Dec 24, 2025 06:10 PM

பிரபலங்களின் சுவாரஸ்ய தகவல்களோடு உருவாகியுள்ள ஆர்.எம்.வீரப்பன் பற்றிய ஆவணப்படம்!

பிரபலங்களின் சுவாரஸ்ய தகவல்களோடு உருவாகியுள்ள ஆர்.எம்.வீரப்பன் பற்றிய ஆவணப்படம்!

தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் பற்றிய ஆவணப்படம் ‘ஆர்.எம்.வி - கிங் மேக்கர்’ என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், சரத்குமார், பாடலாசிரியர் வைரமுத்து, அரசியல் தலைவர்கள் செ.கு.தமிழரசன், தமிழச்சி தங்கபாண்டியன், தமிழிசை செளந்தரராஜன், இயக்குநர்கள் சுரேஷ் கிருஷ்ணா, பி.வாசு, எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட  36 பிரபலங்கள் தெரிவித்த கருத்துகளை மையமாக வைத்து ’ஆர்.எம்.வி கிங் மேக்கர்’ ஆவனப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

2 மணி நேரம் ஓடக்கூடிய இந்த ஆவணப்படத்தில் பிரபலங்கள் ஆர்.எம்.வீரப்பன் பற்றி கூறிய பல சுவாரஸ்ய தகவல்கள் உள்ளதால், ஆவணப்படம் என்ற உணர்வை மறந்து ஒருவரது வெற்றி பயணம் மற்றும் ஆளுமை பற்றி, காட்சி மொழியில் சுவை பட அறிந்து கொள்ளும் அனுபவம் கிடைக்கிறது. 

 

குறிப்பாக, ’பாட்ஷா’ பட 100 வது நாள் விழாவில் ரஜினிகாந்த், வெடிகுண்டு கலாச்சாரத்தை பற்றி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பேசியதும், அதன் பின்னணியில் அமைச்சர் பதவியை ஜெயலலிதா பறித்துக் கொண்டு ஆர்.எம்.வீரப்பனை தவிர்த்து விட்டதையும் ரஜினி இந்த காணொளியில் பேசியிருக்கிறார். ரஜினியின் இந்த தகவல் தற்போது பேசு பொருளாகியிருக்கிறது.

 

அரசியல் மற்றும் இன்றி சினிமாவிலும் ஆர்.எம்.வீரப்பன் எத்தகைய ஆதிக்கத்தை செலுத்தினார், என்பதை பிரபலங்கள் மிக நுட்பமாக ஆராய்ந்து பேசியிருக்கிறார்கள். 

 

எம்ஜிஆர் மறைந்து 38 ஆண்டுகள் ஆனாலும் இன்ற அளவிலும் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை உருவாக்கிய பல படங்களை தயாரித்தது வீரப்பன் (சத்யா மூவிஸ்) என்று சொன்னால் அது மிகையல்ல.

 

 

அதுபோல ரஜினியின் சினிமா பயணத்தில் என்றும் போற்றப்படும் படமாக உள்ள ’பாட்ஷா’ மற்றும் ’மூன்று முகம்’ உள்ளிட்ட படங்களையும் சத்யா மூவிஸ் நிறுவனம் தான் தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

20 வயதில் தன்னுடைய அரசியல் பயணத்தை ஆரம்பித்த ஆர்.வி.வீரப்பனின் திறமையை பார்த்து தந்தை பெரியாரிடம், “வீரப்பனை எனக்கு கொடுத்து விடுங்கள்” என்று பேரறிஞர் அண்ணா கேட்டதும், அதன்படி அவருடன் ஆர்.எம்.வி பயணித்த தகவலும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது. 

 

தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜானகி மற்றும் ஜெயலலிதா ஆகிய மூன்று பேருக்கும் ஆர்.எம்.வீரப்பன், எப்படி உறுதுணையாக இருந்து அவர்களது அரசியல் ஏற்றங்களுக்கு வழிவகுத்து, அவர்களை முதல்வர் அரியணையில் அமர வைப்பதற்கான தனது சிறப்பான செயல்பாட்டின் மூலம், கிங் மேக்கராக எப்படி உருவெடுத்தார் என்பதும் இந்த ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

 

RMV Kingmaker

 

தற்போது ஆவணப்படமாக உருவாகியுள்ள ஆர்.எம்.வீரப்பனின் வாழ்க்கை, எதிர்காலத்தில் திரைப்படமாக தயாரிப்பதற்கான திட்டம் இருப்பதாக, ஆர்.எம்.வீரப்பனின் மகன் தங்கராஜ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.