Aug 04, 2018 04:04 PM

‘மணியார் குடும்பம்’ விமர்சனம்

3c3ffb46a1ad8ce3b639301152984780.jpg

Casting : Umapathi Ramaiah,Mridula Murali, Thambi Ramaiah, Samuthrakani, Jeyaprakash

Directed By : Thambi Ramaiah

Music By : Thambi Ramaiah

Produced By : VU Cinemas Theynmozhi Sungra

 

தனது மகன் உமாபதி ராமைய்யாவை ஹீரோவாக வைத்து தம்பி ராமைய்யா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியதோடு, பாடல்கள் எழுதி இசையும் அமைத்திருக்கும் ‘மணியார் குடும்பம்’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

ஊரிலே பெரிய பணக்கார குடும்பமாக இருந்தாலும், தனது தந்தையின் ஊதாரித்தனத்தால் சொத்துக்களை இழக்கும் தம்பி ராமைய்யா, தனது தந்தையை போலவே வேலைக்கு போகாமல் வீட்டில் இருப்பதை விற்று சாப்பிட்டு வர, அவரது மகன் உமாபதியும் அவரைப் போலவே ஊதாரியாகவே சுற்றி வருவதோடு, தனது அத்தை மகளான ஹீரோயின் மிருதுல்லாவை காதலித்தும் வருகிறார். சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் மிருதுல்லா கை நிறைய சம்பளம் வாங்கினாலும், வெட்டி ஆபிசராக இருக்கும் உமாபதியை காதலிப்பதோடு, அவருக்கு அவ்வபோது பண உதவியும் செய்கிறார்.

 

மிருதுல்லாவை உமாபதிக்கு தம்பி ராமையா பெண் கேட்க, அவரது அப்பாவான ஜெயப்பிரகாஷ், தம்பி ராமைய்யாவின் ஊதாரித்தனத்தை சுட்டிக்காட்டி பெண் கொடுக்க மறுப்பதோடு, அவமானப்படுத்தி விடுகிறார். இதனால் எப்படியாவது பணம் சம்பாதித்து காதலியை கரம் பிடிக்க வேண்டும் என்று உமாபதி நினைக்க, அதற்கான யோசனையை அவரது காதலியே அவருக்கு சொல்கிறார்.

 

அதன்படி, காற்றாலை தொழிற்சாலையை நிறுவ முடிவு செய்யும் உமாபதி, அதற்கு தேவைப்படும் பணத்தை கிரவுட் பண்டிங் என்ற முறையில், தனது ஊர் மக்களிடம் இருந்து ஆளுக்கு ரூ.10 ஆயிரம் என்ற விதத்தில் ரூ.1 கோடியை திரட்டுகிறார். அந்த பணத்தை வங்கியில் செலுத்த செல்லும் போது, அவரிடம் இருந்து பணம் திருடப்பட்டு விடுகிறது. பணம் பறிபோன விஷயம் தெரிந்ததும் ஊர் மக்கள் உமாபதியின் குடும்பத்தை வீட்டுக்குள் வைத்து பூட்டி விடுகிறார்கள். பணத்தோடு வந்தால் தான் குடும்பத்தை விடுவோம் என்று கூற, தனது ஒரு கோடி ரூபாயை தேடி செல்லும் உமாபதி, அதை மீட்டாரா இல்லையா, அந்த பணத்தை திருடியது யார், என்பது தான் ‘மணியார் குடும்பம்’ படத்தின் மீதிக்கதை.

 

காதல், செண்டிமெண்ட், சஸ்பென்ஸ், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தையும் அளவாக சேர்த்து முழு கமர்ஷியல் படமாக இப்படத்தை தம்பி ராமைய்யா கொடுத்திருக்கிறார்.

 

ஹீரோ உமாபதி ஆக்‌ஷன், நடனம் என்று ஹீரோவுக்கு தேவையான அத்தனை அம்சங்களிலும் ஜொலிப்பதோடு தனது நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். கமர்ஷியல் படங்களில் ஹீரோயின்கள் எதற்கு தேவைப்படுவார்களோ, அதற்கு தான் மிருதுலா முரளியும் தேவைப்பட்டிருக்கிறார். மற்றபடி அவரை பற்றி சொல்ல பெருஷா ஒன்னும் இல்லை.

 

உமாபதி ஹீரோ என்றால் தம்பி ராமைய்யா இன்னொரு ஹீரோவைப் போல படத்தில் வலம் வருவதோடு, நீளமான காட்சிகளில் நடித்து, தான் தேசிய விருது வாங்கிய நடிகர் என்பதை நமக்கு நினைவு படுத்துகிறார். பவன், மொட்டை ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, ஜெயபிரகாஷ் என படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களது பணியை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

 

தம்பி ராமைய்யா இயக்குநர் பணியுடன் இசை பணியையும் சேர்த்து செய்திருக்கிறார். பரவாயில்ல, பாடல்களில் ஆட்டம் போட வைத்துவிடுகிறார். பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவும் ஓகே தான்.

 

Maniyar Kudumbam Movie Review

 

தனது மகனை ஹீரோவாக வைத்து படம் எடுத்தாலும் அவருக்கான படமாக அல்லாமல் அவரை கதைக்கான நாயகனாகவே தம்பி ராமைய்யா காட்டியுள்ளார். புதுஷா எதையும் செய்ய முயற்சிக்காமல், பழசாக இருந்தாலும் அதை பக்குவமாக கையாண்டிருக்கும் இயக்குநர் தம்பி ராமைய்யா, அனைத்து தரப்பினருக்குமான பொழுதுபோக்கு படமாக இருக்க வேண்டும் என்பதில் ரொம்ப கவனமாக இருந்திருக்கிறார். 

 

படத்தில் காமெடியை திணிக்காமல் கதையுடன் ஒட்டி வருவது போல அமைத்திருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. அதேபோல், எதற்கும் கவலைப்படாமல் ரொம்ப வெகுளித்தனமாக இருக்கும் தம்பி ராமைய்யாவின் கதாபாத்திரமும் ரசிக்கும்படி இருக்கிறது. ஆனால், சில இடங்களில் கொஞ்சம் ஓவர் டோசாக இருக்கும் அந்த கதாபாத்திரம், சில இடங்களில் நமக்கு காதில் பூவும் சுத்துகிறது.

 

குத்து பாட்டு, காதல் பாட்டு, கிளைமாக்ஸுக்கு முன்பாக ஒரு பாஸ்ட் பீட் பாட்டு, இரண்டு சண்டைக்காட்சிகள், சில காமெடி காட்சிகள், சில செண்டிமெண்ட் என்று பழைய சினிமா பாணியை கையாண்டிருந்தாலும், திரைக்கதையை சிதைக்காமல், தான் சொல்ல வந்ததை இயக்குநர் தம்பி ராமைய்யா கமர்ஷியலாக சொல்லியிருக்கிறார். 

 

மொத்தத்தில், ‘மணியார் குடும்பம்’ குடும்பத்தோடு பார்க்கும் ஒரு நியாயமான கமர்ஷியல் படமாக இருக்கிறது.

 

ரேட்டிங் 2.5/5