Jul 30, 2019 05:42 PM

குடும்ப பிரச்சினையோடு, ஊர் பிரச்சினையையும் பேசும் ‘டும் டும் டும்’

5d39e9c7b3f0c1be890f6386fa8c59d9.jpg

கலைஞர் தொலைக்காட்சியின் புத்தாக்கத்தின் ஒரு பகுதியாக ’டும் டும் டும்’ என்ற நெடுந்தொடர் ஒன்று ஒளிபரப்பாக இருக்கிறது. நெல்லை மாவட்ட கிராமப் பின்னணியில் உருவாகும் இந்த தொடர்கதை சமுதாயத்தில் சமமான அந்தஸ்துள்ள இரு வளமான குடும்பங்களை மையப்படுத்தி நகர்கிறது. நட்பாக பழகி வந்த இரு குடும்பங்கள் முந்தைய தலைமுறை காதல் திருமணத்தால் பிரிவதுடன், அந்த ஊரையும் இரண்டாக பிளக்கிறது. அடிக்கடி இவர்களிடையே நடக்கும் பிரச்சனைகளால் உயிரிழப்புகளும் நிகழ்ந்து அந்த ஊர் மக்களை சோகத்தில் ஆழ்த்துகிறது. 

 

இதுபோன்ற அசம்பாவிதங்களை விரும்பாத அந்த குடும்பத்தின் மூத்தவர்கள் தங்களது குடும்பங்கள் மற்றும் ஊர் மக்களின் நலன் கருதி இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்கின்றனர். இதையடுத்து பிரச்சனையான இரு குடும்பங்களின் ஒரு இளம் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையாமல் தடைபட, பல்வேறு பிரச்சனைகளால் திருமணம் தள்ளிப்போக, ஊர் பகை கொழுந்துவிட்டு எரிகிறது. கடைசியில் அந்த இளம் ஜோடிக்கு ’டும் டும் டும்’ நடந்ததா? பிரிந்த குடும்பங்கள் ஒன்றாக இணைந்ததா? அந்த ஊரும், ஊர் மக்களின் கதியும் என்னவாயிற்று? என்பதே ’டும் டும் டும்’ தொடரின் கதைக்களம். 

 

வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் வாரந்தோறும் திங்கள்-வெள்ளி வரை மாலை 7.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த தொடரை வாட்இஃப் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க, ’நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தை இயக்கிய சிவா அரவிந்த் இயக்குகிறார். இதில் முன்னணி கதாபாத்திரத்தில் மிஸ்டர் சென்னை சூப்பர் மாடல் பட்டத்தை வென்ற மைக்கேல் நாயகனாகவும், சென்னை 28 பட பிரபலம் விஜயலட்சுமி அகத்தியன் கதையின் நாயகியாகவும் நடிக்கிறார்கள். 

 

இதுகுறித்து நடிகை விஜயலட்சுமி கூறும்போது, “இதுபோன்ற ஒரு கதையில் நடிக்க மிக ஆவலாக இருந்தேன். இந்த கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் கருதியே மற்ற தொலைக்காட்சிகளில் இருந்து வந்த வாய்ப்புகளை மறுத்து, இதில் நடிக்க ஒப்புக் கொண்டேன். இந்த கதையை கேட்ட உடனேயே எனக்கு பிடித்துவிட்டது. எனது திறமையை வெளிப்படுத்தி என்னை மீண்டும் நிரூபிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு” என்றார். 

 

Vijayalakshmi in Dum Dum Dum

 

அதே நேரத்தில் டும் டும் டும் தொடரை ஒளிபரப்புவதில் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகமும் அதீத மகிழ்ச்சியடைகிறது. இது குறித்து கலைஞர் தொலைக்காட்சியின் தலைமை நிதி அதிகாரி கார்த்திக் கூறும்போது, “புத்தாக்கத்தில் திட்டமிட்டபடியே நிகழ்ச்சிகள் அனைத்தும் தயாராகி வருவது எங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இது போன்ற தொடர்கள் மூலம் எங்களின் இந்த புத்தாக்கம் பெரு வெற்றி அடையும் நாள் தொலைவில் இல்லை” என்றார்.