‘வானரன்’ திரைப்பட விமர்சனம்

Casting : Bijesh Nagesh, Akshaya, Lollu Saba Jeeva, Deepa Sankar, Baby Varsha, Nanjil Vijayan, SL Balaji, Namakkal Vijayakanth, Junior TR, Venkatraj, Vedi Kannan
Directed By : Sriram Padmanaban
Music By : Shajahan
Produced By : Orange Pictures - Rajesh Padmanaban
நாயகன் பிஜேஷ் நாகேஷ், ஆஞ்சநேயர் வேடம் போட்டு வீதி வீதியாக சென்று காணிக்கை பெற்று வாழ்க்கை ஓட்டுகிறார். வறுமையான வாழ்க்கை என்றாலும், அவரது வாழ்க்கையிலும் காதல், கல்யாணம் என்ற வசந்தம் பிறக்கிறது. ஆனால், அது நிலைக்காமல் அவரது மனைவி குழந்தை பிறப்புக்குப் பிறகு இறந்து விடுகிறார். தனது மகள் தான் உலகம் என்று வாழும் பிஜேஷ் நாகேஷை வறுமை வாட்டுகிறது. இதனால் மகளின் சிறு சிறு ஆசைகளை கூட நிறைவேற்ற முடியாமல் கஷ்ட்டப்படுகிறார். இதற்கிடையே, அவரது மகளுக்கு உடல் நிலை பாதிக்கப்பட, சிகிச்சைக்கு பல லட்சங்கள் செலவாகும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். மகளை காப்பாற்றும் போராட்டத்தில் பிஜேஷ் நாகேஷ் வென்றாரா ? அல்லது வறுமை அவரை வென்றதா ? என்பதை வறுமையின் வலியை உணரும் படி சொல்வதே ‘வானரன்’.
நாயகனாக நடித்திருக்கும் பிஜேஷ் நாகேஷ், அப்பாவியான முகம், வெள்ளந்தியான நடிப்பு என அனுமந்தராவ் என்ற பரிதாபமான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். உருவத்தில் மட்டும் இன்றி நடிப்பின் மூலமாகவும் தனது கதாபாத்திரத்தின் மீது பரிதாபம் ஏற்பட வைப்பவர், மகளுக்காக கலங்கும் காட்சிகளில் பார்வையாளர்களையும் கலங்க வைத்து விடுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அக்ஷயா ஒரு பாடல், சில காட்சிகள் வந்தாலும் தனது பணியை குறையின்றி செய்திருக்கிறார்.
நாயகனின் மகளாக நடித்திருக்கும் விஜய் டிவி புகழ் சிறுமி வர்ஷா, முதல் படம் போல் அல்லாமல் கேமராவை மிக தைரியமாகவும், சாதாரணமாகவும் எதிர்கொண்டிருக்கிறார். வசன உச்சரிப்பு, உடல் மொழி என சிறுமியின் திரை இருப்பு படத்திற்கு தனி சிறப்பு சேர்த்திருக்கிறது.
விஜயகாந்தின் ஜெராக்ஸ் நாமக்கல் விஜயகாந்த், உருவத்தில் மட்டும் அல்ல ஒவ்வொரு அசைவுகளிலும் விஜயாகந்தை மீண்டும் நம் கண் முன் நிறுத்தி விடுகிறார். ஜூனியர் டி.ஆர் நடிப்பும் ஓகே தான்.
தீபா சங்கர் மற்றும் நாஞ்சில் விஜயன் கூட்டணி காட்சிகள் குறைவு என்றாலும், அதிகம் சிரிக்க வைக்கிறார்கள். பழைய நினைவுகளுடன் வலம் வரும் இயக்குநராக நடித்திருக்கும் வெடிக்கண்ணனும் கவனிக்க வைக்கிறார்.
ஆதேஷ் பாலா, எஸ்.எல்.பாலாஜி, லொள்ளு சபா ஜீவா, வெங்கட்ராஜ், சிவகுரு, ராம்ராஜ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் மனிதம் நிறைந்த மக்களாக வலம் வருகிறார்கள்.
ஷாஜகான் இசையில், செந்தமிழ் வரிகளில் பாடல்கள் அனைத்தும் இனிமையாகவும், கதைக்களத்தை விவரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப அமைந்திருக்கிறது.
நிரன் சந்தரின் ஒளிப்பதிவு எளிமையாக இருந்தாலும், கதை மாந்தர்களின் உணர்வுகளை மக்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் ஸ்ரீராம் பத்மநாபன், பகல் வேஷம் என்னும் கலையை பின் தொடரும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட கடவுள் வேடம் அணிபவர்களின் வாழ்வியல் மற்றும் அவர்களின் வறுமையோடு, தந்தை - மகள் உறவின் ஆழத்தையும், அழகியலையும் மனதுக்கு நெருக்கமாக சொல்லியிருக்கிறார்.
தற்போதைய அவசர உலகத்தில், மனிதம் மறையவில்லை என்பதை சில கதாபாத்திரங்களின் மூலம் சொல்லியிருக்கும் இயக்குநர் ஸ்ரீராம் பத்மநாபன், வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தாலும், நேர்மையாக வாழும் சாதாரண மனிதர்கள் மீது மக்கள் கவனம் திரும்பும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
கடவுள் வேடம் அணிந்து வருபவர்களை மிக சாதாரணமாக கடந்து செல்லும் நமக்கு, அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது, என்று யோசிக்க வைத்திருப்பதோடு, அதை அழுத்தமான திரைக்கதையோடு சொல்லியிருக்கும் இயக்குநர் ஸ்ரீராம் பத்மநாபன், அதனுடன் பல பாசிட்டிவான விசயங்களை பேசி படத்தை ரசிக்கவும் வைத்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘வானரன்’ வாழ்வியல் பதிவு.
ரேட்டிங் 3.2/5