’ரெட்ட தல’ திரைப்பட விமர்சனம்
Casting : Arun Vijay, Siddhi Idnani, Tanya Ravichandran, Yogi Samy, John Vijay, Hareesh Peradi, Balaji Murugadoss
Directed By : Kris Thirukumaran
Music By : Sam CS
Produced By : BTG Universal - Bobby Balachandran
பாண்டிச்சேரியில் பெற்றோர் இல்லாமல் வளரும் அருண் விஜய், தன்னைப் போலவே பெற்றோர் இல்லாமல் இருக்கும் சித்தி இத்னானியை காதலிக்கிறார். ஆனால், சித்தி இத்னானி அருண் விஜயை விட பணத்தின் மீது அதீத மோகம் கொண்டவராக இருக்கிறார். அவரை சந்தோஷப்படுத்துவதற்காக அதிகமான பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபடும் அருண் விஜய்க்கு, பணக்கார அருண் விஜயின் நட்பு கிடைக்கிறது.
பணக்கார அருண் விஜயின் பணத்தின் மீது ஆசைப்படும், சித்தி இத்னானி தன் காதலர் அருண் விஜய் மூலம் அவரது பணத்தை கைப்பற்ற திட்டம் போடுகிறார். அதன் பிறகு என்னவெல்லாம் நடக்கிறது என்பதை பரபரப்பாக சொல்வ முயற்சித்திருப்பது தான் ‘ரெட்ட தல’.
இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் அருண் விஜய், உடை மற்றும் தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் வேறுபாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அதிகமாக மெனக்கெட்டிருக்கும் அருண் விஜய், திரைக்கதை தொய்வு அடையும் இடங்களில் தனது நடிப்பு மூலம் தொய்வில் இருந்து மீட்டு விடுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சித்தி இத்னானி, கதையின் மையப்புள்ளி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், திரைக்கதையில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் சாதாரணமாகவே பயணித்திருக்கிறார்.
தன்யா ரவிச்சந்திரன், ஜான் விஜய், ஹரிஷ் பெராடி, பாலாஜி முருகதாஸ், யோகி சாமி ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.
டிஜோ டாமியின் ஓளிப்பதிவு படத்தின் தரத்தை அதிகரித்திருப்பதோடு, வித்தியாசமான கோணங்கள் மற்றும் வண்ணங்கள் மூலம் படம் முழுவதையும் ஸ்டைலிஷாக காட்சிப்படுத்தியிருக்கிறது.
சாம்.சி.எஸ் இசையில், தனுஷ் குரலில் “கண்ணம்மா..” பாடல் திரும்ப திரும்ப கேட்கும் ரகம். பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கும் வகையில் பயணித்திருக்கிறது.
ஆண்டனியின் படத்தொகுப்பு படத்தை வேகமாக பயணிக்க வைக்க உதவியிருந்தாலும், கதையை தெளிவாக சொல்ல முடியாமல் திணறியிருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் கிரிஷ் திருக்குமரன், ஆசையே அனைத்திற்கும் காரணம், என்ற புத்தரின் பொன்மொழியை கதைக்கருவாக எடுத்துக் கொண்டு, அதை கமர்ஷியல் ஆக்ஷன் படமாக கொடுத்திருக்கிறார்.
முதல் பாதி படம் வேகமாகவும், திருப்பங்களுடனும் பயணிப்பது போல் இரண்டாம் பாதி பயணிக்காதது படத்தை சற்று பலவீனப்படுத்தினாலும், ஆக்ஷன் காட்சிகள் அந்த பலவீனத்தை மறைத்து விடுகிறது.
மொத்தத்தில், ‘ரெட்ட தல’ ஆக்ஷன் விருந்து.
ரேட்டிங் 3/5

