Jul 14, 2019 12:34 PM

தமிழக பா.ஜ.கவில் வரப்போகும் அதிரடி மாற்றம்! - இளைஞருக்கு வாய்ப்பு கொடுக்கும் தலைமை

23c865a7760dc89140e75f9c5f8c1ee3.jpg

மக்களவை தேர்தலுக்குப் பிறகு இந்திய அளவில் மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க விஸ்வரூபம் எடுத்தாலும், தமிழகத்தில் அக்கட்சியின் நிலை கேலி கூத்தாகத்தான் இருக்கிறது. தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்களில் ஓரளவு செல்வாக்கு பெற்று வரும் பா.ஜ.க தமிழகத்தில் மட்டும் ஜோக்கராகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையை மாற்றி, தமிழகத்திலும் தாமரையை மலர செய்ய வேண்டும் என்பது தான் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா போன்ற மூத்த தலைவர்களின் கனவாகவும் இருக்கிறது.

 

இந்த கனவை வெறும் கனவாக மட்டுமே இருந்துவிடாமல் அதை நிஜமாக்குவதற்காக பா.ஜ.க தலைமை தமிழகத்தில் பல அதிரடி மாற்றங்களை செய்ய இருக்கிறது. அதில் முதலாவது, தமிழக பா.ஜ.க தலைவர் பதவியின் மாற்றம் தான். ஆம், தற்போது தலைவராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தமிழகத்திற்கு தெரிந்த முகம் என்றாலும், தற்போது அவர் கேலி சித்திரமாக மாறிவிட்டதால், அவரை நீக்கிவிட்டு வேறு ஒருவருக்கு தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்பதில் பா.ஜ.க தலைமை மும்முரமாக இருக்கிறது.

 

அதன்படி, தமிழக பா.ஜ.க தலைவர் பதவிக்காக சிலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இது குறித்து தமிழக பாஜக நிலவரங்களை நன்கு அறிந்த  கட்சி நிர்வாகி ஒருவரிடம் பேசிய போது, 

”மற்ற மாநிலங்களை விட தமிழக அரசியல் நிலவரம் என்பது   வித்தியாசமானது. தமிழக பாஜக தலைவர் பதவி என்பது ஒரு முள்கிரீடம் போன்றது என்பதை மத்திய பாஜக வுக்கும் தெளிவா புரிஞ்சு இருக்கு. 

மக்களவை தேர்தல் தோல்வியால் தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் இல்லாமல் காணப்படுகிறது. கட்சியை மீட்டு கொண்டு வர்றதோட, தொண்டர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி கட்சிக்கு புது ரத்தம் புகுத்த வேண்டிய அவசியம் உள்ளதால் ஒரு நல்ல தலைமையை தமிழகத்துக்கு அமைத்து கொடுக்க வேண்டுமென  மத்திய பாஜக விரும்புகிறது. 

 

 

புதிதாக தேர்ந்து எடுக்கபடும் மாநில தலைவருக்கு பெரிய பொறுப்புகள் இருக்குறதுனால அதற்கு தகுதியான நபரா அவர் இருக்கணும்னு தலைமை விரும்புது .தமிழக பாஜக மூத்த தலைவர்கள் யாரும் மக்களை கவரும் முகமா இல்லை. அதுமட்டும் இல்லாம கட்சிக்குள்ளயே அனைவரையும் அனுசரித்து செல்பவராகவும், தமிழகத்தில் பாஜகாவுக்கு  என்று ஒரு முகம் வேண்டுமென்று சிலரை மத்திய தலைமையே தயார் செய்தும் வைத்து இருக்கிறது. யாருமே எதிர்பார்க்காத ஒருவரை தலைவராக அறிவிக்கவும் வாய்ப்பு இருக்கு. 

 

தற்போது வரைக்கும் மாநில தலைவருக்கான இந்த ரேசில் சி.பி.ராதாகிருஷ்ணன்,வானதி ஸ்ரீனிவாசன், கே.டி.ராகவன். ஏ.பி.முருகானந்தம், மதுரை ஸ்ரீனிவாசன் இந்த ஐந்து பேரும் பட்டியல்ல இருக்காங்க. 

