May 08, 2020 05:08 PM

”அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட்டுக்கு அர்த்தம் அப்போ தான் புரிந்தது” - நடிகர் சம்பத் ராம்

”அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட்டுக்கு அர்த்தம் அப்போ தான் புரிந்தது” - நடிகர் சம்பத் ராம்

வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் சம்பவம்ராம், சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். தமிழ், தெலுங்கு, மலையாலம், கன்னடம் என்று பல மொழிகளில் பிஸியாக நடித்து வருபவர், கொரோனா ஊரடங்கில் தனது சினிமா அனுபவத்தை பகிர்ந்து வருகிறார்.

 

அந்த வகையில், தான் நடித்த முதல் படமான ‘முதல்வன்’ திரைப்படம் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 10) சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதால், அப்படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைத்தது பற்றியும், அதற்காக தனது வேலையை இழந்தது பற்றியும் சம்பத்ராம் பகிர்ந்துக் கொண்டார்.

 

வரும் ஞாயிறு (10-5-2020) காலை 10 மணிக்கு சன் டிவி யில் நான் (எங்கிருக்கிறேன் இத்திரைப்படத்தில் என்று தேடவேணடாம்...ஏனெனில் என்னாலேயே கண்டு பிடிக்க முடியவில்லை) நடித்த முதல் திரைப்படமான இயக்குநர்ர்சங்கர் அவர்களின் ’முதல்வன்’ திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது.

 

இத்தருணத்தில் இந்த திரைப்படத்திற்க்காக நான் பணியாற்றிய தனியார் வங்கி கிரெடிட் கார்ட் கலெக்சன் எக்ஸிகிட்டீவ் வேலையை (1999 இல் ரூ.15000 மாத சம்பளம்) ராஜினாமா செய்த சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 

நான் 1996 முதல் ஒரு அலுவலகத்தில் மேற்கூறிய பனியை செய்து வந்தேன்...1998 இல் கலை துறைக்கு வந்த எனக்கு முதன்முதலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது செவந்த் சேனல் நாராயணன் அவர்களின் தயாரிப்பில்  திரு மோகனசுந்தரம் அவர்களின் இயக்கத்தில் நடிகர் திரு. சிவகுமார் அவர்கள் நடிப்பில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிய ‘எத்தனை மனிதர்கள்’என்ற சீரியலில் தான்.

 

1999 இல் இயக்குநர் சங்கர் அவர்களின் அலுவலகத்தில் (தி.நகர் நார்த் உஸ்மான் சாலையில் இருந்த நடிகர் பிரசாந்த் அவர்களின் வீடு-தற்போதைய ஜாய் அலுக்காஸ் கட்டிடம்) ’முதல்வன்’ திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர்கள் தேர்வு நடைபெறுவதை அறிந்து என் அலுவலகத்தில் இருந்து நேரடியாக அங்கு சென்ற எனக்கு அங்கு 200 க்கும் மேற்பட்ட நடிகர்கள் நல்ல ஜிம் பாடி ஜீன்ஸ் பேண்ட் டி-சர்ட்  போட்டுக்கொண்டு கெத்தான தோற்றத்துடன் அலுவலகம் உள்ளே செல்வதற்காக காத்திருந்தது கண்டு "formal பேண்ட் சர்ட்டுடன் சாதாரண உடலுடன் இருக்கிற நமக்கெல்லாம் எங்க நடிக்க வாய்ப்பு கிடைக்கப்போகிறது" என்று நானும் காத்திருந்தேன்.

 

இனை இயக்குநர் இளங்கண்ணன் (பின்னாளில் ’ஒற்றன்’ திரைப்படத்தை இயக்கியவர், அதில் எனக்கும் நடிக்க வாய்ப்பு கொடுத்திருந்தார்) அவர்கள் நடிகர்களை தேர்வு செய்ய அலுவலகத்தின் வெளியே வந்ததும் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு முன்னே சென்றனர். அவர் அனைவரையும் உற்றுப்பார்த்தார்.

 

அதுபோல் முண்டியடித்துக் கொண்டு சென்று எனக்கு பழக்கமில்லாதலால் அவர் கண்கள் நம்மை பார்க்காதா என்ற ஏக்கத்துடன் கடைசியில் சற்று தொலைவில் அமைதியாக நின்றுகொண்டு இருந்தேன். அவர் என்னை கண்டதும் ”சார் நீங்க வாங்க” என்று முதலில் என்னை தேர்வு செய்தார்.

