Dec 02, 2019 11:11 AM

’சாம்பியன்’ ஹீரோ விஷ்வா தனுஷ் இடத்தை பிடிப்பார்! - சுசீந்திரன் நம்பிக்கை

’சாம்பியன்’ ஹீரோ விஷ்வா தனுஷ் இடத்தை பிடிப்பார்! - சுசீந்திரன் நம்பிக்கை

சுசீந்திரன் இயக்கத்தில் அறிமுக ஹீரோ விஷ்வா நடித்திருக்கும் படம் ‘சாம்பியன்’. கலஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் கால்பந்தாட்டத்தை மையப்படுத்திய படமாகும். மிருணாளினி, சௌமிகா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மனோஜ், நரேன், ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

 

நடுத்தர மக்களின் வாழ்வியலோடு இணைந்த, வட சென்னை மக்களின் கால்பந்து விளையாட்டை அதன் அத்தனை இயல்புகளோடும் மக்களின் வாழ்வியலை கலந்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் சுசீந்திரன். வெண்ணிலா கபடி குழு படத்தில் கபடியை நம் மனதில் கொண்டு சேர்த்தவர் இப்படத்தில் புதுமுகங்களுடன் கால்பந்தை தொட்டுள்ளார். 

 

அரோல் கொரோலி இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சுசீந்திரன், “இந்தப்படத்தில் பாடகர் கார்த்தியை அறிமுகப்படுத்தியது மொத்த படக்குழுவுக்கும் பெருமை. அவர் தான் உண்மையான  சாம்பியன். அரோல் கொரோலி ரொம்ப அருமையான பின்ணணி இசை தந்திருக்கார். நரேன் சார் அவர் கிட்ட 10 நாள்னு சொல்லி நிறைய நாள் வேல வாங்கிட்டேன். அடுத்த படத்தில் சரி பண்ணிடுறேன். மனோஜ்க்கு இந்தப்படம் ஒரு கம்பேக்கா இருக்கும், நான் அறிமுகப்படுத்தினதிலேயே சிறந்த நடிகரா விஷ்வா வருவார். கடுமையான உழைப்பாளி, தனுஷ் மாதிரினு அவர பத்தி சொல்லிருக்கேன்.  அவர் மாதிரி கண்டிப்பா பெரிய இடத்தை அடைவார். இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. பாரதி ராஜா சாருக்கு நன்றி.” என்றார்.

 

நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் பேசுகையில், “டாகடர் R களஞ்சியம் என்னோட அப்பா, அவரின் நினைவாக அவரோட பேர்ல தான்  இந்த தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சிருக்கோம். அவரோட பேரனை இந்தப்படத்தில் அறிமுகப்படுத்தினதுக்கு சுசீந்தரன் சாருக்கு நன்றி.  Studio 9 பற்றி உங்களுக்கு தெரியும். ரொம்ப தேர்ந்தெடுத்த படங்கள் மட்டும் தான் எடுப்போம். அதே மாதிரி இந்த நிறுவனமும் வளரனும். விஷ்வாவை சின்ன வயசுலருந்து தெரியும். ஒரு படத்துக்கு சரியான அறிமுக நடிகரா அவன் உழைப்பை கொடுத்திருக்கான். அவன் இந்தப்படத்துக்கு 1 1/2 வருஷம் டிரெய்னிங் எடுத்திருக்கான். அவன் ஒரு ஸ்குவாஷ் பிளேயர். லாஸ் ஏஞ்சல்ஸ்ல நடிப்பு பத்தி படிச்சான். எல்லாவைகயிலும் தன்னை தயார்படுத்திகிட்டு நடிச்சிருக்கான். சுசீந்திரன் சார் ஸ்போர்ட்ஸ் படங்கள் எடுப்பதில் வல்லவர். அவர் சராசரியாலாம் படம் எடுக்க மாட்டார்னு எல்லோருக்கும் தெரியும். அப்புறம் இந்தப்படத்தில் நடிகர்கள் எல்லோரும் மிகத்திறமையானவர்கள். மிருணாளினி ஹீரோயினா நடிச்சிருக்காங்க. டிசம்பர் 13 இந்தப்படத்த திரைக்கு கொண்டுவர்றோம் எல்லோரும் ஆதரவு தாங்க நன்றி.” என்றார்.

