May 05, 2018 09:08 AM

’என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ விமர்சனம்

33c6aba8674ec7b5a46e1735c052e5eb.jpg

Casting : Allu Arjun, Anu Emmanuvel, Arjun, Sarathkumar

Directed By : V.Vamsi

Music By : Vishal - Sekar

Produced By : Ramalakshmi Cine Creations

 

கோடம்பாக்கத்தில் அவ்வளவாக பயணிக்காத அல்லு அர்ஜுனின் நடிப்பில் தெலுங்கு டப்பிங் படமாக இருந்தாலும், ராணுவ வீரன் என்ற கம்பீரத்தோடு வெளியாகியிருக்கும் இந்த ‘என் பெயர் சூர்யா...என் வீடு இந்தியா’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

ராணுவ வீரரான அல்லு அர்ஜுன், தாய் நாட்டு மீதும், ராணுவ பணி மீதும் வெறித்தனமான பற்று வைத்திருப்பவர், அதே சமயம் பெரும் கோபக்காரராகவும் இருகிறார். தனக்கு கோபம் வந்துவிட்டால், எதையும் யோசிக்காமல் எதிராளிகளை பிரித்து மேயும் சுபாவம் கொண்ட அல்லு அர்ஜுனுக்கு அந்த சுபாவமே அனைத்திலும் பின்னடைவாக அமைந்துவிடுகிறது. நண்பர்கள், காதலி என அனைத்தையும் தனது கோபக் குணத்தால் இழந்துவிடும் அல்லு அர்ஜுன், தான் நேசிக்கும் ராணுவ பணியையும் இழக்க நேரிடுகிறது. அதே சமயம் அவரை மன்னித்து மீண்டும் ராணுவ பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றால், இந்தியாவின் பிரபல மனநல மருத்துவரான அர்ஜுனிடம் சான்றிதழ் பெற்று வர வேண்டும் என்று உயர் ராணுவ அதிகாரி சொல்கிறார்.

 

அதன்படி, அர்ஜுனிடம் அல்லு அர்ஜுன் செல்ல, அர்ஜுன் தான் அல்லு அர்ஜுனின் அப்பா என்பது தெரிய வருகிறது. இருந்தாலும் அல்லு அர்ஜுனை தனது மகனாக பார்க்காமல் தனது நோயாளியாக அர்ஜுன் பார்க்க, அது அல்லு அர்ஜுனுக்கு மேலும் கோபத்தை அதிகரித்து இருவரும் வார்த்தைகளால் மோதிக்கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில், ”21 நாட்கள் கோபத்தை கட்டுப்படுத்தி, அமைதியாக வாழ்ந்து காட்டினால், சான்றிதழ் தர நான் ரெடி” என்று அர்ஜுன் கூறுகிறார். அதன்படி, தனது கோபத்தை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு, அமைதியானவனாக அல்லு அர்ஜுன் வாழ தொடங்கும் போது, தாதா சரத்குமார் மற்றும் அவரது ஆட்கள் அல்லு அர்ஜுனுக்கு தொல்லை கொடுப்பதோடு, அவர் கண் முன்னே பல தவறுகளையும் செய்கிறார்கள். ராணுவ வீரனாக எல்லையை காப்பதையே லட்சியமாக கொண்ட அல்லு அர்ஜுன், தனது கண் முன் நடக்கும் தவறுகளை தட்டிகேட்டு மீண்டும் அதிரடியில் இறங்கினாரா அல்லது தனது தந்தை உடனான போட்டியில் வெற்றி பெற்று சான்றிதழ் பெற்றாரா என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் அல்லு அர்ஜுன், ஸ்டைலிஷ் ஸ்டார் என்ற தனது பட்டத்திற்கு ஏற்றவாறு நடனத்தை மட்டும் அல்ல ஆக்‌ஷன் காட்சிகளையும் ஸ்டைலாக கையாண்டிருக்கிறார். நடனம், ஆக்‌ஷன் என்று ரெகுலரான தெலுங்கு ஹீரோவாக இல்லாமல் எதார்த்தமாக பல இடங்களில் நடித்திருப்பவர், இந்த படத்திற்காக பெரிய உழைப்பையும் கொடுத்திருப்பது அனைத்து காட்சிகளிலும் தெரிகிறது. எந்த காட்சியாக இருந்தாலும், அதில் தன்னை ரொம்ப அழுத்தமாகவே மக்கள் மனதில் பதிய வைத்துவிடுகிறார்.

 

அல்லு அர்ஜுனின் காதலியான அணு இமானுவேலும், அம்மாவாக நடித்திருக்கும் நதியாவும் குறைவான காட்சிகளில் வந்தாலும் நிறைவாகவே நடித்திருக்கிறார்கள். 

 

ஆக்‌ஷன் கிங் அர்ஜுனா இது! என்று ஆச்சரியப்படும் அளவுக்கு ரொம்ப அமைதியான அப்பாவாக நடித்திருக்கிறார். தனது நடிப்பு மூலம் ஆக்‌ஷனில் மட்டும் அல்ல நடிப்பிலும் தான் கிங் தான் என்று அர்ஜுன் நிரூபித்திருக்கிறார். தாதாவாக நடித்திருக்கும் சரத்குமாரின், வேடம் அவ்வளவாக நம்மை மிரட்டவில்லை. அதே சமயம், இறுதியில் அவரது கதாபாத்திரம் ரொம்ப டம்மியாக்கப்பட்டு விடுகிறது.

 

விஷால் - சேகர் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு திரைக்கதையுடன் பயணித்து நம்மை கதைக்குள் இழுத்துவிடுகிறது. ஆக்‌ஷன் காட்சிகளும், எடிட்டிங்கும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

 

ரெகுலரான தெலுங்குப் படம் போல அல்லாமல் இயல்பான ஒரு படமாக இருப்பதோடு, நேரடி தமிழ்ப் படம் பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது.

 

பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் சண்டைப்போட்டு, வீர வசனம் பேசி நமக்கு தேசப்பற்றை பரப்பாமல், குற்றவாளிகள் எங்கிருந்து, யாரால் உருவாக்கப்படுகிறார்கள், என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் வி.வம்சி, எந்தவித சர்ச்சை இல்லாமலும் கையாண்டிருக்கிறார். அதே சமயம், தான் சொல்ல வந்ததை நேர்த்தியாக சொல்லியிருப்பவர், திரைக்கதையை கொஞ்சம் ஜவ்வாக இழுத்தும் இருக்கிறார். அந்த குறையை தவிர வேறு எந்த குறையும் இல்லாத ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ தனது கம்பீரத்தால் ரசிகர்களை சல்யூட் அடிக்க வைத்துவிடுகிறது.

 

ஜெ.சுகுமார்