Nov 06, 2025 04:22 AM

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி.பவுனம்மாள், இளஞ்செழியன் ஆகியோர் தயாரிப்பில், எம்.வி.ரகு கதை, திரைக்கதை எழுதி இசையமைத்து இயக்கும் படம் ‘அறியாத பசங்க’. இப்படத்தில் மணிகண்டன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். மற்றொரு நாயகனாக மதன்குமார் நடிக்க, அவருக்கு ஜோடியாக அனு நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திரங்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

 

ரவி சுந்தரம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு குமார் தாஸ் படத்தொகுப்பு செய்கிறார். பழனி பாரதி, சினேகன், புலவர் சிதம்பரநாதன் ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். ரமேஷ் கமல் மற்றும் சக்தி.எம் நடனக் காட்சிகளை வடிவமைக்க, ஹரி முருகன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கின்றனர். மக்கள் தொடர்பாளராக கார்த்திக் பணியாற்றுகிறார்.

 

இப்படத்தின் துவக்க விழா நவம்பர் 5 ஆம் தேதி சென்னை, பரணி ஸ்டுடியோவில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் செந்தில், திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, யூடியுப் பிரபலம் காந்தராஜ், பழம்பெரும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் எஸ்.பி.முத்துராமன் பேசுகையில், “சாதாரண அப்பரண்டீஸாக ஏ.வி.எம் சேர்ந்த நான் இயக்குநராக மட்டும் இன்றி, பிரமாண்டமான திரைப்படமான ‘சிவாஜி’ மூலம் இணைத் தயாரிப்பாளராக உயர்ந்திருக்கிறேன். இதற்கு காரணம் நான்கு விசயங்கள் தான். தொழிலை முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும், நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு பயணிக்க வேண்டும் மற்றும் ஒழுக்கமாக இருக்க வேண்டும். இந்த நான்கும் இருந்தால் வெற்றியை நாம் தேடிப் போக வேண்டாம், வெற்றி நம்மை தேடி வரும். 20 வருடங்களாக ஏ.வி.எம் ஸ்டுடியோவில் இருந்த ரகு இன்று சினிமாவில் சாதித்திருக்கிறார், என்றால் அவரது நம்பிக்கை தான் காரணம். அவரைப் போல் நம்பிக்கையோடு உழைத்தால் நிச்சயம் அனைவரும் வெற்றி பெறலாம். எனவே ரகுவின் இந்த புதிய படமும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

 

நடிகர் செந்தில் பேசுகையில், “ரகு எனக்கு நீண்ட ஆண்டுகளாக பழக்கம். அவர் மிகவும் திறமையானவர், அவரது திறமை தற்போது தான் வெளிப்பட்டுள்ளது. நிச்சயம் அவர் பல வெற்றிகளை குவிப்பார். எங்கள் காலத்தில் ஒரு படத்தில் நடித்தால், அந்த படத்தின் போஸ்டர் எப்போது ஒட்டுவார்கள், படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும், ஆனால் இப்போது ஓடிடி, வெப் சீரிஸ் என்று என்ன என்னவோ வந்து விட்டது. அதனால், நாங்கள் எதில் நடித்தோம், அது எப்போது வெளியாகும், எங்கு வெளியாகும் என்பதே இப்போது தெரியவில்லை. ரகுவின் இந்த முயற்சி மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.

 

Ariyatha Pasanga

 

யூடியுப் பிரபலம் காந்தராஜ் பேசுகையில், “சினிமா மூட நம்பிக்கை நிறைந்த துறை, அதில் இருந்துக் கொண்டு அறியாத பசங்க என்று 8 வார்த்தைகளில் தலைப்பு வைத்திருக்கிறார். இதற்காகவே அவரை பாராட்டியாக வேண்டும். இந்த படத்தின் ஹீரோக்கள் பக்கத்து வீட்டு பையன்கள் போல் சாதாரணமாக இருக்கிறார்கள், இதுவே படத்தின் வெற்றிக்கு முதல்படி. சினிமா துறை பாதுகாக்க வேண்டிய துறை. இந்த துறையில் ரகு போன்றவர்கள் ஈடுபட்டிருப்பது பாராட்டக்கூடியது, அவர் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

 

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், “சினிமாவில் முன்னேறுவதை விட, முன்னேறிய பிறகு அந்த இடத்தில் இருந்து சறுக்கி விடாமல் இருக்க வேண்டும். எனவே, என் தம்பி ரகுவுக்கு நான் சொல்வது, நீங்கள் வெற்றி என்ற படிக்கட்டில் ஏறும் போது அதை எண்ணிக்கொண்டு ஏறுங்கள், ஏறிய பிறகு அந்த இடத்தில் இருந்து இறங்கிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தம்பி பேசும் போது, பலர் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார்கள், எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது, எனவே தம்பியை வாழ்த்துங்கள் என்று சொன்னார். 19 வயதிலேயே நான் திருமணங்களுக்கு சென்று வாழ்த்தியவன், நான் வாழ்த்தியவர்கள் அனைவரும் சீரும் சிறப்புமாக இருக்கிறார்கள். எனவே, தம்பி ரகு மிகப்பெரிய வெற்றியை பெறுவார், அவர் வெற்றி பெற்ற பிறகு என்னை மறவாமல் இருக்க வேண்டும், என்று கேட்டுக் கொண்டு வாழ்த்தி விடைபெறுகிறேன், நன்றி.” என்றார்.

 

பூஜையுடன் மிக சிறப்பாக துவங்கியுள்ள ‘அறியாத பசங்க’ படத்தின் படப்பிடிப்பு துவங்கும் நாள் மற்றும் படம் பற்றிய பிற தகவல்களை படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.