 

இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், “நானும் டி ராஜேந்தர் மாதிரி பேசாம வந்துடலாம்னு வந்தேன், அவனே பேசிட்டான். அப்புறம் நமக்கு என்ன பேசலாம். அவன் எமோஷனல் மேன். அவனை எனக்கு பிடிக்கும். என்னையும் அவனுக்கு பிடிக்கும். சுசீந்தரன் எனக்கு பிடித்த கலைஞன். பாண்டிய நாடு படத்தில் முதலில் நான் நடிக்க ஒத்துக்கல, இப்ப போய் ஏன் நடிச்சுகிட்டுனு நினைச்சேன், ஆனா அது எனக்கு ஒரு கம்பேக்கா இருந்தது. சுசீந்திரன் படம் எல்லாமே  நல்லாத்தான் இருக்கும். அவன் படம் பார்த்து படம் எப்படி இருக்கும்னு சொல்ல தேவையில்ல. அவன  பார்த்தே சொல்லிடலாம். அவன் படம் இது, அவனுக்கு இன்னொரு மகுடமாக இருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

டி.ராஜேந்தர் பேசுகையில், “சமீபகாலமாக நான் எந்த ஒரு ஒலி நாடா விழாவிலும் கலந்து கொள்ளவில்லை. ஒதுங்கியிருந்தேன். ஒதுங்கினால் ஒய்வெடுப்பதற்கு, பதுங்கினால் பாய்வதற்கு. சுரேஷ் என்னை அன்பால் அழைத்தார் அதனால் வந்தேன். ஒரு படத்திற்கு அழைத்தால் அந்தப்படத்தை பாராட்ட வேண்டும். எனக்கு பந்தாட்டம் பிடிக்கும். தமிழ் நாட்டில் தமிழில் தான் பேர் வைக்க வேண்டும் என்று அடமாக இருந்தவர் பாரதிராஜா. அவரைப்போல் நானும் இருந்தேன். தமிழில் பேர் வைக்க வேண்டும் என்று நாங்கள் பட்ட பாடு போதும். இனி வரும் தலைமுறை பிழைத்து கொள்ளட்டும். விஷ்வா விஷ் பண்ண வாவென அழைத்தார், அதனால் வாழ்த்த வந்தேன். ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு அடையாளாம் இருக்கு. சுசீந்திரனுக்கும் ஒரு அடையாளம் இருக்கு வெண்ணிலா கபடி குழு. அந்தப்படம் போல் இந்தப்படமும் ஜெயிக்கும்.

” என்றார்.

 

அமைச்சர் விஜய பாஸ்கர் பேசுகையில், “வெளியே மழை, உள்ளே கலை. இந்த கலை விழாவிற்கு அழைத்ததற்கு நண்பர் R K சுரேஷ் அவர்களுக்கு நன்றி. எனக்கு விருப்பமானவர்கள் இந்த மேடையில் இருக்கிறார்கள். பாரதிராஜா, T ராஜேந்தர் படங்கள் எனக்கு பிடிக்கும். இவர்கள் இருக்கும் மேடையில் நானும் கலந்து கொண்டது பெருமை. சுசீந்திரன் தரமான படங்கள் தரும் கலைஞர் இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார்.

 

நாயகன் விஷ்வா பேசுகையில், “இந்த மேடை நெருக்கமானது. எனக்காக எல்லாரும் வந்திருக்கீங்க அதுக்கு நன்றி. என்னோட அப்பாதான் எல்லாத்துக்கும் காரணம். இந்தப்படமே ஒரு அப்பா மகன் கதை தான், அது மாதிரி நிஜ வாழ்விலும் என்ன சின்ன வயசுலருந்து எழுப்பி, குளிப்பாட்டி, ஸ்கூல் கூட்டிப்போய் இப்படி ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து செஞ்சவர் அவர் தான். அப்புறம் சுசி சார் அவர் தான் இந்தப்படம் உருவானதற்கு  முக்கியமான காரணம். சார் உங்களுக்கு நன்றி. இதுக்கு மேல என்ன சொல்லனும்னு தெரியல நன்றி சார். ரொம்ப எமோஷலான நேரம் என்ன வாழ்த்தின இந்த இடத்துக்கு கொண்டு வந்த அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

ஸ்டுடியோ 9 சார்பில் ஆர்.கே.சுரேஷ் வெளியிடும் இப்படம் டிசம்பர் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.