Jul 13, 2018 10:01 AM

’கடைக்குட்டி சிங்கம்’ விமர்சனம்

3f037faa36ea6027112b8b4a1adfe410.jpg

Casting : Karthi, Sathyaraj, Sayyesha, Suri, Ponvannan, Ilavarasu, Saravanan

Directed By : Pandiraj

Music By : D.Imman

Produced By : Surya

 

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கார்த்தி, சத்யராஜ், சூரி, சாயீஷா, பொன்வன்னன் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு வெளியாகியிருக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

எத்தனை பெண் பிள்ளைகளை பெற்றாலும் ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்பதற்காக நான்கு பெண் பிள்ளைகளை பெற்ற பிறகும் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும் சத்யாராஜிக்கு இரண்டாவது மனைவி பானுப்ரியா மூலம் ஒரு பெண் குழந்தை தான் பிறக்க, மூன்றாவது திருமணத்திற்கு மனுஷன் தயாராகும் போது, அவரது முதல் மனைவி விஜி, ஐந்தாவது முறையாக கர்ப்பம்  தரிப்பவர், ஆண் பிள்ளையை பெற்றெடுக்கிறார். அந்த கடைக்குட்டி சிங்கம் தான் ஹீரோ கார்த்தி.

 

ஐந்து அக்கா, நான்கு மாமமன்கள், இரண்டு அம்மா, இரண்டு முறைப் பெண்கள் என்று ஒட்டு மொத்த குடும்பத்தையும் கட்டிகாக்கும் சத்யராஜின் கடைக்குட்டியான கார்த்தி, சத்யராஜ் குடும்பத்தை பார்த்ததை விடவும், குடும்ப உறுபின்னர்களிடம் காட்டிய பாசம், அக்கறையை விட அதிகமாகவே காட்டுகிறார்.

 

இதற்கிடையே, அக்கா மகள்கள் இருவரில் ஒருவரை திருமணம் செய்தால் பிரச்சினை வந்துவிடும் என்பதால், சொந்தத்தில் பெண் எடுக்க கூடாது என்ற முடிவுக்கு வரும் கார்த்தி கண்ணில் சாயீஷ பட, அவர் மீது கார்த்திக்கு காதல் வந்துவிடுகிறது. பிறகு சாயீஷாவுக்கும் கார்த்தி மீது காதல் வர, சாயிஷாவின் தந்தையான பொன்வண்ணன் காதலுக்கு பச்சைகொடி காட்டிவிடுகிறார். அதே சமயம், கார்த்தியால் சிறைக்கு சென்ற சாயீஷாவின் மாமன் கார்த்தியை போட்டு தள்ள நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

 

இந்த நிலையில், கார்த்தியின் காதலுக்கு அவரது அப்பா, அம்மா சம்மதம் தெரிவித்தாலும், அவரது அக்காக்கள் தங்களது மகள்களில் ஒருவரை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறி பிரச்சினை செய்கிறார்கள். அவர்களோடு அக்கா மகள்களான பிரியா பவானி சங்கரும், அர்த்தனாவும் கார்த்தியை தான் திருமணம் செய்வேன் என்று ஒத்த காலில் நிற்க, இதனால் ஒன்றாக இருந்த குடும்பத்தில் விரிசல் ஏற்பட தொடங்குகிறது. இதை பயன்படுத்தி கொள்ளும் சாயீஷாவின் முறை மாமன், கார்த்தியின் குடும்பத்தை பிரிக்க முயற்சிக்க, அவரது சதியை முறியடித்து, தனது குடும்ப சம்மதத்துடன் சாயிஷாவை கார்த்தி கரம் பிடித்தாரா அல்லது குடும்பத்திற்காக காதலை தியாகம் செய்தாராம் என்பது தான் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மீதிக்கதை.

 

படம் பார்ப்பது போல அல்லாமல் ஏதோ ஒரு கூட்டு குடும்பத்தில் ஒரு வாரம் தங்கியிருந்தது போன்ற அனுபவத்தை கொடுக்கும் இந்த ‘கடைக்குட்டி சிங்கம்’ தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ற படமாகவே உள்ளது.

