’சிறை’ பட நடிகர் ரகு இசக்கிக்கு குவியும் பாராட்டுகள்!
விக்ரம் பிரபு நடிப்பில் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள படம் ‘சிறை’. பத்திரிக்கையாளர்கள் விமர்சகர்கள் மத்தியிலும் ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள சிறை திரைப்படத்தில் நாயகியின் அக்கா கணவராக கோவிந்தராஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்று வருகிறார் நடிகர் ரகு இசக்கி.
பாலு மகேந்திரா சினிமா பட்டறை மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள ஆதிசக்தி தியேட்டர்ஸ் ஆகியவற்றில் நடிப்பு பயிற்சி பெற்றவர் நடிகர் ரகு இசக்கி. நடிகர் விவேக் முதல் முறையாக சீரியசான கதாபாத்திரத்தில் நடித்த ‘நான்தான் பாலா’ என்கிற படத்தில் தான் அறிமுகமானார் ரகு இசக்கி. ஆனாலும் விஜய் சேதுபதியின் தம்பியாக ’தர்மதுரை’ படத்தில் நடித்த பிறகு தான் ரசிகர்களிடம் ஓரளவு பிரபலமானார். தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதியின் கடைசி தம்பியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர், பின்னர் ’பூஜை’, ’கடைக்குட்டி சிங்கம்’, ’பரியேறும் பெருமாள்’, ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ’டிஎஸ்பி’, ’சூது கவ்வும் 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் நடிகர் ரகு இசக்கி.
தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘சிறை’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் ரகு இசக்கி கூறுகையில், “இந்த படத்திற்காக நடைபெற்ற ஆடிஷனில் கலந்து கொண்டு தான் இந்த வாய்பை பெற்றேன். முதலில் ஒரு போலீஸ்காரர் கதாபாத்திரத்திற்கு தான் எனக்கு ஆடிஷன் வைக்கப்பட்டது. அதில் என் நடிப்பு பிடித்துப் போய், ‘சிறை’ படத்தில் தற்போது நான் நடித்துள்ள அந்த கிராமத்து கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைத்தார்கள். இந்த கதாபாத்திரம் பற்றி இயக்குன்நர் டீடைலாக விவரித்த போது எனக்கு ரொம்பவே ஆர்வமாக இருந்தது. எந்த நேரமும் குடித்துக் கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரம். இயல்பில் எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. ஆனாலும் அதுபோல நடிக்க வேண்டி இருந்தது சவாலாக இருந்தது. படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் என்னுடைய காட்சிகளை எடுக்கும் போது தான் அது படத்திற்கு எவ்வளவு முக்கியமான திருப்புமுனையான கதாபாத்திரம் என்பது புரிய வந்தது.
விமர்சனங்களில் பலரும் எனது கதாபாத்திரத்தை என் பெயர் தெரியாமல் கூட குறிப்பிட்டு பாராட்டி எழுதும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தர்மதுரை படத்திற்குப் பிறகு எல்லோரிடமும் தொடர்பு படுத்திக்கொள்ளும் வலுவான கதாபாத்திரமாக கிடைத்ததும் தற்போது அது பாராட்டுக்களை பெற்று வருவதும் மகிழ்ச்சி தருகிறது.
என்னுடைய படத்திற்கு முதல் விமர்சனங்கள் வருவது என்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து தான் பெரும்பாலும் திருப்தி இல்லாமல் தான் அவர்களின் விமர்சனம் இருக்கும், ஆனால் இந்த ’சிறை’ படத்தில் என்னுடைய நடிப்பை எல்லோருமே பாராட்டினார்கள். இன்னும் சிலர் படத்தில் எனது கதாபாத்திரத்தை பார்த்துவிட்டு எதிர்மறையாக விமர்சித்தனர். அது கூட எனது கதாபாத்திரத்திற்கு, நடிப்புக்கு கிடைத்த வெற்றியாக எடுத்துக் கொள்கிறேன்
படம் பார்த்துவிட்டு நடிகர் சூரி, அருள்தாஸ், ஒளிப்பதிவாளர் சுகுமார், இயக்குநர்கள் பா. ரஞ்சித், வெங்கட் பிரபு, தமிழ், ஜிஎன்ஆர் குமரவேலன் உள்ளிட்ட பலர் பாராட்டியது எனக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
’சிறை’ திரைப்படத்தில்’ நடிப்பதற்கு முன்பாகவே ’லிங்கம்’, ’மெட்ராஸ் மிஸ்ட்ரி’ மற்றும் நெட்பிளிக்ஸில் ஒரு வெப் சீரிஸ் என மூன்று வெப் சீரிஸ்களில் நடித்துள்ளேன். அடுத்தடுத்து அவை வெளியாக இருக்கின்றன. அது மட்டுமின்றி அமேசான் பிரைமிலும் ஒரு வெப் சீரிஸில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதுவும் பேசப்படும் ஒன்றாக இருக்கும். அனைத்துமே கதைக்கே முக்கியமான திருப்பம் தரும் கதாபாத்திரங்களில் தான் நடிக்கிறேன்.
நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் குட் நைட் மணிகண்டன் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். அந்தப் படமும் ’சிறை’ போலவே மிகப்பெரிய அளவில் பேசப்படும்.
இன்றைய காலகட்டத்தில் திரைப்படம் வெப் சீரிஸ் இரண்டுக்குமே வேறு வேறு விதமான பார்வையாளர்கள் என்றாலும் கூட இரண்டுமே எங்களைப் போன்ற நடிகர்களுக்கு முக்கியமானது தான், அதனால் இரண்டுமே சரிசமமாக நடிப்பது நல்ல விஷயம் தான்.
எனது சகோதரர் நிறுவனத்தில் தயாரித்த நெருப்புடா படத்தில் விக்ரம் பிரபு நடித்தபோது அவருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. ’சிறை’ படத்தில் அவருக்கும் எனக்குமான காம்பினேஷன் காட்சிகள் எதுவும் இல்லை என்றாலும் படம் பார்த்துவிட்டு என்னை பாராட்டினார். அதன் பிறகு, வெளியே எல்லாம் எங்கேயும் சென்று விடாதீர்கள்.. அடி விழப் போகிறது, என்று ஜாலியாக கமென்ட் அடித்தார்” என்றார்.

