Aug 17, 2018 01:36 PM

’ஓடு ராஜா ஓடு’ விமர்சனம்

f192f9247d97b43d721ce632a7d5e400.jpg

Casting : Guru Somasundaram, Anandsami, Nazar, Lakshmi Priya, Ashiqa Salvam

Directed By : Nishanth Ravindran and Jathin Sankar Raj

Music By : Tosh Nanda

Produced By : Vijay Moolan

 

‘ஜோக்கர்’ படத்திற்குப் பிறகு குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த ‘ஓடு ராஜா ஓடு’ படம் எப்படி என்பதை பார்ப்போம்.

 

இந்த படத்தோட கதையை சொல்லி புரிய வைக்க முடியாது, திரையில் பார்த்து தான் புரிந்துக் கொள்ள முடியும். கதையும் புதுசு என்றெல்லாம் சொல்ல முடியாது. நான்கு வெவ்வேறு கதைகள், அந்த கதைகளில் வரும் கதாபாத்திரங்களுக்கு சில தேடல்கள், அதை தேடி செல்லும் போது, சம்மந்தமில்லாத கதைகளும், அதில் வரும் சம்மந்தமில்லாத கதாபாத்திரங்களும், ஒன்றுடன் ஒன்று தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள, அதன் மூலம் ஏற்படும் குழப்பங்களும், பாதிப்புகளும், பிறகு அவற்றுக்கான தீர்வும் தான் படத்தின் கதை.

 

பெரிய கதையாசிரியர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தில் மனைவியின் சம்பாத்தியத்தில் வாழ்க்கை ஓட்டும் குரு சோமசுந்தரம், தனது மனைவி கொடுத்த பணத்தை எடுத்துக் கொண்டு செட்டப் பாக்ஸ் வாங்க தனது நண்பரை அழைத்துக் கொண்டு செல்கிறார். கடை திறக்கப்படாததால், கடை வாசலில் இருவரும் காத்திருக்க, அங்கே குரு சோமசுந்தரத்தின் நண்பரை பார்க்க வரும் ஒரு நபரால், குரு சோமசுந்தரத்தின் பணம் பறிபோகிறது. அந்த பணத்தை தேடி போகும் குரு சோமசுந்தரம், அந்த இடத்தில் இன்னும் ஒரு பிரச்சினையில் சிக்க ஓடு...ஒடு...என்று ஓட, அவரைப் போலவே வேறு சிலரும் ஓடு...ஒடு...என்று ஓட, சிலரோ துரத்து...துரத்து...என்று துரத்துகிறார்கள்.

 

ஒடுபவர்களது ஓட்டம் நின்றதா? துரத்துபவர்கள் நின்றார்களா? இவர்களது பின்னணி என்ன? இவர்களது ஓட்டத்திற்கும், துரத்தலுக்கு என்ன காரணம், என்பது தான் படத்தின் கதை மற்றும் க்ளைமாக்ஸ்.

 

இதுபோன்ற கதையம்சம் கொண்ட படங்கள் சில தமிழ் சினிமாவில் வந்திருந்தாலும், ஒவ்வொன்றும் திரைக்கதையின் பலத்தால் ஜெயித்திருக்கிறது. அந்த வகையில், இந்த ‘ஓடு ராஜா ஓடு’ படமும் திரைக்கதையில் வித்தியாசத்தை காட்டியிருக்கிறது.

 

குரு சோமசுந்தரம், நாசர், அனந்த்சாமி, ரவீந்திர விஜய், லக்‌ஷ்மி ப்ரியா சந்திரமெளலி, சோனா என்று படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். அதிலும் அனந்த்சாமியின் காதலியாக வரும் அஷிகா ஷால்வம் கவனிக்க வைக்கிறார். 

 

டோஷ் நந்தாவின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை என்றாலும் பின்னணி இசையில் சபாஷ் பெற்றுவிடுகிறார். அதேபோல் ஜஸ்டின் சங்கர் ராஜ் மற்றும் சுனில் சி.கே ஆகியோரது ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

இயக்குநர்கள் நிதிஷ் ரவிந்திரன் மற்றும் ஜஸ்டின் சங்கர் ராஜ் இருவரும் திரைக்கதையை கையாண்ட விதம் ரொம்ப நேர்த்தியாக இருந்தாலும், அதை காட்சிப்படுத்திய விதத்தில், வித்தியாசம் என்ற பெயரில் நிறைய குழப்பத்தை கொடுத்திருக்கிறார்கள்.

 

தொடர்பில்லாத நான்கு கதைகளுக்கும் தொடர்பு ஏற்படுத்துவதை ஆரம்பத்தில் காட்டாமல், அதை இரண்டாம் பாதியில் விளக்கமாக கட்டுவது சுவாரஸ்யமாக இருந்தாலும், காட்சியிலேயே அந்த கதையில் ஒரு ஷாட், இந்த கதையில் ஒரு ஷாட் என்று கட் பண்ணி காட்டுவது ரசிகர்களை குழப்பமடைய செய்வதோடு, எரிச்சலடையவும் செய்கிறது.

 

இருப்பினும் படத்தில் டார்க் காமெடி போஷன் சிரிக்க வைப்பதோடு, நடிகர்களின் நடிப்பும் கதாபாத்திர வடிவமைப்பும் ரசிக்க வைக்கிறது.

 

மொத்தத்தில், தமிழ் ரசிகர்கள் ஏற்கனவே பார்த்த ஜானராக இருந்தாலும், அதை கையாண்ட விதத்தில் புதிய யுக்தியை கையாண்டிருக்கும் இந்த ‘ஓடு ராஜா ஓடு’ படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

 

ரேட்டிங் 3/5