 

கார்த்தி தனது அக்காக்களிடமும், மாமன்களிடமும் மரியாதையாக நடந்துக் கொள்வது, அவர்களுக்கான முறையை சரிசமமாக செய்வது என்று அனைத்து அக்கா மார்களும் இப்படி தம்பி தனக்கு இல்லையே, என்று ஏங்க வைக்கும் அளவில் இருக்கிறது. எப்போது சிரித்த முகத்தோடு வரும் கார்த்திக்கு வேட்டி சட்டையும், கிராமம் புதிது இல்லை என்றாலும், இந்த படத்தில் அவர் கொஞ்சம் புதிதாகவே தெரிகிறார். அவரது நடிப்பும் சற்று புதிதாக இருப்பதோடு, ரொம்பவே ரசிக்க வைக்கிறது.

 

தாவணி கட்டின பாபி டால் போல இருக்கும் ஹீரோயின் சாயீஷா, ஹோம்லியான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். முழுக்க முழுக்க மாடர்ன் பெண்ணாக சில படங்களில் நடித்திருப்பவர், இந்த படத்தில் மொத்தமாக தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார். அவரால் தான் படத்தில் திருப்புமுனை ஏற்படுகிறது என்றாலும் அவருக்கு நடிக்க என்னவோ வாய்ப்பு குறைவு தான். ஆனால், பாடல் காட்சிகளில் தனது எக்ஸ்பிரஷன்கள் மூலமாகவே ரசிகர்கள் மனதில் ஒட்டிக்கொள்கிறார்.

 

Kadaikutty Singam Review

 

கார்த்தியின் அப்பாவாக நடித்திருக்கும் சத்யராஜ், தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்திருக்கிறார். ஆண் குழந்தைக்காக ஏங்குபவர், அதே சமயம் பெண் குழந்தைகளை எப்படி பார்க்கிறார் என்று சொல்லும் இடங்களில் எல்லாம் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக கச்சிதமாக பொருந்தி போகிறார்.

 

விஜி சந்திரசேகர், பானுப்ரியா, யுவரானி, மெளனிகா, பொன்வன்னன், ஸ்ரீமன், இளவரசு, பிரியா பவானி சங்கர், அத்தனா, வில்லனாக நடித்தவர் என்று படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் ஒன்று இரண்டு காட்சிகளில் வந்தாலும் கவனிக்க வைக்கின்றனர். அதிலும் இளவரசு, சரவணன், மெளனிகா ஆகியோர் தங்களது சேட்டைகளால் சிரிக்க வைப்பது போல, தங்களது கதாபாத்திரங்கள் மூலம் குடும்ப உறவுகள் பற்றி சிந்திக்கவும் வைக்கிறார்கள்.

 

காமெடி நடிகராக அல்லாமல் ஒரு கதாபாத்திரமாக நடித்திருக்கும் சூரியின் காமெடி காட்சிகள் மிகப்பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. தனியாக காமெடி டிராக் போல அல்லாமல் கதையுடனே சேர்ந்து வரும் சூரியின் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு வெடியாக இருக்கிறது. 

 

குடும்பத்தோடு தியேட்டருக்கு வருவது குறைந்துவிட்டது என்று திரையுலகினர் புலம்பிக் கொண்டிருக்கும் நிலையில், ஒரு குடும்பம் அதில் இருக்கும் உறவுகளை வைத்தே ஒரு திரைப்படத்தை எடுக்கலாம் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

 

Kadaikutty Singam Review

 

