Jan 03, 2026 07:32 AM

‘திரௌபதி 2’-வில் வில்லனாக மிரட்டும் சிராக் ஜானி!

‘திரௌபதி 2’-வில் வில்லனாக மிரட்டும் சிராக் ஜானி!

ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘திரௌபதி 2’ படத்தின் அடுத்த அப்டேட்டாக படத்தின் மூன்று வில்லன்களை அறிமுகப்படுத்துகிறது. அதில் முதன்மை வில்லனாக நடிகர் சிராக் ஜானி நடித்துள்ளார்.

 

இயக்குநர் மோகன் ஜி-யின் வரலாற்று ஆக்‌ஷன் கதையான ’திரௌபதி 2’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 14 ஆம் நூற்றாண்டின் தென்னிந்தியாவில் வேரூன்றிய காலகட்டக் கதையை பல மொழிகளில் திரையில் பிரம்மாண்டமாக கொண்டுவரவுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறைவடைந்து சமீபத்தில் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திடமிருந்து (CBFC) U/A சான்றிதழைப் பெற்றுள்ளது ‘திரெளபதி2’ திரைப்படம். ரிச்சர்ட் ரிஷியின் கவர்ந்திழுக்கும் வசீகர தோற்றம், அற்புதமான பாடல்கள் மற்றும் பிரம்மாண்டமான காட்சிகள் ஆகியவை படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன. படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று வலுவான வில்லன் கதாபாத்திரங்களில் முதன்மை வில்லனாக நடிகர் சிராக் ஜானியை அறிமுகப்படுத்துகிறது படக்குழு.

 

நடிகர் சிராக் ஜானியை தேர்ந்தெடுத்தது குறித்து இயக்குநர் மோகன் ஜி கூறுகையில், “முகமது பின் துக்ளக் கதாபாத்திரத்தில் நடிகர் சிராக் நடித்துள்ளார். வெறும் வில்லனாக மட்டுமல்லாது புத்திசாலித்தனம் நிறைந்த தனது சொந்த முடிவுகளின் விளைவுகளை தைரியமாக எதிர்கொள்ளும் நபராக வருவார். உடல் ரீதியாக வலுவாகவும் அதேசமயம், புத்திசாலித்தனத்தையும் நடிப்பில் கொண்டு வரும் வகையிலான நடிகரை நாங்கள் எதிர்பார்த்தோம். துக்ளக்கை புத்திசாலித்தனமான முட்டாள் என்று வரலாறு நினைவு கூறுகிறது. அந்த முரண்பாட்டைப் படம்பிடிக்க மிகப்பெரிய கட்டுப்பாடு தேவை. சிராக் முழு ஈடுபாட்டுடன் அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான அச்சுறுத்தல், கண்ணியம் மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்துள்ளார். அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம்” என்றார்.

இந்தப் படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசுதன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.  மேலும் Y.G. மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராக் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், திவி, தேவயாணி ஷர்மா மற்றும் அருணோதயன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

 

நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோழ சக்ரவர்த்தி, ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த 'திரௌபதி 2' திரைப்படத்தின் தொழில்நுட்பக்குழுவில் பிலிப் ஆர். சுந்தர் (ஒளிப்பதிவு), ஜிப்ரான் வைபோதா (இசை), ஆக்‌ஷன் சந்தோஷ் (ஸ்டண்ட்ஸ்), தணிகா டோனி (நடன அமைப்பு), தேவராஜ் (எடிட்டிங்), மற்றும் கமல்நாதன் (தயாரிப்பு வடிவமைப்பு) ஆகியோர் உள்ளனர். வசனங்களை பத்மா சந்திரசேகர் மற்றும் மோகன் ஜி எழுதியுள்ளனர்.

 

சென்சார் பணிகள் முடிவடைந்த நிலையில் ‘திரௌபதி 2’ திரைப்படத்தின் மார்க்கெட்டிங் பணிகள் தொடங்கியுள்ளது. படத்தின் டிரெய்லர் மற்றும் இசை விரைவில் வெளியிடப்படும், அதைத் தொடர்ந்து உலகளவில் திரையரங்க வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்படும்.