Mar 19, 2019 04:54 PM

‘96’ பட இயக்குநர் பிரேமுக்கு கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் விருது!

‘96’ பட இயக்குநர் பிரேமுக்கு கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் விருது!

விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘96’ படம் பல்வேறு விருதுகளை பெற்றதோடு, மக்கள் மனதில் நீங்கா திரைப்படமாகவும் இடம்பெற்றுள்ளது. தற்போது இப்படத்தை தெலுங்கில் இயக்குநர் பிரேம் ரீமேக் செய்து வருகிறார்.

 

இந்த நிலையில், ஆண்டு தோறும் இந்திய அளவில் சிறந்த அறிமுக இயக்குநருக்காக வழங்கப்படும் அமரர் கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் நினைவாக வழங்கப்படும் விருதுக்கு இயக்குநர் பிரேம் தேர்வாகியுள்ளார்.

 

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரும், இயக்குநருமான மாருதி ராவின் மகனான கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ்,  கடந்த 1992 ஆம் ஆண்டு தனது முதல் படத்தை இயக்கிக் கொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக உயிரிழந்ததை தொடர்ந்து அவரது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் சிறந்த அறிமுக இயக்குநரை தேர்வு செய்து வழங்கப்பட்டு வரும் இவ்விருதை தெலுங்கு சினிமா மட்டும் இன்றி, இந்திய சினிமாவே உணர்வுப்பூர்வமான விஷயமாக கருதுகின்றது.

 

’கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் தேசிய விருது’ என்ற தலைப்பில் கடந்த 21 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் இவ்விருது இந்த ஆண்டு இயக்குநர் பிரேமுக்கு அறிவிக்கப்பட்டிருப்பது ‘96’ படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

96 movie Director Prem Kumar

 

இது குறித்து கூறிய பிரேம், “எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எப்படியான விருதுகளாக இருந்தாலும் விருதுகள் நம்மை ஊக்கப்படுத்துபவை. ஆனால், இப்படியான விருதை பெற இருக்கிறோம் என்று கேள்விப்பட்டதும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். எனக்கு வாழ்த்து கூறிய பலரும் ‘கங்க்ராட்ஸ்’ என்பதோடு கடந்துவிடவில்லை. அனைவரும் இதைப்பற்றி மிகவும் உணர்வுப் பூர்வமாக பேசினார்கள். விஜய் சேதுபதி, திரிஷா உள்ளிட்ட பலரும் தங்களின் மகிழ்ச்சியை நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்கள்.” என்றார்.