Apr 06, 2018 10:23 AM

மாணவர்களின் கலைத்திறமையை ஊக்குவிக்கும் வேலம்மாள் பன்னாட்டு பள்ளி!

89de0ded6512b561a7aabd9b51355393.jpg

குழந்தைகள் தங்களுக்கு தோன்றியதை வரைவதை நம்மில் பலர் கிறுக்கல்கள் என்கிறோம்.. காரணம் அழகாக இருந்தால் தான் அதை ஓவியம் என்கிறோம். ஆனால் அவை வெறும் கிறுக்கல்கள் அல்ல, குழந்தைகள் தங்கள் உணர்வை வெளிப்படுத்தும் ஓவியங்களே. அவர்களின் கோபம், சந்தோசம், பெருமிதம், துக்கம் என்கிற கலவையான உணர்வுகளின் பிரதிபலிப்பு தான் அந்த கிறுக்கல்கள், இல்லையில்லை.. ஓவியங்கள்.

 

அப்படி மாணவர்களுக்குள் இருக்கும் தனித்திறனை அவர்களது சிறுவயதில் இருந்தே இனங்கண்டு வெளிக்கொணரும் முயற்சியில் வேலம்மாள் பன்னாட்டு பள்ளி தன்னிகரற்று விளங்கி வருகிறது. மேலும் வேலம்மாள் பன்னாட்டு பள்ளியில் செயல்படும் ‘சித்ராவதி’ என்கிற ஓவிய கலைக்கூடம் மாணவர்களின் அறிவார்ந்த சிந்தனை ஆற்றலை வெள்ளிக்கொணர்ந்து, எதிர்காலத்தில் அவர்களை மாபெரும் கலைஞனாக உருவாக்க பாதை அமைத்து கொடுக்கிறது.

 

அந்தவகையில் மாணவர்களின் ஓவியத்திறனை வெளிக்கொணரும் விதமாக ஏப்-5 முதல் ஏப்-1௦ வரை ஒரு ஓவிய கண்காட்சியை நடத்துகிறது. சென்னையில் உள்ள லலித்கலா அகாடமியில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியின் துவக்க நாளான இன்று சிறப்பு விருந்தினர்களாக புகழ்பெற்ற திரைப்பட ஓவியக்கலைஞர் ட்ராட்ஸ்கி மருது, ஓவியக்கலைஞர் டிவி.சந்தோஷ் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களை ஊக்கமும் உற்சாகமும் படுத்தினார்கள்.

 

ஓவியக்கலைஞர் திரு சந்தோஷ் அவர்கள் பேசும்போது, ‘நாம் உணர்வுகளை எண்ணங்களை என்னென்ன  விதமாக வெளிப்படுத்துகிறோமோ அவை எல்லாமே ஓவியம் தான். குழந்தையின் கிறுக்கல் கூட ஒரு ஓவியம் தான். ஓவியம் மூலம் கிரியேட்டிவிட்டி வளரும். ஒவ்வொரு துறையிலும் ஜொலிப்பவர்களுக்குள் எல்லாம் ஒரு கலை ஒளிந்துள்ளது. அது அனைவருக்கும் பொதுவானது’ என குறிப்பிட்டார்.

 

ஓவியர் ட்ராட்ஸ்கி மருது பேசும்போது, “நான் நான்கு வயதில் வரைய தொடங்கினேன்.. இப்போதுவரை வரைந்துகொண்டே இருக்கிறேன். என்னுடைய முழு வாழ்க்கையையும் ஓவியம் தான் நகர்த்தி செல்கிறது. அதனால் ஓவியக்கலை என்பதை சாதாரண விஷயமாக நாம் எடுத்துக்கொள்ள கூடாது. அது நம் வாழ்க்கையையே மாற்றக்கூடியது” என மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பேசினார்.

 

வேலம்மாள் பன்னாட்டு பள்ளியின் இயக்குனர் பேசும்போது, “பள்ளியில் உள்ள ஒரு துறையில், அது கணிதம், இயற்பியல் என எதுவாக இருந்தாலும் அதில் நாம் நமது தனித்திறமையை காட்டுகிறோம் என்றால் அதற்கு நிச்சயமாக ஏதோ ஒரு கிரியேட்டிவிட்டி தேவைப்படுகிறது. அதில் ஓவியக்கலை முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால்தான் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறோம்” என்றார்.

 

இந்த கண்காட்சியில் ஓவியங்கள், கைவினை பொருட்கள் கிட்டத்தட்ட 340 விதமான கலை பொருட்கள் இந்த கண்காட்சியில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆஸ்திரேலியாவில் இருந்து தலைசிறந்த மூன்று ஓவிய வல்லுனர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்களின் கலைத்திறமையை ஆய்வு செய்தனர்.  மாணவர்களின் ஒவ்வொரு ஓவியமும் அவர்களது ஒவ்வொரு விதமான உணர்வுகளை வெளிப்படுத்துவதாக தங்களது வியப்பை அவர்கள் தெரியப்படுத்தினார்கள்.

 

இனிவரும் நாட்களில் அதாவது வரும் ஏப்-7ஆம் தேதி அன்று சோழ மண்டல ஓவிய கலைஞர் பி.ஓ.சைலேஷ் அவர்களால் ஓவியம் சம்பந்தமான ஒருநாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட இருக்கிறது. இதில் வீனாகக்கூடிய பொருட்களை வைத்து எந்தவிதமாக நம் கலைத்திறமையை வெளிப்படுத்தலாம் என அவர் விளக்கவுள்ளார்.

 

ஏப்-8 ஆம் தேதி திரு. ஜானி எம்.எல் ‘குழந்தை ஓவியம் மற்றும் பயிற்சி’ என்னும் தலைப்பில் சொற்பொழிவு ஆற்றுகிறார்.

 

ஏப்-9 ஆம் தேதி திரு அப்ரஜித்தன் மாணவர்களுக்கு ஓவியக்கலையில் இருக்கு சந்தேகங்கள் குறித்து ஒரு வினாவிடை நிகழ்ச்சி நடத்துகிறார். .

 

ஏப்-1௦ ஆம் தேதி திருமதி அனிதா மேபல் மனோகர் (இயக்குனர் NIFT சென்னை), திரு MV முத்துராமலிங்கம்-நிறுவனர், திரு. MVM சசிகுமார் – இயக்குனர், திருமதி. கீதாஞ்சலி சசிகுமார் – கல்வி இயக்குனர் (வேலம்மாள் கல்வி குழுமம்) ஆகியோர் வருகை புரிந்து மாணவர்களின் திறன்களை பாராட்டி பரிசளிக்க உள்ளார்கள்.