Nov 02, 2025 04:32 PM

100 அடி பள்ளத்தாக்கில் விழுந்த நாயகன், நாயகி! - படப்பிடிப்பில் அதிர்ச்சி!

100 அடி பள்ளத்தாக்கில் விழுந்த நாயகன், நாயகி! - படப்பிடிப்பில் அதிர்ச்சி!

எம்.பி.என் மூவிஸ் சார்பில் எம்.பி.நக்கீரன் தயாரிப்பில், ஜீவாபாரதி கதை,  திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கும் படம் ‘அகரா’. இதில், நாயகனாக எம்.பி.நக்கீரன் நடிக்க, நாயகியாக லிபியா ஸ்ரீ நடிக்கிறார். இவர்களுடன் நிஷாந்த், ஜீவாபாரதி, கோவை டாக்டர்.கே.கண்ணன், ரங்கராஜ் சுப்பையா, செந்தில் தங்கவேல் ரமேஷ் ராதா, ஆர்.பிரபு, ஜெ.கணேஷ் குமார், செந்தில் குமரன், இனியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

 

யு.எம்.ஸ்டீவன் சதீஷ் ஒளிப்பதிவு செய்து இசையமைக்கும் இப்படத்திற்கு அஸ்வின் உமாபதி படத்தொகுப்பு செய்கிறார். மேகலா மாதேஸ்வரன் மற்றும் அருண் நடனக் காட்சிகளை வடிவமைக்க, இணை தயாரிப்பை கோவை டாக்டர்.கே.கண்ணன் கவனிக்கிறார். 

 

”எதைத் தேடுகிறாயோ அதுவும் உன்னையே தேடுகிறது” என்பதை மையக் கருத்தாக கொண்டு உருவாகி வரும் ’அகரா’ படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலத்தின், பாலக்காடு, அட்டப்பாடி ஆகிய பகுதிகளில் இடைவிடாமல் நடைபெற்று வருகிறது.

 

Akara

 

இந்த நிலையில், கேரளாவில் உள்ள அட்டப்பாடி மலைப்பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் கதாநாயகன் நாயகி பேசிக் கொண்டிருப்பதாக காட்சி அமைப்பு. இயக்குநர் காட்சியை விளக்கி கூறி பின் ஆக்ஷன் என்றதும் கதாநாயகி லிபியா ஸ்ரீ, மலைக்ககுன்றின் 100 அடி பள்ளத்தாக்கில் சறுக்கிக் கொண்டே விழுந்துவிட்டார். உடனே பதட்டம் அடைந்த நாயகன் நக்கீரன் தானும் சறுக்கிக்கொண்டே இறங்கி காப்பாற்ற முயன்றார. ஆனால் இருவரும் கீழே மாட்டிக் கொண்டு மேலே வர முடியாமல் தவித்தனர். படக்குழுவினரும் திகைத்தனர். 

 

உடனடியாக பக்கத்தில் உள்ள மலை கிராமத்தில் மிகப்பெரிய கயிறு வரவழைக்கப்பட்டு பள்ளத்தில் கயிறை இறக்கி இருவரையும் ஒருவர் ஒருவராக மேலே கொண்டு வந்து சேர்த்தனர்.புல்கள் நிறைந்த பகுதியாக இருந்ததால் இருவரும் சிறிய காயத்துடன் தப்பித்தனர்.

எனினும் நாயகி லிபியாஸ்ரீ அச்சத்தில்  மயக்கம் அடைந்தார்.அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ஓய்வு எடுத்தபின் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது.