Dec 24, 2025 07:23 PM

‘ரகசிய சினேகிதனே’ திரைப்பட விமர்சனம்

6f7aef6060113eeebef249bdfb549595.jpg

Casting : Velmurugan, Swetha Srimdan, Guru Prakash, Bagyaraj, Prathiba, Prashanthini, Nisha, Kanthavelu

Directed By : Sekar Kanniyappan

Music By : Dr.Suresh and S.Subramanya

Produced By : Puniga Productions - Latha Sekar

 

தம்பதி இடையே ஸ்மார்ட்போன் மூலம் ஏற்படும் பிரச்சனையையும், அதன் மூலம் அழகான அவர்களது எளிய வாழ்கை எப்படி சிதைந்து போகிறது, என்பதையும் தற்போதைய காலக்கட்டத்தில் நடக்கும் சில உண்மை சம்பவங்களுக்கு நெருக்கமாக சொல்வது தான் ‘ரகசிய சினேகிதனே’.

 

மனம் விரும்பும் கணவர் அமையவில்லை என்றாலும், இது தான் வாழ்க்கை என்பதை உணர்ந்து கணவர் வேல்முருகன் மீது அன்பு செலுத்தி வாழ்ந்து வரும் நாயகி ஸ்வேதா ஸ்ரீம்டனுக்கு ஸ்மார்ட்போன் மீது ஆசை வருகிறது. அவரது ஆசைப்படி, அவரது கணவர் ஒரு ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுக்கிறார். வீட்டு வேலைகளை முடித்து, பொழுதுபோக்கிற்காக சோசியல் மீடியாவை பார்க்க தொடங்கும் ஸ்வேதா, நாளடைவில் அதற்கு அடிமையாவதோடு, அதன் மூலம் கிடைத்த ரகசிய சினேகிதனுடன், வாட்ஸ்-அப் மூலம் பழக தொடங்குகிறார்.

 

விசயம் தெரிந்து கணவர் கண்டித்தாலும், வாட்ஸ்-அப்பில் பேசுவதில் எந்த தவறும் இல்லை, என்று தனது செயலை நியாயப்படுத்துவதோடு, அதை தொடர்ந்து செய்யவும் செய்கிறார். இதனால் குடும்பத்தில் சிக்கல்கள் உருவெடுக்க, அதன் மூலம் அவர்களது வாழ்க்கை என்னவானது என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் வேல்முருகன் மிக எதார்த்தமாக நடித்திருக்கிறார். புதுமைகளை விரும்பாத மனிதராக வலம் வருபவர், மனைவியின் செயலை கண்டு வருந்துவதும், அதனால் பாதிக்கப்படுவதும் என்று தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் ஸ்வேதா ஸ்ரீம்டன், பக்கத்து வீட்டு பெண் போல் எளிமையாக இருப்பதோடு, பார்த்ததும் பிடித்துப் போகும் அழகோடும் இருக்கிறார். இயல்பான நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்திற்கு பெரும் பலம் சேர்த்திருப்பவர், தன்னுடைய செயல் தவறு இல்லை, என்பதை மற்றவர்களுக்கு புரிய வைக்க போராடும் காட்சிகளில் அசால்டாக நடித்து கைதட்டல் பெறுகிறார்.

 

குரு பிரகாஷ், பாக்கியராஜ், பிரதீபா, பிரசாந்தினி, நிஷா, கந்தவேலு என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் புதுமுகங்கள் என்றாலும், அந்த அந்த கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள். அவர்களது எதார்த்தமான நடிப்பு மற்றும் உடல் மொழி திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

 

டாக்டர் சுரேஷ் மற்றும் எஸ்.சுப்பிரமண்யா ஆகியோரது இசையில் பாடல்கள் இல்லை என்றாலும், பின்னணி இசை அளவாக பயணித்து திரைக்கதை ஓட்டத்திற்கு உயிரூட்டியிருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் ஷாம்ராஜ், குறிப்பிட்ட சில லொக்கேஷன்களை மட்டுமே பயன்படுத்தி முழு படத்தையும் காட்சிப்படுத்தியிருந்தாலும், அந்த உணர்வு பார்வையாளர்களுக்கு ஏற்படாத வகையில், கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.

 

படத்தொகுப்பாளர் டி.நாகராஜ் க.உதயமூர்த்தியின் பணியும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் சேகர் கன்னியப்பன், தற்போதைய காலக்கட்டத்தில் சோசியல் மீடியா மோகத்தினால் பெண்கள் பாதிக்கப்படுவதை குடும்ப டிராமாவாக மட்டும் இன்றி அழகியலோடு சொல்லியிருக்கிறார். குறிப்பாக மனைவி மற்றும் அவரது ரகசிய சினேகிதன் இடையிலான வாட்ஸ்-அப் உரையாடல்கள் எந்தவித ஆபாசமும் இன்றி ரசிக்கும்படி அமைந்திருப்பது படத்தின் கூடுதல் பலம். 

 

இயக்குநர் நினைத்திருந்தால் திரைக்கதை மற்றும் காட்சிகளை ஆபாசமாக வடிவமைத்திருக்கலாம், அதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், அதை தவிர்த்துவிட்டு அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய விதத்தில் மிக நாகரீகமாக காட்சிகளை கையாண்டு, பெண்களுக்கும், ஆண்களுக்கும் அறிவுரை வழங்கியிருக்கிறார்.

 

சிறிய முதலீட்டில், புதுமுகங்களை வைத்துக் கொண்டு, எளிமையான கதை சொல்லல் மூலம் தான் சொல்ல நினைத்ததை பார்வையாளர்கள் மனதுக்கு நெருக்கமாக சொல்லியிருக்கும் இயக்குநர் சேகர் கன்னியப்பன்,  இயல்பான நகைச்சுவை காட்சிகளோடு முழுமையான கமர்ஷியல் படத்தை பார்த்த திருப்தியையும் கொடுத்திருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘ரகசிய சினேகிதனே’ ரசிக்கலாம்.

 

ரேட்டிங் 3/5