 

எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது...என் முன்னே மற்ற நடிகர்கள் கூட்டமாக நின்று கொண்டு இருந்ததால் அவர் மற்றவர்களை பார்த்து ”அவர் உள்ளே வருவதற்கு வழி விடுங்கள்” என்றார். உடனே அனைவரும் வழி விட முதல் ஆளாக உள்ளே சென்றேன்.

 

பின்னர் என்னை போன்றே மேலும் 9 நடிகர்களை தேர்வு செய்து மொத்தம் 10 நடிகர்களை இயக்குநர் சங்கர் அவர்களின் முன் நிறுத்தினார். அவரும் நான் உள்பட 10 நடிகர்களையும் உற்றுப் பார்த்தார். என் மனம் எப்படியாவது தேர்வாகி விடவேண்டும் எனறு அனைத்து கடவுள்களையும் வேண்டியது...என்னை பார்த்ததும் ”நீங்க வாங்க” என்று முதலில் என்னை தேர்வு செய்தது, எனக்கு மிக பெரிய சந்தோஷத்தை தந்தது.

 

பிறகு இனை இயக்குநர் இளங்கண்ணன் அவர்கள் என்னிடம் ”2 வாரம் குற்றாலத்துல அவுட்டோர் ஷூட்டிங், இன்ஸ்பெக்டர் வேடம், நல்லா நடிக்கனும் சரியா...தேதிய குறிச்சிக்குங்க” என்றார். 

 

நானும் மகிழ்ச்சியுடன் ”சரிங்க சார்” என்று கூறிவிட்டு நேராக என் அலுவலகம் வந்து என் மேலாளரிடம் ”"நான் சங்கர் சார் படத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டிருக்கேன்...2 வாரம் குற்றாலத்துல ஷூட்டிங்...லீவு குடுங்க” என்றேன். அதற்கு அவர் ”அவ்வளவு நாளெல்லாம் லீவு தரமுடியாது...ஒன்னு வேலையை பாருங்க இல்லை ஷூட்டிங் போங்க” என்றார்.

 

நான் உடனே ” சரிங்க சார் நான் ஷூட்டிங்கே போறேன்” என்று கூறிவிட்டு என் வேலையை உடனடியாக ராஜினாமா செய்தேன். என் சக ஊழியர்கள் என்னிடம் ”சினிமா ரொம்ப ரிஸ்க்கான தொழில்டா சம்பத்...யோசித்து முடிவு செய்”என்றனர்.

 

நான் உடனே அவர்களிடம் ”சங்கர் சாரே நேரில் பார்த்து இன்ஸ்பெக்டர் வேடத்திற்க்காக என்னை  தேர்வு செய்திருக்கிறார், நிச்சயம் நல்ல வேடமாத்தான் இருக்கும், நான் நிச்சயம் பெரிய நடிகனாக வருவேன்” என்றேன்.

 

அவர்களும் என்னை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்கள். குற்றாலம் சென்றேன், முதல் நாள் வில்லன் முதலமைச்சர் ரகுவரன் அவர்கள் ஹூரோயின் கிராமத்திற்கு 1000 பேர் பொதுமக்கள், காவலர்கள் 100 பேர் மற்றும் இன்ஸ்பெக்டர் 10 பேருடன் வரும் காட்சி படமாக்கப்பட்டது.

 

அந்த 10 இன்ஸ்பெக்டரில் நானும் ஒருவனாக நடித்தேன். சரி மறுநாள் நல்ல காட்சியில் நடிக்க வாய்ப்பு வரும் என்று நினைத்தேன். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. தொடர்ந்து 2 வாரமும் இதுபோல் 1000 பேரில் ஒருவனாக கூட்டத்தை கட்டுப்படுத்தும் போலீஸ் இன்ஸ்பெக்டராகவே நடித்தேன். சினிமாவில் "ATMOSPHERE ARTISTE " என்ற வார்த்தைக்கு அர்த்தம் அப்போது தான் புரிந்தது. இதுக்காக செஞ்சிட்டிருந்த நல்ல வேலையை ராஜினாமா செய்துவிட்டோமே என்று மணம் பதைபதைத்தது.

 

ஆனால் அன்றே முடிவு செய்தேன் ”வாழ்வோ தாழ்வோ இனி சினிமா தான்” என்று...

 

இந்நேரத்தில் இயக்குநர் சங்கர் அவர்களுக்கும், இனை இயக்குநர் இளங்கண்ணன் அவர்களுக்கும், ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் அவர்களுக்கும், இனை தயாரிப்பாளர் ஆர்.மாதேஷ் அவர்களுக்கும் மற்றும் இதில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.