Aug 14, 2023 06:44 AM

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சுதந்திர தின சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பாகும் ‘தக்ஸ்’!

a032160f6df67bfb35c0c626e6c24a18.jpg

பிரபல நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் உருவான ஆக்‌ஷன் காதல் திரைப்படமான ‘தக்ஸ்’ திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் சுதந்திர தின சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பாக உள்ளது.

 

ஆக்‌ஷன் நிறைந்த இந்தத் திரைப்படத்தில் அறிமுக நாயகனாக ஹிருது ஹாரூண் நடிக்க, அவருக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்திருக்கிறார். இவர்களுடன் பாபி சிம்ஹா, ஆர்.கே. சுரேஷ், முனீஷ்காந்த், உள்ளிட்டோர் பிரதான கேரக்டர்களில் தோன்றியுள்ளனர்.

 

படத்தை பிரபல டான்ஸ் மாஸ்டர் பிருந்தா கோபால் இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையமைக்க, பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹெச்ஆர் பிக்சர்ஸ் என்ற பேனரில் ஜியோ சினிமாவுடன் இணைந்து ரியா தமீன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். கன்னியாகுமரியைச் சேர்ந்த கேங்ஸ்டர்கள் சிலரின் வாழ்க்கைக் கதைதான் தக்ஸ் திரைப்படத்தின் கதையாகும். போலீஸ் - கிரிமினல் மோதலை அடிப்படையாகக் கொண்டு கதை நகர்கிறது.

கொலை வழக்கில் சேதுவுக்கு (ஹிருது ஹாரூண்) ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். நாகர்கோயிலிலுள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்படும் அவருடைய சிறை வாழ்க்கையின் முதல் நாளில், சில சிறைக்கைதிகள் சிறையிலிருந்து தப்புவதை, சிறை போலீஸாரின் உதவியுடன் தடுக்கிறார்.

 

இதன் விளைவாக, சிறையின் தலைமை வார்டன் ஆரோக்கிய தாஸ் (ஆர்.கே.சுரேஷ்) ஆதரவைப் பெறுகிறார். இருப்பினும், அவர் தனது திட்டத்தை கெடுத்துவிட்ட கும்பலால் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறார் ஹிருது ஹாரூன். மேலும் காதலிக்காக சிறையிலிருந்து தப்ப ஹிருது ஹாரூணும் முயற்சிக்கிறார்.

 

சிறையிலிருந்து தப்பிக்கும் திட்டத்தை சக சிறைக் கைதியான துரையிடம் (பாபி சிம்ஹா) சேது தெரிவிக்கிறார். ஆரம்பத்தில், துரை சிறையிலிருந்து தப்புவதற்கு ஆர்வம் காட்டவில்லை. ஆனால் அவர் வேலை செய்யும் மார்க்கெட்டில் தனது மனைவி ரவுடி கும்பல்களால் இரையாக்கப்படுவதை அறிந்ததும் சிறையிலிருந்து தப்பிக்க ஒப்புக்கொள்கிறார். இருப்பினும், சிறை அதிகாரிகள் அவரது அறையில் கஞ்சாவை கைப்பற்றியதும் துரை மிகவும் பாதுகாப்பான சிறைக்கு மாற்றப்படுகிறார். சேது, வேறு சில கைதிகளுடன் சேர்ந்து சிறையில் உள்ள கழிப்பறை வழியாக ஒரு சுரங்கம் வெட்டி, சிறை வளாகத்துக்கு வெளியே வரை தோண்டுகிறார். அவர்கள் ஒரு சுரங்கப்பாதையை கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கத் தொடங்குகின்றனர். தப்பிக்கும் நாள் நெருங்க நெருங்க, முன்னதாக தப்பிக்க முயன்ற கும்பலின் தலைவன் சேதுவின் அறைக்கு மாற்றப்படுகிறான். இதனால் அவர்கள் தப்பிக்கும் திட்டம் மேலும் சிக்கலாகிறது.

 

இருவரும் மோதிக் கொள்ளும்போது என்ன நடக்கிறது? துரையுடன் சேர்ந்து சேதுவும் சிறையிலிருந்து தப்பித்தாரா? சேது ஏன் கொலை செய்தார்? இதன் பின்னணிக் கதை என்ன? என்பதை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ திரைப்படத்தில் காணலாம்.

 

கலர்ஸ் டி.வியில் ஒளிபரப்பாகவுள்ள ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ படம் குறித்து டான்ஸ் மாஸ்டரும், திரைப்பட இயக்குநருமான பிருந்தா கூறும்போது, “நான் நீண்ட காலமாக இணைந்துள்ள கலர்ஸ் தமிழில் உலகத் தொலைக்காட்சியின் பிரீமியர் வரிசையில் எனது இரண்டாவது திரைப்படமான ‘தக்ஸ்’ திரையிடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் மீண்டும் எனது சொந்த வீட்டுக்குத் திரும்புவது போல் உணர்கிறேன். நாங்கள் அனைவரும் இந்த படத்துக்காக ஒரே ஷெட்யூலில் வேலை செய்துள்ளோம். மேலும் இந்த படம் ஹை-ஆக்டேன் ஆக்‌ஷனின் அற்புதமான கலவையை உறுதியளிக்கிறது என்று சொல்வேன். இது தொழில்நுட்ப ரீதியாகவும் வலிமையான படம் என்பதால் பார்வையாளர்களுக்கு திரில்லிங்கான அனுபவத்தை அளிக்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்” என்றார்.

 

படம் குறித்து ஹீரோ ஹிருது ஹாரூண் கூறும்போது, “தக்ஸ் எனது முதல் திரைப்படமாகும். இது எப்போதும் என் இதயத்துக்கு நெருக்கமாக இருக்கும். கலர்ஸ் தமிழில் அதன் தொலைக்காட்சி பிரீமியர் காட்சிக்காக தக்ஸ் படம் ஒளிபரப்பாவதில் நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். தோவாளையைச் சேர்ந்த அனாதையான சேது என்ற தலைசிறந்த கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளேன். இந்தக் கேரக்டருக்காக எனக்குக் கிடைத்த அன்பையும் பாராட்டுகளையும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. என்னுடைய கதாபாத்திரத்தை வடிவமைத்த இயக்குநர் மாஸ்டர் பிருந்தாவுக்கும், சேதுவை ஆதரித்த என் சக நடிகர்களான பாபி சிம்ஹா, முனீஷ்காந்த் ஆகியோருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். பார்வையாளர்கள் முரட்டுத்தனமான மற்றும் வன்முறை கதையை விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன். இந்தப் படத்தின் காட்சிகளால் அவர்கள் முழுவதும் கவர்ந்திழுக்கப்படுவார்கள் என்று நம்பிக்கை கொண்டுள்ளேன்” என்றார்.

 

சுதந்திர தினத்தையொட்டி 2023 ஆகஸ்ட் 15-ம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தக்ஸ் திரைப்படத்தைக் காணலாம்.