 

இவங்கள்ல யாருக்கு வாய்ப்பு இருக்குன்னு பார்த்தால், சி.பி.ராதாகிருஷ்ணன் பொறுத்த வரைக்கும் ஏற்கனவே ஒரு முறை தலைவரா இருந்து இருக்கார். இது மட்டும் இல்லாம பல வருடங்களா கட்சியில் இருந்தாலும் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவரா அவர் மாறல. மக்களவை தேர்தல்ல தனக்கு  கட்டாயமா சீட் வேணும்ன்னு சண்டை போட்டு வாங்குனவரால ஜெயிக்க முடியல. தேர்தல் காலங்களில் மட்டுமே முகம் காட்டுபவர்  என்ற குற்றசாட்டும் இருக்குது. அதனால சி.பி.ராதாகிருஷ்ணனுக்கான வாய்ப்புகள் கம்மிதான்.

 

அடுத்ததா வானதி ஸ்ரீனிவாசனை பொறுத்த வரைக்கும் இந்த  தேர்தலில் பேட்டியிட கூட அவரால் சீட் வாங்க முடியாத நிலையில்  தான் இருக்காரு. அது மட்டுமில்லாம ஏற்கனவே பெண் ஒருத்தர் தலைவரா இருந்ததுனால மீண்டும் பெண் தலைவருக்கு வாய்ப்பு இல்லை

 

கே.டி.ராகவன் தொலைகாட்சி மூலமா ஓரளவு தெரிந்த முகமா இருந்தாலும், கட்சி தொண்டர்களோட அவருக்கு எந்த தொடர்பும் கிடையாது. அதவிட அவருக்கு பெரிய மைனஸ் ஜாதி. ஏற்கனவே பாஜகவிற்கு ஒரு  உயர்சாதி பிம்பம் இருப்பதால் அந்த ஜாதியை சார்ந்தவரை தலைவராக்கினால் தேவையில்லாத சர்ச்சை ஏற்படும்

 

அடுத்ததாக ஏ.பி.முருகானந்தம். கட்சியின் புதுமுகம். இளையவர். மோடி, அமித்ஷா நேரடி பார்வையில் இந்தியாவின்  பல்வேறு மாநிலங்களில்  தேர்தல் பணியாற்றியவர். பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களின் போரட்ட குழு தலைவராக செயல்பட்டவர். முக்கியமா மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் போரட்டங்களை வெற்றிகரமா நடத்தி காட்டி தலைமையின் பாராட்டை பெற்றவர். தமிழகத்தில் கட்சியில் உழைப்பவர்களுக்கு பொறுப்பு வழங்கனும்னு சொல்லி இங்குள்ள சில மூத்த தலைவர்களிடம் கொஞ்சம் கடினமாகவே கோரிக்கை வைத்தவர். அதனால் சிலர் இவருக்கு முட்டுகட்டை போடலாம். ஆனா  இளைஞர், புதியவர் ஒருவரை தலைவராக கொண்டுவர வேண்டும் என்று மத்திய தலைமை முடிவு எடுத்தால் அடுத்த தமிழக பாஜக மாநில தலைவராவதற்கு ஏ.பி.முருகானந்ததிற்கு வாய்ப்புகள் அதிகம்.

 

Muruganantham

 

இந்த ரேசில் கடைசியில் இருப்பவர் ஸ்ரீனிவாசன். கட்சி விதியின்படி தலைவர் பதவிக்கு போட்டியிடணும்னா கட்சி உறுப்பினர் ஆகி ஆறு’வருஷம் முடிஞ்சு இருக்கனும். மதுரை சேர்ந்த ஸ்ரீனிவாசன் கட்சிக்குள்ள வந்ததே  2016ல தான். 

 

புதிய மாநில தலைவர் தேர்வுக்கு அப்புறம் கட்சிக்குள் பல்வேறு அதிரடி மற்றங்கள் இருக்கும். இனிமேல் தமிழகத்தில் பாஜக புது ரூட்ல பயணிக்கும்.” என்று தற்போதைய நிலவரத்தை விரிவாக கூறினார்.

 

தமிழக பா.ஜ.க தலைவர் பதவி என்பது கம்பி மீது நடப்பது போன்ற கடினமான பணி என்றாலும், அதில் தங்களது திறமையை காட்டுபவர்களை அடையாளம் கண்டு, தமிழகத்தில் அழுத்தமாக கால் பதிப்பதே பா.ஜ.க தலைமையின் நீண்ட நாள் கனவு. அந்த கனவை நிஜமாக்குவதற்காக கட்சி தலைமை மேற்கொள்ள இருக்கும் புதிய நடவடிக்கைகளை திறம்பட செய்து, காமெடி செய்த மக்களிடம் கட்சியை கொண்டு சேர்ப்பது தான் புதிய தலைவருக்கு இருக்கும் முதலும், முக்கியமான சவாலும்.