Nov 05, 2023 05:35 AM

விஜய் சேதுபதியை பாலிவுட்டில் அறிமுகப்படுத்திய ‘மும்பைகர்’! - கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிறது

43d6f6450b838de5f039a8b442877522.jpg

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, தற்போது தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பிஸியான நடிகராக வலம் வருபவர், வில்லன் வேடத்தில் மிரட்டலான நடிப்பு மூலம் அங்கேயும் தனக்கென்று தனிக்கென்று ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.

 

இந்த நிலையில், விஜய் சேதுபதியை பாலிவுட்டில் அறிமுகப்படுத்திய ‘மும்பைகர்’ திரைப்படம் தமிழில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இன்று (நவம்பர் 5) பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மூவி ஆஃப் தி மந்த் வரிசையில் ‘மும்பைகர்’ படத்தை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி இன்று ஒளிபரப்பு செய்கிறது.

 

புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படம், லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் தமிழ்ப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் திரைப்படமாகும். இதில் விஜய் சேதுபதி, விக்ராந்த் மாசே, ஹிருது ஹாரூண், ரன்வீர் ஷோரே, தன்யா மானிக்தலா, சஞ்சய் மிஸ்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

 

மும்பையின் பரபரப்பான தெருக்களின் பின்னணியில் அமைக்கப்பட்ட மும்பைகர் திரைப்படம், பல்வேறு தொடர்பற்ற கதாபாத்திரங்களின் வாழ்க்கையைப் பின்னிப் பிணைந்து சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. 24 மணி நேர காலகட்டத்தில் நடக்கும் பல நிகழ்வுகளை திடீரென ஒன்றிணைக்கும் முக்கிய கதாபாத்திரங்களின் பயணத்தை படம் விவரிக்கிறது. 

 

நகரம் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய கதாபாத்திரங்களின் பார்வையை மாற்றும் விதமாக கதை செல்கிறது. அதன் அழுத்தமான கதையுடன், திரைப்படம் பார்வையாளர்களை ஒரு அற்புதமான பயணத்திற்கு அழைத்துச் செல்வதாகவும், இந்தியாவின் கனவுகளின் நகரத்தின் அதிகம் அறியப்படாத பக்கங்களைக் காண்பிக்கும் என்றும் படம் உறுதியளிக்கிறது. ஜோதி தேஷ்பாண்டே மற்றும் ரியா ஷிபு ஆகியோர் இந்தத் திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர். 

 

படம் குறித்து நடிகர் விக்ராந்த் மாசே கூறுகையில், “விஜய் சேதுபதி சாருடன் படத்தில் இணைந்து நடித்ததில் முழு மகிழ்ச்சி அடைகிறேன். நான் சந்தோஷ் சிவன் சார் படங்கள் பார்த்து வளர்ந்தவன். நான் எப்போதும் அவருடைய பணிகளை, படங்களைப் பாராட்டியிருக்கிறேன். இப்போது அவருடைய இயக்கத்தில் நான் நடித்திருப்பது என்றென்றும் போற்றும் அனுபவமாக இருந்தது. எங்கள் சூப்பர் ஜோடியை தமிழக மக்கள் ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார். 

மும்பைகர் திரைப்படம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி கூறும்போது, “இந்திய நடிகர்களுக்கு இது ஒரு உற்சாகமான நேரமாக இருக்கிறது. பல்வேறு மொழிப் படங்களில் பணியாற்றும் வாய்ப்புகள் எங்களுக்கு வருகின்றன. வெப் சீரிஸில் நான் நடித்ததற்காக மக்களின் அன்பு, பாராட்டுகளை பெற்றுள்ளேன். இந்த திரைப்படம் எனது முதல் இந்தி திரைப்பட அறிமுகமாக அமைந்துள்ளது. இந்தத் திரைப்படத்தை தமிழில் வெளியாவதன் மூலம் தமிழ் ரசிகர்களின் கருத்துகளை நான் எதிர்பார்க்கிறேன். அவர்கள் அதை விரும்புவார்கள் மற்றும் பாராட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

 

 இயக்குநர்  சந்தோஷ் சிவன் கூறுகையில், “மீண்டும் ஒரு ஹிந்தி படத்தை இயக்கியது ஒரு பெரிய உணர்வாக அமைந்துள்ளது. மும்பைகர் திரைப்படம் என்பது ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த கதாபாத்திரங்களின் வாழ்க்கையின் மூலம் நகரத்தின் கண்ணோட்டத்தைத் தரும் படமாகும். மும்பை மாநகருக்கு என்று அதன் சொந்த தனித்துவம் உள்ளது. அதை இந்தப் படத்தின் மூலம் இணைக்க முயற்சித்தேன். திறமையான நடிகர்களுடன் ஒரே படத்தில் இணைந்தது ஆச்சரியமாக இருந்தது. நவம்பர் 5-ஆம் தேதி இந்தத் திரைப்படம் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாவதை நான் மகிழ்ச்சியுடன் எதிர்நோக்குகிறேன்” என்றார்.

 

விஜய் சேதுபதியின் பார்வையில் இருந்து மும்பைகர் கதையைச் சொல்லும் சென்னபட்னா டாய்ஸுடன் ஒரு சிறப்பு விளம்பரம் இந்தப் படத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது வைரலாக பரவி, படத்தின் மீது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.