Dec 09, 2019 07:14 AM

’கேப்மாரி’ விளம்பர புரோக்கர்களின் பகல் கொள்ளை!

’கேப்மாரி’ விளம்பர புரோக்கர்களின் பகல் கொள்ளை!

தமிழ் சினிமா தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்திருந்தாலும், படத்தை விளம்பரம் செய்வதில் சற்று பின்னோக்கி இருப்பதோடு, படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களில் சிலர், சரியான விளம்பரம் குறித்து போதுமான தெளிவு இல்லாமல் இருக்கிறார்கள். இதனால், நல்லப் படங்கள் கூட ஓடாமல் நஷ்ட்டத்தை சந்திக்கிறது.

 

ஒரு காலத்தில், தினசரி, வார இதழ்கள், மாத இதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளை தான் திரைப்பட விளம்பரத்திற்கு பயன்படுத்தி வந்தார்கள். ஆனால், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, குறிப்பாக இண்டர்நெட்டின் வளர்ச்சியும், இணையதளங்களின் எழுச்சியும் திரைப்படத்துறைக்கு பெரிதும் உதவியது. இதனால், வெளிநாடுகளில் இருப்பவர்கள் தமிழ்ப் படங்கள் குறித்து உடனுக்கு உடன் தெரிந்துக் கொள்வதோடு, அப்படங்கள் எப்போது வெளிநாடுகளில் வெளியாகிறது, எந்த பகுதி தியேட்டரில் வெளியாகிறது, என்ற தகவலோடு அப்படங்களில் உள்ள நிறை, குறைகளை அறிந்துக் கொள்ள உதவியாகவும் இருந்தது.

 

மேலும், ஐடி ஊழியர்கள் படம் பார்க்க வேண்டும் என்றால், இணையதளங்களில் வெளியிடப்படும் சினிமா செய்திகளால், படங்கள் குறித்து அறிந்துக்கொண்டார்கள். இப்படி பல வகையில் சினிமாத் துறைக்கு, சினிமா இணையதள ஊடகங்கள் பக்கபலமாக இருந்த நிலையில், சோசியல் மீடியா என்று சொல்லக்கூடிய ட்விட்டர், யூடியூப் போன்றவற்றில் சிலர் பொழுதுபோக்கிற்காக, திரைப்படங்களை விமர்சனம் செய்கிறேன், என்ற பெயரில் தரம் தாழ்த்தி பேச தொடங்கினார்கள்.

 

ஒரு திரைப்படம் ஆரம்பிக்கும் போதே, “மொக்கை, யாரும் இந்த படத்த பார்க்காதீங்க” என்று பதிவிட்டு விடுவார்கள். இப்படி சினிமா துறைக்கு எதிராக செயல்பட்ட இந்த ட்விட்டர் மற்றும் யூடியூப் புரோமோட்டர்களை தற்போது தமிழ் சினிமா தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது ஒரு பக்கம் இருக்க, இவர்களை காட்டி ஒரு ’கேப்மாரி’ கும்பல் பகல் கொள்ளையடித்து வருகிறது.

 

ஒரு திரைப்படத்திற்கு என்று ஒரு பி.ஆர்.ஓ இருப்பார். அவர் அப்படங்களின் விளம்பரம் குறித்து பார்த்துக் கொள்வார்கள். ஆனால், அவர்களையும் தாண்டி, தயாரிப்பாளர்களிடம், சில பொய்யான தகவல்களைக் காட்டி, இந்தியாவில் டிரெண்டிங் செய்கிறேன், உலக அளவில் டிரெண்டிங் செய்கிறேன், என்று கூறி பல லட்சங்களை விளம்பர தொகையாக பெறும் இந்த கேப்மாரி கும்பல், தங்களிடம் இருக்கும், சோசியல் மீடியா பக்கங்களின் பட்டியலை காட்டி, அந்த லட்சங்களில் சில ஆயிரங்களை, அவர்களுக்கு கொடுத்துவிட்டு, பல லட்சங்களை சுருட்டி விடுகிறார்கள்.

