Mar 18, 2023 09:42 AM

சாதியால் நசுக்கப்படும் திறமையாளர்கள்! - உண்மையை சொல்ல வரும் ‘சூரியனும் சூரியகாந்தியும்’

சாதியால் நசுக்கப்படும் திறமையாளர்கள்! - உண்மையை சொல்ல வரும் ‘சூரியனும் சூரியகாந்தியும்’

டிடி சினிமா ஸ்டுடியோஸ் சார்பில் உருவாகும் புதிய படம் ‘சூரியனும் சூரியகாந்தியும்’. பார்த்திபன், தேவயானி நடிப்பில், 'நினைக்காத நாளில்லை',  'தீக்குச்சி' மற்றும் தெலுங்கில் 'அக்கிரவ்வா' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஏ.எல்.ராஜா இயக்கும் இப்படத்தில் தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, ஸ்ரீ ஹரி, விக்ரம் சுந்தர் ஆகிய மூவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். ரிதி உமையாள் கதையின் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் இயக்குநர் சந்தானபாரதி, இயக்குநர் செந்தில்நாதன், குட்டிப்புலி புகழ் ராஜசிம்மன், மங்களநாத குருக்கள், அழகு, சேஷு, மிப்புசாமி, உடுமலை ரவி, ரிந்து ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, இயக்குநர் ஏ.எல்.ராஜா மிக முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்கிறார்.

 

சாதி பாகுபாட்டால் பல்வேறு துறையை சார்ந்த பல திறமையாளர்கள் நசுக்கப்பட்டு புறக்கணிக்கப்படுவதை மையப்படுத்தி எழுதியுள்ள கதையை, காதல், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்து கமர்ஷியல் அம்சங்களையும் கலந்து சொல்லியிருக்கும் இயக்குநர் ஏ.எல்.ராஜா, சமூகத்தில் நடந்த பல உண்மை சம்பவங்களின் தொகுப்பாக மட்டும் இன்றி, இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான சாதி படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.

 

Sooriyanum Sooriyagandhiyum

 

படம் குறித்து இயக்குநர் ஏ.எல்.ராஜா கூறுகையில், “இந்த படத்தை பொருத்தவரை கதை தான் ஹீரோ. வித்தியாசமான கதைக்களத்தில் சாதியை மையப்படுத்திய படமாக இருக்கும். தற்போது தமிழ் சினிமாவில் சாதி படங்கள் இயக்குவது டிரெண்டாகி விட்டாலும், இதுவரை வந்த சாதி படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இந்த படம் இருக்கும். எல்லோரும் சாதியை பற்றி பேசும் படங்களை எடுக்கிறார்கள். ஆனால், அதில் என் சாதி உயர்ந்த சாதி, உன் சாதி தாழ்ந்த சாதி என்று தான் பேசுகிறார்களே தவிர, அதில் இருக்கும் பாதிப்பு மற்றும் தீர்வு குறித்து பேசுவதில்லை. நான் சாதி என்ற ஒரு விஷயத்தையே தூக்கி எறிந்துவிட்டு மனிதனாக வாழ வேண்டும் என்று சொல்வது தான் இந்த கதை.

 

சாதியால் இன்றும் பலர் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது, ஒருவனின் திறமையை பார்ப்பதை விட அவனுடைய சாதியை பார்க்கும் அளவுக்கு இன்று மக்கள் மனதில் சாதி பிரிவினை வளர்ந்திருக்கிறது. அப்படிப்பட்ட சாதி பிரிவினையால் பல்வேறு துறைகளில் பல திறமையானவர்கள் இன்றும் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள், என்ற உண்மையை சொல்வதோடு, சாதியே வேண்டாம் என்பதை வலியுறுத்தும் சமூகத்திற்கு தேவையான ஒரு படமாகவும் இருக்கும்.

 

சினிமா துறையில் கூட சாதி பார்த்து தான் படம் கொடுக்கிறார்கள். கதை நல்லா இருக்கிறது, இயக்குநர் திறமையானவராக இருந்தாலும், இறுதியில் அவரிடம் என்ன சாதி? என்று கேட்கப்பட்ட பிறகே அவருக்கு படம் கொடுக்கப்படுகிறது. சினிமாவில் மட்டும் அல்ல இந்த பிரச்சனை அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகிறது.

