‘அங்கம்மாள்’ மூலம் கதையின் நாயகியான நடிகை கீதா கைலாசம்
கிராமத்தில் வசிக்கும் வயதான பெண்மணி அங்கம்மாளின் ஆடை சுதந்திரத்தை மையமாக வைத்து எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித் துணி’ என்ற சிறுகதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கம்மாள்’. ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் வழங்க அதனுடன் இணைந்து என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் ஃப்ரோ மூவி ஸ்டேஷன் சார்பில் கார்த்திகேயன் எஸ். ஃப்ரோஸ் ரஹீம், அஞ்சாய் சாமுவேல் தயாரித்துள்ள இப்படத்தை விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் அங்கம்மாள் கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக கீதா கைலாசம் நடித்திருக்கிறார். பல படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் கீதா கைலாசம், இந்த படத்தில் அம்மாவாக நடித்திருந்தாலும், கதையின் நாயகியாக மாறுபட்ட வேடத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.
வரும் நவம்பர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படம் குறித்து இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ”எனக்கு தாய்மொழி மலையாளம் ஆக இருந்தாலும் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கதைகள், சிறுகதைகளை நான் மலையாளத்தில் படித்திருக்கிறேன். அதில் கோடித் துணி என்ற சிறுகதை மனதில் பதிய அதைத் திரைப்படமாக்கி, கிராமத்து கலாச்சாரத்தை திரைப்படம் மூலமாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினேன்.
இதற்கேற்ற களத்தை தேர்வு செய்ய பல ஊர்களிலும் அலைந்து கடைசியாக சத்தியமங்கலம், களக்காடு பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தினால் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்தோம். அதற்கு முன் அந்த ஊர் கலாச்சாரத்தை புரிந்து கொள்ள நானும் பட குழுவை சேர்ந்த சிலரும் நேராக அந்த கிராமத்திற்கு சென்று சுமார் நான்கு மாதம் வீடு எடுத்து தங்கி அங்குள்ள மக்களுடன் பழகி அவர்களது வாழ்வியலை அறிந்து கொண்டு அதன் பின் படமாக்கி இருக்கிறோம்.
’நட்சத்திரம் நகர்கிறது’ மற்றும் ’நவரசா’ சீரீசில் நடிப்பில் என்னை கவர்ந்த கீதா கைலாசம் இந்த அங்கம்மாள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்து அவரிடம் இப்படத்தில் நடிக்க கேட்டோம். அவர் கதை முழுவதையும், தனது கதாபாத்திரத்தையும் கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால், கதாபாத்திரப்படி அவர் ரவிக்கை அணியாமல் நடிக்க வேண்டும், சுருட்டு, பீடி புகைக்க வேண்டும் , என்ற விஷயங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டோம். சிறிய யோசனைக்கு பிறகு முழுவதுமாக அந்த பாத்திரத்தில் ஈடுபாடு காட்ட தொடங்கி விட்டார்.
அவரும் நாங்கள் தங்கி இருந்த கிராமப் பகுதிகளுக்கு இரண்டு மாதம் முன்பே வந்து மக்களிடம் சகஜமாக பழகி அவர்களின் பழக்கவழக்கங்கள், பேச்சு பாவனை போன்றவற்றை புரிந்து கொண்டார். குறிப்பாக இப்படித்தான் இந்த பாத்திரம் இருக்க வேண்டும் என்று நான் முடிவு செய்த சுந்தரி என்ற ஒரு மூதாட்டி உடன் நன்கு பழகி கதாபாத்திரத்தை செம்மைப்படுத்தி இருக்கிறார். அவருடன் படத்தில் சரண், பரணி, முல்லையரசி, தென்றல் ரகுநாதன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
சினிமாவுக்கு ஏற்ற சின்ன சின்ன மாற்றங்களுடன் இது சிறுகதை படிக்கும் உணர்வை தர வேண்டும் என்பதால் படத்தின் ஒலிப்பதியை லைவாக செய்திருக்கிறோம். அங்கம்மாள் கதாபாத்திரம் ஒரு சுதந்திரமான பாத்திரமாக படைக்கப்பட்டிருக்கிறது. தான் என்ன நினைக்கிறேனோ அது நடக்க வேண்டும் என்று எண்ணுபவர். அவருக்கும் அவரது மகனுக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் உள்ள பந்தத்தை இப்படம் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும்.
இந்தப்படம் ஏற்கனவே ஃபோக்கஸ் சவுத் ஏசியா உள்பட 3 சர்வதேச விருதுகளை வென்றிருக்கிறது. பெண்கள் மட்டும் இல்லாமல் ஆண்களும் இந்த படத்தை ரசித்து பாராட்டினார்கள்.” என்றார்.
ரவிக்கை இல்லாமல் நடித்தது மற்றும் புகைப்பிடித்து நடித்த அனுபவம் உள்ளிட்ட இப்படம் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கலை பகிர்ந்து கொண்ட நடிகை கீதா கைலாசம், “சினிமாவில் மற்ற நடிகைகள் முப்பது வருடங்களுக்கு மேல் நடித்துக் கொண்டிருக்க நானோ நாற்பது வயதுக்கு பிறகுதான் நடிக்கவே வந்திருக்கிறேன். திரைவுலகில் பலரும் 20 வருடம், 30 வருடங்களுக்கு மேல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் பல ஆண்டுகள் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
அப்படித்தான் அங்கம்மாள் கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டபோது எனக்குப் பிடித்திருந்தது நடிக்க ஒப்புக்கொண்டேன். ரவிக்கை அணியக்கூடாது என்றதற்கு முதலில் சற்று தயக்கமாக இருந்தாலும் பின்னர் எப்படி நடிக்கலாம் என்று எனக்கு சொல்லிக் கொடுத்ததால் தர்ம சங்கடம் எதுவுமில்லாமல் நடித்தேன். அதேபோல் சுருட்டு பிடிக்க வேண்டும் என்று கூறியதால் அதற்காக நான் வீட்டு பால்கனையில் அமர்ந்து பீடி மற்றும் சுருட்டு பிடித்து பயிற்சி எடுத்தேன். வீட்டில் இருந்தவர்கள் கூட “அதற்கு நீ அடிமை ஆகிவிடாதே.!” என்று கிண்டல் செய்தார்கள். சுருட்டு பிடிப்பதை விட பீடி பிடிப்பது எளிதாக இருந்தது.
சுந்தரி என்ற பெண்மணியுடன் என்னை இயக்குனர் பழக வைத்து அவரைப் போலவே நடிக்கச் சொன்னார். ஆனால் சுந்தரி போல்டு லேடி. காலை நாலு மணிக்கு எழுந்து வயலுக்கு சென்று விடுவார், பின்னர் இரவு 11 மணிக்குதான் உறங்கச் செல்வார். அவ்வளவு எனர்ஜி அவரிடம் இருந்தது.
அவரது அளவுக்கு என்னால் ஈடு கொடுத்து நடிக்க முடியாது என்றாலும் அவரது சாயல் வரும் அளவுக்கு நான் நடித்திருக்கிறேன். 20 வயதில் நான் ஓட்டிய டிவிஎஸ் ஃபிப்ட்டியை இந்த படத்துக்கு இன்னொரு முறை ஓட்டியது சந்தோஷமாக இருக்கிறது.”
அஞ்சாய் சாமுவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு முகமத் மக்பூப் மன்சூர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இவர் மலையாள திரையுலகில் பிரபல பின்னணி பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது.

