‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது!
பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் திரைப்படம் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’. படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இது படக்குழுவினருக்கு மிக முக்கிய தருணமாக மாறியிருக்கிறது.
படத்தின் நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் இயக்குநர் வெற்றிமாறனை நேரில் சந்தித்து, படத்தின் முதல் பார்வை போஸ்டரையும், படத்திலிருந்து சில காட்சிகளையும் அவருக்கு காண்பித்தனர். காட்சிகளை பார்த்து படக்குழுவின் உழைப்பை பாராட்டினார். மேலும், இப்படம் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார். முதல் பார்வை போஸ்டர் வெளியிட்டு படத்திற்கு ஆதரவு தெரிவித்த வெற்றிமாறனுக்கு படக்குழுவினர் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தை, சமூக கதைகள் உருவாக்குவதில் கைதேர்ந்தவரான இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கியுள்ளார். இப்படத்தை 2 எம் சினிமாஸ் சார்பில் கே.வி.சபரீஷ் தயாரிக்க, டி பிக்சர்ஸ் சார்பில் தயாள் பத்மநாபன் இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார்.
இப்படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிசி ஆண்டனி, சரவணன், லொள்ளு சபா மாறன், லோகா கண்ணன், நர்மதா, கவிதா பாரதி, கனியா பாரதி, அருவி மதன், சுபா. வீரபாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரியாரியவாதி சுப வீரபாண்டியன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது, கதைக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது.
கவிதா பாரதி மற்றும் தயாள் பத்மநாபன் இணைந்து திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் இப்படத்திற்கு எம்.வி.பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வி.பூபதி படத்தொகுப்பு செய்ய, தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார். கலை இயக்குநராக அன்பு பணியாற்றியுள்ளார்.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ சமூக அக்கறை கொண்ட திரைப்படமாக உருவாகி வருகிறது.

