‘நாளை நமதே’ திரைப்பட விமர்சனம்

Casting : Madhumitha, Velmurugan, Rajalingam, Senthil Kumar, Murugesan, Marikkannu, Covai Uma
Directed By : Venba Kathiresan
Music By : V.H.Harikrishnan
Produced By : Sri Durga Creations - V.Ravichandran
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றின் பஞ்சாயத்து தொகுதி பட்டியல் சாதியினருக்கானதாக அறிவிக்கப்படுகிறது. இதையடுத்து தலைவர் பதவிக்கு பட்டியல் சாதியினர் ஒருவர் போட்டியிட, அதை ஏற்றுக்கொள்ளாத வேறு சாதியினர் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நபர் உள்ளிட்ட பலரை கொலை செய்வதோடு, ஊரில் பெரிய கலவரத்தை தூண்டி விடுகிறார்கள். இதனால் அந்த தொகுதி மீண்டும் பொது தொகுதியாக அறிவிக்கப்படுகிறது. இதனால், தலைவராக குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே 15 ஆண்டுகளாக இருந்தாலும் வளர்ச்சி இன்றி இருக்கும் அந்த கிராம பஞ்சாயத்து தொகுதி மீண்டும் பட்டியல் சாதியினருக்கானதாக அறிவிக்கப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கசப்பான சம்பவத்தால், தேர்தலில் போட்டியிட பட்டியல் சாதியினர் தரப்பு விரும்பாத நிலையில், அந்த சாதியை சேர்ந்த நாயகி மதுமிதா தேர்தலில் போட்டியிட முடிவு செய்கிறார்.
அவருக்கு வழக்கும் போல் பலவிதமான மிரட்டல்கள் வர, அனைத்தையும் கடந்து, தேர்தலில் நிச்சயம் போட்டியிட்டே தீருவேன், என்பதில் உறுதியாக இருக்கும் மதுமிதா, எத்தகைய சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொள்கிறார், அவர் நினைத்தது போல் தேர்தல் நடந்ததா?, அவர் வெற்றி பெற்றாரா? என்பதை உண்மை சம்பவங்களின் பின்னணியோடு சொல்வதே ‘நாளை நமதே’.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் மதுமிதா, மண் சார்ந்த முகமாகவும், நடிப்பில் தீயாகவும் படத்தை தன் தோளில் சுமந்திருக்கிறார். எத்தனை பிரச்சனை வந்தாலும், அவற்றை எதிர்கொள்ளும் அவரது பயணமும், எதிர்ப்புகளை கடந்து போகும் போரட்ட குணமும் மற்றவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் உள்ளது. அழுத்தமான கதாபாத்திரத்தை மிக அருமையாக கையாண்டிருக்கும் மதுமிதாவின் துடிப்பான நடிப்புக்கு விருது நிச்சயம்.
வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில் குமார், முருகேசன், மாரிக்கண்ணு, கோவை உமா மற்றும் கிராமத்து மக்களாக நடித்த நடிகர், நடிகைகள் என அனைவரும் மண்ணின் மைந்தர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரவீன் கதைக்களத்தையும், கதை மாந்தர்களையும் இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். இதனால், படம் பார்க்கும் உணர்வை கடந்து, ஒரு சம்பவத்தை நேரில் பார்த்த அனுபவத்தை காட்சிகள் கொடுக்கிறது.
இசையமைப்பாளர் வி.ஜி.ஹரிகிருஷ்ணனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்களத்திற்கு வலிமை சேர்க்கும் விதமாக பயணித்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் வெண்பா கதிரேசன், இட ஒதுக்கீடு மூலம், சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு அரசியலில் பங்கேற்கவும், தங்கள் உரிமைகளை நிலைநாட்டவும் வாய்ப்பு கிடைத்தாலும், அந்த வாய்ப்பை தட்டிப் பறித்து, தங்களது அதிகார திமிரை அவர்கள் மீது திணிக்க முயற்சிப்பவர்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.
சாதி பிரிவினை மற்றும் சாதி ரீதியிலான ஒடுக்குமுறை பற்றி படம் பேசினாலும், அரசு திட்டங்களை சரியாக பயன்படுத்தாமல், இன்னும் வளர்ச்சியின்றி இருக்கும் கிராமங்களை சுட்டிக்காட்டும் விதமாகவும், தனிநபர் சுயநலத்திற்காக சாதி எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
அரசியல் ரீதியிலான காட்சிகள் மற்றும் வசனங்கள் அனைத்தும் கூர்மையாகவும், கைதட்டல் பெறும் விதமாகவும் இருக்கிறது. சாதியை மையப்படுத்திய படம் என்றாலே, ஒரு சாரார் ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஒரு சூழலில், அனைத்து தரப்பினரையும் யோசிக்க வைக்கும் ஒரு கேள்வியை இயக்குநர் முன் வைக்கிறார். அந்த கேள்வியை மையப்படுத்திய இந்த பயணம், பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி சொல்வதோடு, சமூக அரசியலை தெளிவாக பேசி மக்களை எழுச்சியடைய செய்யும் விதமாகவும் பயணிக்கிறது.
மொத்தத்தில், ‘நாளை நமதே’ அரசியல் பேசும் அழுத்தமான படைப்பு.
ரேட்டிங் 3.5/5