 

அம்மாவாக நடித்திருக்கும் அம்பிகா, வில்லனாக நடித்திருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வா ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை ரகம்.

 

ஒளிப்பதிவாளர் ஜெ.லக்‌ஷ்மன் குமார் கதைக்கு ஏற்ப காட்சிகளை படமாக்கியுள்ளார்.

 

படத்தொகுப்பாளர் ஜான் ஆபிரகாம் இயக்குநரின் கதையை சிதைக்காத வகையில் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.

 

எழுதி இயக்கியிருக்கும் செல்லகுட்டி, சஸ்பென்ஸ் திரில்லர் கதையை நட்பு மற்றும் காதலோடு சேர்த்து கமர்ஷியலாக சொல்லியிருக்கிறார்.

 

இயக்குநர் செல்லகுட்டி, தான் சொல்ல நினைத்த கதையை சற்று தடுமாற்றத்தோடு சொல்லியிருந்தாலும், ஒரு நடிகராக பலவிதமான அலப்பறைகள் செய்து, பார்வையாளர்கள் மனதில் ஆணி அடித்தது போல் ஒட்டிக்கொள்கிறார். 

 

பவர் ஸ்டார், நடிப்பு அரக்கன் என அனைத்து கோமாளிகளையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் செல்லகுட்டி, இயக்குநராக வெற்றி பெறவில்லை என்றாலும், ஒரு நடிகராக நிச்சயம் டிரெண்டாக வாய்ப்புள்ளது.

 

மொத்தத்தில், ‘சாரா’ நிஜமான நடிப்பு அரக்கனை அடையாளம் காட்டியிருக்கிறது.

 

ரேட்டிங் 3/5