Aug 02, 2025 07:58 PM

’மீஷா’ (மீசை) திரைப்பட விமர்சனம்

6bd756f4ee29bd1bbdf37a507819d519.jpg

Casting : Kathir, Hakkim Shah, Jeo Baby, Shine Tom Chacko

Directed By : Emcy Joseph

Music By : Sooraj S. Kurup

Produced By : Sajeer Gafoor

 

சாதி, மதம் ஆகியவற்றின் மூலம் மக்களை பிளவுப்படுத்தி அரசியல் கட்சிகள் எப்படி ஆதாயம் தேடிக் கொள்கிறது, என்பதை இரண்டு நண்பர்களை மையமாக கொண்டு சொல்வதே ‘மீஷா’.

 

வெவ்வேறு சாதியை சேர்ந்த கதிர் மற்றும் ஹக்கிம் ஷா பள்ளி காலத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருப்பதோடு, அரசியல் கட்சி ஒன்றில் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த கட்சி ஆதாயத்திற்காக தங்களை பயன்படுத்திக் கொள்வதோடு, மக்களுக்கு கிடைக்க கூடிய வசதிகளை தடுத்து, அதன் மூலமும் ஆதாயம் தேடுவதை அறிந்துக் கொள்ளும் கதிர், கட்சியை எதிர்த்து மக்களை ஒன்று சேர்க்க முயற்சிக்கிறார். கதிரை கட்டுப்படுத்துவதற்காக அரசியல்வாதிகள் விரிக்கும் சதி வலையில், இரண்டு நண்பர்கள் சிக்கிக்கொள்ள, அதன் மூலம் அவர்களது வாழ்க்கை என்னவானது? என்பதை அடர்ந்த  வனப்பகுதியில் நடக்கும் பரபரப்பான கதை மற்றும் சமூக அரசியல் பின்னணியோடு சொல்வதே ‘மீஷா’.

 

மலையாள சினிமாவில் அறிமுகமாகியிருக்கும் கதிர், முதல் படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அமர்க்களப்படுத்தி இருக்கிறார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, துரோகத்தின் வலியால் துடிக்கும் காட்சிகளில் உணர்ச்சிப்பூர்வமாக நடித்திருக்கும் கதிர், வசன உச்சரிப்பு, உடல் மொழி ஆகியவற்றின் மூலம் மிதுன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை எளிதில் ஈர்த்து விடுகிறார்.

 

கதிரின் நண்பராக மற்றொரு ஹீரோவாக நடித்திருக்கும் ஹக்கிம் ஷா, அளவாக நடித்திருந்தாலும், எக்ஸ்பிரஷன் மூலமாகவே தனது  உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். படம் முழுவதும் அமைதியாக இருப்பவர், தனது நண்பருக்கு நேர்ந்த கொடூரத்தை சொல்லி அழும் கிளைமாக்ஸ் காட்சியில் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.

 

வேட்டைக்காரராக நடித்திருக்கும் சைன் டாம் சாக்கோ, சுதி கொப்பா, அரசியல்வாதியாக நடித்திருக்கும் ஜியோ பேபி ஆகியோரது திரை இருப்பு மற்றும் நடிப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

 

இசையமைப்பாளர் சூரஜ் எஸ்.குரூப், டைடில் கார்டிலேயே இசை யார் ? என்று கேட்கும் அளவுக்கு பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டிலும் அசத்தியிருக்கிறார். வித்தியாசமான சப்தங்கள் மூலம் வனப்பகுதி காட்சிகளில் பார்வையாளர்களை மிரள செய்திருக்கிறார்.

 

ஒளிப்பதிவாளர் சுரேஷ் ராஜன், வனப்பகுதி அழகை மட்டும் இன்றி அங்கு மறைந்திருக்கும் ஆபத்துகளையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக வனப்பகுதியின் காலநிலை மாற்றங்களை கச்சிதமாக படாக்கி அதன் மூலம் பார்வையாளர்களை பதற்றமடைய செய்திருக்கிறார்.

 

நட்பு மற்றும் சமூக அரசியல் பேசும் கதையை, நான் லீனர் முறையில் சொல்லி படத்தொகுப்பாளர் மனோஜ், படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.

 

நட்பை கருவாக வைத்துக்கொண்டு திரைக்கதையில் சமூக அரசியல் பேசியிருக்கும் இயக்குநர் எம்சி ஜோசப், உடன் இருப்பவர்களின் துரோகங்களினால் தான் மக்கள் தலைவர்கள் வீழ்த்தப்படுகிறார்கள், என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். 

 

வனப்பகுதி பயணம் மற்றும் அரசியல் பயணம் என்று முதல் பாதி படம் விறுவிறுப்பாகவும், எதிர்பார்ப்புடனும் பயணிக்கிறது. இரண்டாம் பாதியில் அதே விறுவிறுப்பு இருந்திருந்தால் படம் நிச்சயம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும்.

 

மொத்தத்தில், ‘மீஷா’ (மீசை) முறுக்கி விடலாம்.

 

ரேட்டிங் 3.25/5