Feb 23, 2018 05:38 AM

கூட்டாளி விமர்சனம்

021952a5bf8b82010cf3b439f48e8bde.jpg

Casting : Sathish, Krisha Kurup, Kalyan, Kausalya, Arul Doss

Directed By : SK Madhi

Music By : Britto Michael

Produced By : SP Pixels

 

நான்கு நண்பர்கள், அவர்களில் ஒருவருக்கு வரும் காதல் அந்த காதலால் நான்கு பேருக்கும் வரும் பிரச்சினை, அதில் இருந்து அவர்கள் விடுபட்டார்களா இல்லையா, என்பது தான் ‘கூட்டாளி’ படத்தின் ஒன்லைன் கதை.

 

ஹீரோ சதீஷ் மற்று அவரது மூன்று நண்பர்களும் தவனை கட்டாத கார்களை கைப்பற்றும் (சீஸ்) வேலையை செய்து வருகிறார்கள். ரிஸ்கான வேலைகளை ரஸ்க் சாப்பிடுவது போல செய்து முடிக்கும் ஹீரோ சதீஷ், உள்ளூர் கவுன்சிலர் முதல் வெளியூர் ரவுடி என அனைவரிடமும் தனது சாமர்த்தியத்தைக் காட்டி, தனது குருவிடமும், முதலாளியிடமும் சமத்துப் பிள்ளை என்று பேர் வாங்குகிறார். இதனால் சதீஷுக்கு எதிர்கள் அதிக்கரிக்க, அதே சமயம் போலீஸ் அதிகாரி பெண்ணின் காதலும் கிடைக்கிறது. அந்த காதலுக்கு சதீஷின் கூட்டாளிகளில் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தாலும், சதீஷ் யார் பேச்சையும் கேட்காமல் காதலி பேச்சை கேட்டு அவர் பின்னால் போக, அதுவே அவருக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் ஆபத்தாக முடிய, பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் ‘கூட்டாளி’ படத்தின் மீதிக்கதை.

 

ஹீரோ சதீஷ் மற்றும் அவரது நண்பர்களாக நடித்துள்ள அப்புக்குட்டி, கலையரசன், அன்புராஜ், ஹீரோயின் கிரிஷா க்ரூப், ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருந்தாலும், பெரும்பாலான காட்சிகளில் ஒட்டாமல் போகிறார்கள். எப்போதும் போல ரவுடியாக நடித்திருக்கும் அருள்தாஸ், நந்தகுமார் ஆகியோர் கதாபாத்திரத்திற்கு பொருந்தி போனாலும், ரசிகர்களை சலிப்படைய வைக்கிறார்கள். ஹீரோயினின் அப்பாவாக நடித்திருக்கும் டான்ஸ் மாஸ்டர் கல்யாண், அம்மாவாக நடித்திருக்கும் கவுசல்யா என சொல்லும்படியான நடிகர்கள் இருந்தாலும், அவர்களது கதாபாத்திரமும் நடிப்பும் சொல்லும்படியாக இல்லை.

 

ஆரம்பத்தில் பரபரப்பாக தொடங்கும் படம், அதன் பிறகு வரும் ஒரு சில காட்சிகளுக்குப் பிறகு கிளைமாக்ஸை நம் கண் முன் நிறுத்தும் வகையில் திரைக்கதை ரொம்ப சாதாரணமாக பயணிக்கிறது. இருந்தாலும், இடை இடையே கவுன்சிலர் காரை சீஸ் செய்வது, பாண்டிச்சேரி ரவுடியின் காரை சீஸ் செய்வது என்று திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டும் இயக்குநர், அந்த விறுவிறுப்பை, அந்த காட்சிகள் முடியும் வரை கூட தொடராமல் திடீரென்று பஞ்சரான காராக தடுமாறிவிடுகிறார்.

 

இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கேலும், ஒளிப்பதிவாளர் சுரேஷ் நட்ராஜனும், இந்த கதைக்கு எந்த அளவுக்கு பணியாற்ற முடியுமோ அந்த அளவுக்கு பணியாற்றியிருக்கிறார்கள்.

 

நடு காட்டில் பெண்கள், குழந்தைகளை இறக்கிவிட்டு காரை கைப்பற்றுவது, அதே காரின் உரிமையாளர் போலீஸ் உதவியோடு தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொள்ளும் அளவுக்கு பெரியாளாக இருக்க, காருக்கு டீவ் மட்டும் அவரால் கட்ட முடியாதா? இப்படிப்பட்ட கதையை, இப்படி தான் சொல்ல வேண்டும் என்ற வரைமுறை இல்லாமல், எப்படி எப்படியோ சொல்லி திரைக்கதையை குதறியிருக்கும் இயக்குநர் முழு படத்தையும் குறை சொல்வதுபோல தான் இயக்கியிருக்கிறார்.

 

மொத்தத்தில், கூட்டாளிகளை கொல்லும் இயக்குநர் கூடவே ரசிகர்களையும் கொல்லோ கொல்லு என்று கொன்றெடுத்துவிடுகிறார்.

 

ஜெ.சுகுமார்