Jan 09, 2019 09:02 AM

ஜவுளித் துறைக்கான ‘இளம்பெண் தொழில் அதிபர் சிறப்பு விருது’ வென்ற மைதிலி!

fc15481b4f9e6a09c4b17c759c2cd953.jpg

ஜவுளித் துறைக்கான இந்திய அரசின் இளம் பெண் தொழில் அதிபர் சிறப்பு விருது (Special Young Women Enterpreneur Award) பெங்களூரைச் சேர்ந்த திருமதி.மைதிலி அவர்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஞாற்றுக்கிழமை டெல்லியில் நடைபெற்ற விழாவில், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி, துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு ஆகியோர் இந்த விருதை மைதிலிக்கு வழங்கினார்கள்.

 

ஜவுளி தொழிலில் ஆண்டு தோறும் தொடர் வளர்ச்சியைப் பெறுவதோடு, சுற்றுச் சூழல் தூய்மை, ஊழியர் நலன், சமூக அக்கறை, தொலைநோக்குப் பார்வை போன்ற தகுதிகளைக் கொண்ட இளம் பெண் தொழில் அதிபர்களைத் தேர்ந்தெடுத்து, இந்திய அரசு ஆண்டு தோறும் இந்த விருதை வழங்கி வருகிறது.

 

2019 ஆம் ஆண்டுக்கான ஜவுளித்துறை ‘பெண் தொழிலதிபர்’ சிறப்பு விருதைப் பெற்றுள்ள மைதிலி, தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், குறைந்த முதலீட்டில் ‘விஷ்வா அப்பியரல்ஸ்’ ( Vishwaa Apparels) என்ற ஆடை தயாரிப்பு நிறுவனத்தை 2008 ஆம் ஆண்டு பெங்களூரில் தொடங்கினார். தனது அயராத உழைப்பினால் தற்போது ரூ.100 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்து வருகிறார்.

 

தனது நிறுவனத்தில் 90 சதவீதம் பெண் ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளார். 600 க்கும் மேற்பட்ட பெண்கள் இவரது நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். மூன்றில் ஒரு பங்கு லாபத் தொகையை நிறுவன ஊழியர் நலனுக்காகவே செலவிட்டு வருகிறார். கடைநிலை ஊழியர் தொடங்கி அனைத்து ஊழியர்களுக்கும் நிதி பகிர்ந்து அளிக்கப்படுவது வேறு எந்த நிறுவனத்திலும் இல்லாத அற்புத நிகழ்வாகும்.

 

ஆந்திர மாநிலம் கங்காவரம் மாவட்டத்தில், மேலும் 1500 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் புதிய ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க உள்ளார். அதற்கான கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. தனது அயராத பணிகளுக்கு இடையே பட்டப்படிப்பையும் (B.B.A.,) முடித்துள்ளார்.

 

தொழில் வளர்ச்சி மட்டுமல்லாமல், சமூக வளர்ச்சியிலும் தொடர் பங்களிப்பை அளித்து வரும் மைதிலி, அரசுப் பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்கள், இயற்கை விவசாயம், ஆன்மீக செயல்பாடுகள் மற்றும் மொழி வளர்ச்சிக்கு ஆண்டு தோறும் சிறப்பு நிதி வழங்கி வருகிறார்.

 

விருது பெற்றது குறித்து மைதிலி கூறுகையில், “என்னைப் போலவே உழைத்து முன்னேறத் துடிக்கும் அனைத்து பெண்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். என்னால் முடிந்தவரை பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பேன்.” என்றார்.