 

பொதுவாக நான் இயக்கும் படங்கள் அனைத்திலும் சமூகத்திற்கு தேவையான விஷயங்களை கமர்ஷியலாக சொல்வேன். ‘தீக்குச்சி’ படத்தில் கல்வியை எப்படி வியாபாரமாக்குகிறார்கள் என்பதை சொல்லியிருந்தேன். அதேபோல், ’நினைக்காத நாளில்லை’ படத்தில் நட்பு என்றால் எப்படி இருக்க வேண்டும், காதல் என்றால் என்ன? என்பதற்கான விளக்கத்தை கொடுத்திருப்பேன். அதுபோல், ‘சூரியனும் சூரியகாந்தியும்’ படத்தில் சாதியால் திறமையானவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், என்பதை சொல்லியிருக்கிறேன். இந்த படத்தில் இடம்பெறும் சம்பவங்கள் அனைத்தும் உண்மை சம்பவங்கள் தான்.

 

சாதி பற்றி பேசினாலும், படத்தின் அடுத்தடுத்த காட்சிகளும், இறுதிக்காட்சியும் ரொம்பவே வித்தியாசமாகவும், யூகிக்க முடியாதபடியும் இருக்கும். சாதி படங்கள் எடுத்தாலே பல சர்ச்சைகள் எழும், ஆனால் அந்த சர்ச்சைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் சாதியே வேண்டம், அதை தூக்கி எறிய வேண்டும் என்பது தான் என் கருத்து, அதை தான் படத்திலும் சொல்லியிருக்கிறேன். சாதி பிரச்சனையை மையப்படுத்திய கதை என்றாலும் அதை முழுக்க முழுக்க நகைச்சுவை உணர்வோடு நகர்த்தி சென்றிருக்கிறேன். என் படங்கள் அனைத்திலும் வடிவேலு நடித்திருப்பார். முதல் முறையாக அவர் இல்லாத படமாக இருப்பதால் காமெடியை கதையோடு சேர்த்து சொல்லியிருக்கிறேன். திரைக்கதை மற்றும் காட்சிகளை கையாண்ட விதம், எதிர்பார்க்காத கிளைமாக்ஸ் ஆகியவை படத்தை நிச்சயம் ரசிக்க வைக்கும்.

 

Sooriyanum Sooriyagandhiyum

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் அப்புக்குட்டி மிக சிறப்பாக நடித்திருக்கிறார். ‘அழகர்சாமியின் குதிரை’ படத்திற்கு பிறகு அப்புக்குட்டிக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. ஆனால், இந்த படம் அந்த வருத்தத்தை போக்கி அவருக்கு மீண்டும் விருது வாங்கித்தரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இயக்குநர் சந்தானபாரதி சாரின் கதாபாத்திரமும் மிக சுவாரஸ்யமானதாகவும், அவர் இதுவரை நடிக்காத வேடமாகவும் இருக்கும்..

 

மதுரை மற்றும் சென்னை தான் படத்தின் கதைக்களம். மதுரையில் இருந்து தான் சென்னைக்கு வருவார்கள். ஆனால், இந்த கதையில் ஹீரோ சென்னையில் இருந்து மதுரைக்கு செல்வது போல் வைத்திருக்கிறோம். படத்தில் நான்கு பாடல்கள் இருக்கிறது. டைடில் பாடல் நிச்சயம் பேச வைக்கும் விதத்தில் இருக்கும்.” என்றார்.

 

திருவாரூர் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஆர்.எஸ்.ரவி பிரியன் இசையமைத்திருக்கிறார். வீரசெந்தில்ராஜ் படத்தொகுப்பு செய்ய, மஸ்தான் நடனக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். ஏ.எல்.ராஜா, கவிஞர் செங்கதிர் வாணன் பாடல்கள் எழுத, ஸ்பீடு மோகன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். கலை இயக்குநராக ஜெயசீலன் பணியாற்றியுள்ளார். இணைத் தயாரிப்பாளராக டெய்லி குருஜி பணியாற்ற, பி.ஆர்.ஓ பணியை கோவிந்தராஜ் கவனிக்கிறார்.

 

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு, படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.ராஜா.

 

மதுரை, தேனி, திண்டுக்கல், மைலம், திருவண்ணாமலை, சென்னை ஆகிய பகுதிகளில், முப்பத்தைந்து நாட்களில் படமாக்கப்பட்டுள்ள ‘சூரியனும் சூரியகாந்தியும்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவுப் பெற்று, இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.