Dec 17, 2020 04:17 PM

”திறமைக்கு வாய்ப்பளிப்பதில் தமிழ் சினிமாவுக்கு தான் முதலிடம்” - ‘கடத்தல் காரன்’ தாமஸ் ஆண்டனி

32dfbdc66bd5dfb071aeff384ad291b8.jpg

Music By : 0

Produced By : 0

அறிமுக இயக்குநர் எஸ்.குமார் இயக்கத்தில், அறிமுக நடிகர்கள் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘கடத்தல் காரன்’. காமெடி கலந்த கமெர்ஷியல் திரைப்படமான இப்படத்தின் மூலம் பிரபல மலையாள நடிகர் தாமஸ் ஆண்டனி, தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

 

மோகன்லால், மம்மூட்டி, ஜெயராம், முகேஷ் என மலையாள முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்திருக்கும் தாமஸ் ஆண்டனி, ‘கடத்தல் காரன்’ படத்தில் ஊர் தலைவர் கதாப்பாத்திரத்தில் தனது கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்றவர், தொடர்ந்து தமிழ் சினிமாவில் பயணிக்க முடிவு செய்திருப்பவர், தனது சினிமா பயணம் குறித்து நம்மிடம் பகிர்ந்துக் கொண்டது இதோ, 

 

தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனது எப்படி?

 

மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது எனது பல நாள் கனவு. ஆனால், அதற்கான சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது தான் ‘கடத்தல் காரன்’ படத்தின் ஹீரோவுடன் சந்திப்பு ஏற்பட்டது. அவர் தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதற்காக, அதற்கான கதையை தேடிக்கொண்டிருந்த போது தான் என்னை சந்தித்தார். அதன் பிறகு கதை முழுவதுமாக உருவான போது, செல்வம் என்ற கதாப்பாத்திரத்தில் என்னையே நடிக்க வைத்துவிட்டனர். படம் முழுவதும் வரும் அந்த கதாப்பாத்திரம். நானும் எனது பங்கிற்கு நடித்துக் கொடுத்தேன். பலர் பாராட்டியது மகிழ்வாக இருக்கிறது. முதல் தமிழ் படத்திலேயே இவ்வளவு பெரிய கதாப்பாத்திரம் கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

 

சினிமாத்துறைக்கு வந்தது எப்படி?

 

நான் பள்ளியில் படிக்கும் போதே மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். பள்ளியிலும், கல்லூரியிலும் சிறந்த நடிகருக்கான விருதும் பெற்றுள்ளேன். கல்லூரி படிப்பை முடித்த பிறகு மேடை நாடகங்களில் தொடர்ந்து நடித்து வந்தேன். பிறகு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்ததால், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினேன். கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வருகிறேன். இதுவரை 1000 மேடை நாடகங்களில் நடித்திருப்பேன். சுமார் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். 

 

Actor Thomas Antony

 

நாடக நடிகராக பல கதாப்பாத்திரங்களில் நடித்த உங்களுக்கு சினிமாவில் நடிகராக அங்கீகாரம் கிடத்ததா?

 

இளம் வயதில் இருந்து மேடை நாடகங்களில் நடிப்பதால் ஹீரோ, வில்லன், காமெடி என அனைத்து கதாப்பாத்திரங்களிலும் நடித்திருக்கிறேன். ஆனால், சினிமாவை பொருத்தவரை எனக்கு இன்னும் சரியான கதாப்பாத்திரம் கிடைக்கவில்லை என்று தான் சொல்லுவேன். முன்னணி நடிகர்களின் படங்களில் நான் நடித்தாலும், என் நடிப்பு திறமையை வெளிக்காட்டும் விதத்தில் ஒரு கதாப்பாத்திரம் இதுவரை எனக்கு மலையாள சினிமாவில் கிடைக்காதது சற்று வருத்தமாகவே உள்ளது. ஆனால், நல்ல நடிகர் என்று சினிமாவில் பெயர் எடுப்பேன், என்ற நம்பிக்கையோடு பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

 

எப்படிப்பட்ட வேடங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

 

ஒரு நடிகன் என்றால் எந்த வேடமாக இருந்தாலும் நடிக்க வேண்டும். அப்படி தான் நானும். இப்படிப்பட்ட வேடத்தில் நடிக்க வேண்டும், அந்த மாதிரி கதாப்பாத்திரம் வேண்டும், என்று எதிர்ப்பார்க்க கூடாது. எந்த வேடமாக இருந்தாலும் அதில் நடிக்க நான் தயாராகவே இருக்கிறேன்.

 

தமிழ் சினிமா பற்றி...?

 

தமிழ் சினிமாவும் தமிழகமும் எனக்கு மிகவும் பிடிக்கும். திறமையானவர்களுக்கு வாய்ப்பளிப்பதில் தமிழ் சினிமாவுக்கு தான் முதலிடம். பல வருடங்களாக மலையாள சினிமாவில் இருக்கிறேன். ஆனால், அங்கு எனது திறமைக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே என் நடிப்பை வெளிக்காட்டும் மிகப்பெரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தான் தமிழ் சினிமா. இங்கு திறமைக்கு வாய்ப்பும், மரியாதையும் கிடைக்கும். தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடித்துக் கொண்டிருப்பேன்.

 

அடுத்தப் படம் குறித்து...?

 

‘கடத்தல் காரன்’ படத்தை பார்த்த தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஒருவர் அவர் தயாரிக்கும் புதிய படத்தில் என்னை ஒப்பந்தம் செய்திருக்கிறார். அதனால், அடுத்ததாக தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்கப் போகிறேன். ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறேன்.

 

தமிழ் இயக்குநர்களில் யாருடைய படங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்?

 

தமிழ் சினிமா இயக்குநர்கள் அனைவரும் திறமையானவர்கள். கமர்ஷியல் படங்களில் கூட நல்ல மெசஜ் சொல்லக்கூடியவர்கள். அதனால் அனைத்து இயக்குநர்களின் படங்களையும் விரும்பி பார்ப்பேன். தற்போது இயக்குநர் வெற்றிமாறன், பா.இரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் போன்றவர்களின் படங்களை அதிகமாக பார்க்கிறேன். அவர்களுடைய படங்களில் சிறு வேடம் என்றால் கூட நடிக்க தயாராக இருக்கிறேன்.

 

Thomas Antony

 

இவ்வாறு நடிகர் தாமஸ் ஆண்டனி தனது சினிமா பயணம் குறித்து பேசினார்.