ரெகுலரான கமர்ஷியல் படம் தான் என்றாலும் அதில் சொல்லப்படும் ரெகுலரான விஷயங்களை சற்று வித்தியாசமாக சொல்லியிருக்கும் இயக்குநர் பாண்டிராஜ், விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து பாடம் நடத்தாமல், படம் பார்ப்பவர்களை பாதிக்கும்படி சொல்லியிருக்கிறார். சண்டைக்காட்சிகளில் கூட கார்த்தியை விவசாயியாகவே காட்டியிருக்கும் பாண்டிராஜ், அவருக்கான ஆயுதமாக ஒரு இடத்தில் தென்னங்கொலை பயன்படுத்தியிருப்பது எல்லாம் ரசிக்க வைக்கிறது. ஜாதி பிரிவினை குறித்தும் சற்று பேசியிருப்பவர் அதை ஒரு புரட்சியாளராக அல்லாமல், சக மனிதராக எளிமையான முறையில் சொல்லியதற்கு ஆயிரம் பொக்கே கொடுக்கலாம்.

 

டி.இமானின் இசையில் பாடல்கள் அனைத்து மெலோடி ரகங்கள், வேல்ராஜ் தனது கேமரா மூலம் கதை நடக்கும் கிராமத்தை மட்டும் இன்றி, அதில் இருக்கும் கதாபாத்திரங்களையும் ரொம்ப அழகாக காட்டியிருப்பவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பிரம்மாண்டமான மாட்டி வண்டி பந்தயக் காட்சியை பார்த்த திருப்தியையும் கொடுக்கிறார்.

 

காதல், செண்டிமெண்ட், காமெடி, ஆக்‌ஷன் என்று அனைத்தும் நாம் பல படங்களில் பார்த்தது தான் என்றாலும், இதை பாண்டியராஜ் கையாண்ட விதம் என்னவோ சற்று புதிதாகவும் இலகுவாகவும் இருக்கிறது. அதிலும், வில்லனை ரொம்ப பயன்படுத்தாமல், கார்த்தியின் குடும்ப நபர்களே ஒரு கட்டத்தில் வில்லத்தனம் செய்வது போல காட்டியதும், பிறகு அதுவும் பாசத்தில் ஒரு வகை என்று சொல்லியிருப்பது திரைக்கதையின் பலமாக இருக்கிறது. இருந்தாலும் படத்தின் இரண்டாம் பாதி சற்று நீளமாக செல்வது போன்ற உணர்வை கொடுக்கிறது.

 

Kadaikutty Singam Review

 

இருந்தாலும், குடும்ப உறவுகளின் மனம் கோனாமல் நடக்கும் கார்த்தியின் கதாபாத்திர அமைப்பு படத்தில் இருக்கும் சின்ன சின்ன குறைகளை எல்லாம் ரப்பர் போல அவ்வபோது அழித்து விடுவதோடு, படத்தில் இடம்பெறும் வசனங்களும் நம்மை நிமிர்ந்தே உட்கார வைப்பதோடு கைதட்டவும் செய்கிறது. குடும்ப உறவுகளை சுமப்பவன் சிலுவை சுமப்பது போல, ஆனால் சிலுவையை எல்லாராலும் சுமக்க முடியாது, என்று சொல்லும் இடத்தில் எல்லாம் கைதட்டல் சத்தம் காதை பிளக்கிறது. இப்படி பல இடங்களில் சில கதாபாத்திரங்கள் மூலம் சாதாரணமாக பேசும் வசனங்களில் கூட பல அழுத்தமான விஷயங்களை இயக்குநர் பாண்டிராஜ் பதிவு செய்திருக்கிறார்.

 

ஆயிரம் எப்பிசோட் ஒளிபரப்பினாலும் பரபரப்பு குறையாமல் ஒளிபரப்பாக கூடிய ஒரு மெகா சீரியலுக்கு உண்டான கதையையும், கதாபாத்திரங்களையும் இரண்டரை மணி நேர படத்திற்குள் கொண்டு வந்த இயக்குநர் பாண்டிராஜின் திரைக்கதை யுக்திக்கு சபாஷ் சொல்லியாக வேண்டும்.

 

மொத்தத்தில், இந்த ’கடைக்குட்டி சிங்கம்’ எங்கள் வீட்டுப் பிள்ளை என்பதை நிருபித்து விட்டார்.

 

ரேட்டிங் 4/5