 

தமிழ் சினிமாவில் இத்தகைய ‘கேப்மாரி’ கொள்ளை கும்பல் பல இருக்க, அதில் ஒருவராக பெண் விளம்பர ஏஜேண்ட் ஒருவர் தயாரிப்பாளரிடம் பல லட்சங்களைப் பெற்று மோசடி செய்தார். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர் காவல் துறையில் புகாரும் அளித்தார்.

 

மேலும், CTC என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருபவர்கள், ‘பலூன்’ திரைப்பட தயாரிப்பாளரிடம் ரூ.12 லட்சம் பேரம் பேசி, அதில் ரூ.6 லட்சத்தை அட்வான்ஸாக பெற்றுக் கொண்டதோடு, அந்த 6 லட்ச ரூபாயை அப்படியே ஏப்பம் விட்ட கதையும் நடந்திருக்கிறது. இந்த தகவலை ‘பலூன்’ படக்குழுவே மூத்த பத்திரிகையாளர்களிடம் கூறி வருத்தப்பட்டார்கள்.

 

இவர்கள் மீது இதுபோல பல புகார்கள் எழுந்தாலும், கேப்மாரிகளின் கொள்ளை மட்டும் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம் சில தயாரிப்பாளர்களின் அறியாமை தான். டிரெண்டிங் என்ற ஒரு வார்த்தையை சொல்லியே தயாரிப்பாளர்களை ஏமாற்றி வரும் இந்த கேப்மாரிகளால், சில நல்ல படங்களும் ஓடாமல் போகிறது. சமீபத்தில் வெளியான சுந்தர்.சி-யின் ‘இருட்டு’ படமும் அப்படி ஓரு நிலையில் தான் இருக்கிறது.

 

அதே சமயம், சில தவறான படங்களை, மக்களிடம் சேர்த்து வெற்றியடைய செய்துவிடலாம், என்று தயாரிப்பாளர்களிடம் கூறும் இந்த விளம்பர புரோக்கர்கள், ஆபாசமான படங்களின் தகவல்களை ட்விட்டர் வெளியிட்டு விளம்பரம் படுத்தி வருகிறார்கள்.

 

அந்த வகையில், நடிகர் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்திருக்கும் ஆபாசமான படமான ‘கேப்மாரி’-க்கும் இந்த கேப்மாரிகள் தான் விளம்பரம் செய்கிறார்கள். ஆபாசமான காட்சிகள், ஆபாசமான வசனங்கள் நிறைந்த இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இந்த படத்தை பார்க்க கூடாது. ஆனால், இந்த படத்தை ஏதோ ஒரு காதல் காவியம் போல, எஸ்.ஏ.சந்திரசேகர் பேசி வர, கேப்மாரிகளும் அப்படியே அதை விளம்பரமும் செய்கிறார்கள்.

 

அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடிகர் விஜய், அப்பாவின் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? என்று தான் தெரியவில்லை.

 

நாட்டில் கற்பழிப்பு, கொலை போன்ற சம்பவங்களுக்கு திரைப்படங்களும் ஒரு காரணம், என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகரின் இந்த ‘கேப்மாரி’ இளைஞர்களுக்கு தவறான வழியை காட்டும் ஒரு திரைப்படம் என்பது படத்தின் டிரைலரே சொல்லிவிடுகிறது.

 

மகனை அரசியல் அரியணையில் உட்கார வைக்க ஆசைப்படும், எஸ்.ஏ.சந்திரசேகர், சமூகத்தைப் பற்றியும் கொஞ்சம் சிந்தித்திருந்தால் இப்படி ஒரு படத்தை இயக்கியிருக்க மாட்டார். 

 

ஆக, எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய படம் மட்டும் ‘கேப்மாரி’ அல்ல, என்பது தெளிவாக தெரிகிறது.