May 07, 2020 04:13 PM

ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் ‘திட்டம் இரண்டு’!

ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் ‘திட்டம் இரண்டு’!

’கனா’ வெற்றியை தொடர்ந்து, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், கதையின் நாயகியாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘திட்டம் இரண்டு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

சிக்ஸர் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக வினோத் குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை விக்னேஷ் கார்த்திக் இயக்குகிறார். ‘யுவர்ஸ் சேம்ஃபுல்லி’ என்ற குறும்படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த விக்னேஷ் கார்த்திக், இப்படம் மூலம் பெரிய திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார். 

 

மக்களுக்கு மிகவும் பிடித்த ஜானரான மிஸ்ட்ரி திரில்லர் கதையைச் சார்ந்த இப்படம், எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டதாக உருவாக இருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கிறார். எந்தக் கேரக்டரில் நடித்தாலும் அந்தக் கேரக்டருக்கான நியாயத்தைத் திறம்பட செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷ் லீட் ரோலில் நடிக்கும் மூன்றாவது படம் இது. 

 

Thittam Irandu Movie Poster

 

‘மான்ஸ்டர்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘மாஃபியா’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைக்கிறார். ‘குற்றம் கடிதல்’, ‘மகளிர் மட்டும்’, ‘ஹவுஸ் ஓனர்’ ஆகிய படங்களுக்கு படத்தொகுப்பு செய்த சி.எஸ்.பிரேம் படத்தொகுப்பு செய்கிறார். ‘மரகத நாணயம்’ மற்றும் ‘சிக்ஸர்’ படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றிய ராகுல் இப்படத்தின் கலைத்துறையை கவனிக்கிறார்.

 

இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில், அடுத்தக் கட்டப் படபிடிப்பு கொரோனா ஊரடங்கு முடிந்ததும் துவங்க உள்ளது.