Dec 04, 2018 06:42 AM

‘சென்னையில் திருவையாறு’ - டிசம்பர் 18 ஆம் தேதி தொடங்குகிறது

8c393685700e027019db88fe0fae5806.jpg

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகவும், சென்னையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகவும் மாறியுள்ள ‘சென்னையில் திருவையாறு’ கடந்த 13 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வந்த நிலையில், இந்த அண்டு 14 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

 

லக்‌ஷ்மன் ஸ்ருதி இசைக் குழுவின் ராமன் - லக்‌ஷ்மன் சகோதரர்களால் நடத்தப்பட்டு வரும் இந்த ‘சென்னையில் திருவையாறு’கர்நாடக இசையை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்த முக்கிய நிகழ்வாக உருவெடுத்திருப்பதோடு, ஒவ்வொரு ஆண்டும் அபரிவிதமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. மேலும், கர்நாடக இசையையும், இசைக் கலைஞர்களையும் கெளரவிப்பதோடு, பல புதியவர்களை அறிமுகப்படுத்தி அவர்களது திறமையை வெளி உலகம் அறிவதற்கான வழியையும் வகுத்து கொடுக்கிறது.

 

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ‘சென்னையில் திருவையாறு’ நிகழ்ச்சி வரும் டிசம்பர் 18 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது.

 

மூத்த இசைக் கலைஞர்களோடு புதுமுக இசைக் கலைஞர்களும் இணைந்து பங்கு பெறும் இந்த பிரம்மாண்ட இசை மற்றும் நாட்டிய விழாவான ‘சென்னையில் திருவையாறு’ டிசம்பர் 18 ஆம் தேதி காலை 11 மணிக்கு எஸ்.ஜெயராமனின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

 

 

”சென்னையில் திருவையாறு” துவக்க நாளான  டிசம்பர் 18 ஆம் தேதி மதியம் 3.00 மணிக்கு திருவையாறில் நடைபெறும் தியாகராஜ ஆராதனை விழாபோல் ஸ்ரீராமர், ஸ்ரீலஷ்மணர், ஸ்ரீசீதாபிராட்டியர், ஸ்ரீஅனுமன் ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் விக்ரகங்கள் மேடையில் அமைக்கப்பட்டு சிறப்பு சாஸ்த்ரிய சம்பிரதாய பூஜையுடன் காண்பதற்கரிய வைபவமாக துவங்குகிறது. 

 

மேலும், ஒரே மேடையில் ஐநூறுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் ‘பஞ்சரத்ன கீர்த்தனைகளை’ ஒன்றாகச் சேர்ந்து பாடுகின்றனர். பெரியவர், சிறியவர் என்ற வயது பேதமின்றி, புகழ் பெற்ற மற்றும் வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரும், ஆண், பெண் வித்தியாசமின்றி அனைத்து கர்நாடக சங்கீத இசைக் கலைஞர்களும் தங்கள் இசைக்கருவிகள் சகிதம் ஒன்றிணைந்து பாடி, தஞ்சை திருவையாறு ஆராதனை விழாவை நம் கண் முன்னே கொண்டு வருகிறார்கள்.

 

இந்நிகழ்வில் பங்கேற்கும் இசைக் கலைஞர்கள், பார்வையாளர்கள் உட்பட அனைவருக்கும் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பார்த்துப் பாடுவதற்காக, தியாகராஜரின் ஐந்து கீர்த்தனைகள் அடங்கிய புத்தகம், விழா துவங்கும் முன் வழங்கப்படும். பஞ்சரத்ன கீர்த்தனைகளை துல்லியமாக பாடும் குரல்வளம் பெற்றோரையும், இசைக்கும் திறமை பெற்றோரையும் இதில் கலந்து கொண்டு பாடுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

 

திருவையாறில் தியாகராஜ ஆராதனை விழாவுக்கு நேரில் சென்று காண இயலாத இசை ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் ‘சென்னையில் திருவையாறு’ துவக்க விழா நிகழ்வில் கலந்து கொண்டு பஞ்சரத்ன கீர்த்தனைகளைக் கேட்டு இறைவனருள் பெறலாம். இந்நிகழ்வுக்கு அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடும் வைபவம் நிறைவுற்றதும் சரியாக மாலை 4.45 மணிக்கு ‘சென்னையில் திருவையாறு’ சங்கீத வைபவத்தின் 14 ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெறும். இதில் சிறப்பு விருந்தினராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துக் கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார்.

 

துவக்க விழாவின் சிறப்பம்சமாக ஒவ்வொரு ஆண்டும் ’சென்னையில் திருவையாறு’ அமைப்பின் சார்பாக கர்நாடக சங்கீத மற்றும் நாட்டிய உலகின் தலைசிறந்த சாதனைக்கலைஞர் ஒருவருக்கு அவரது கலையுலக வாழ்நாள் சேவையையும் சாதனையையும் பாராட்டும் விதமாக ‘இசை ஆழ்வார்’ என்ற கெளரவ விருதை தங்கப்பதக்கத்துடன் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.

 

தவில் இசையில் பல சாதனைகளை செய்தவரும், இந்தியாவிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் முன்னணி இசைக் கலைஞர்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த வாத்திய இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ள பத்மஸ்ரீ ஹரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான இசை ஆழ்வார் விருது வழங்கப்படுகிறது. 

 

அதேபோல், தனது மெல்லிசையால் அனைவரது உள்ளங்களையும் ஆட்கொண்ட மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களை கெளரவிக்கும் வகையில், அவரது மெழுகுச்சிலை அமைக்கப்பட்டு திறக்கப்பட உள்ளது. பதமபூசன் அபிநய சரஸ்வதி சரோஜாதேவி இந்த சிலையை திறந்த் வைக்க உள்ளார்.

 

வளரும் இளம் கலைஞர்கள் மட்டுமல்லாது, தமிழ் இசையுலகில் இன்று நட்சத்திரங்களாகப் பிரகாசிக்கும் பிரபலங்களும் தங்களின் மானசீக குருவாக போற்றி வணங்கும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் திருவுருவ மெழுகுச் சிலையுடன் பொதுமக்களும், இசை ரசிகர்களும் புகைப்படம் எடுத்துக் கொள்ள காமராஜர் அரங்கின் நுழைவு மண்டபத்தில் வசதி செய்யப்படுகிறது.

 

கடந்த ஆண்டுகளில் பாரத ரத்னா ஏ.பி.ஜே.அப்துல்கலாம், பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாரத ரத்னா எம்.ஜி.ஆர் மற்றும் பத்மவிபூஷண் டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டு  ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

 

துவக்க விழாவினைத் தொடர்ந்து  மாலை 6.00 மணிக்கு கர்நாடக இசைக் கலைஞர் சுதா ராஜா, பியானோ அனில் ஸ்ரீனிவாசன், புல்லாங்குழல் சஷாங் குழவினரின் இசை நிகழ்ச்சியோடு ‘சென்னையில் திருவையாறு’ இசை நிகழ்வுகள் துவங்குகின்றன.